Rajinikanth: ரஜினியின் அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி பாடல்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - ரஜினிகாந்த்

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன.

  • Share this:
    தமிழர்களின் மனதோடு கலந்துவிட்ட காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவர் பாடிய பாடல் ஒன்று ரஜினியின் அண்ணாத்த படத்தில் இடம்பெறுகிறது.

    ரஜினி நடிப்பில் அண்ணாத்த படத்தை சிவா இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இரு தினங்கள் முன்பு தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் ரஜினி. அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கூட்டுக்குடும்ப கதையாக இது தயாராகியுள்ளது. இசை டி.இமான்.

    சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒரு பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினி படங்களில் அவரது ஓபனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடினால் அப்படம் ஹிட் என்றொரு சென்டிமெண்ட் உண்டு. பாட்ஷா படத்தில் ஆட்டோக்காரன், அண்ணாமலையில் வந்தேண்டா பால்காரன், முத்துவில் ஒருவன் ஒருவன் முதலாளி... என சொல்லிக் கொண்டே போகலாம். தர்பார் படத்தில் வரும் நான்தாண்டா இனிமேல, பாடலும் எஸ்.பி.பி. பாடியதே.

    அண்ணாத்த படத்தில் எஸ்.பி.பி.யுடன் இமான், சித் ஸ்ரீராம் உள்ளிட்டவர்களும் பாடியுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 அப்படம் திரைக்கு வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: