#GetWellSoonSPB | தேசத்தின் பன்மொழிகளையும் ஒருங்கிணைக்கும் எஸ்.பி.பி-யின் குரல்: நலமுடன் மீண்டுவர ரசிகர்கள் பிரார்த்தனை..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன் வசீகர குரலால் பல உள்ளங்களை வென்ற எஸ்.பி.பி குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு இது..

#GetWellSoonSPB | தேசத்தின் பன்மொழிகளையும் ஒருங்கிணைக்கும் எஸ்.பி.பி-யின் குரல்: நலமுடன் மீண்டுவர ரசிகர்கள் பிரார்த்தனை..
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
  • Share this:
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்பி பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று.

40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தியவர் எஸ்பிபி.

ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிடைத்த முதல் வாய்ப்பில் இருந்து இன்றுவரை 54 ஆண்டுகளாக எல்லா மொழிகளிலும் சரியான உச்சரிப்புடன் பாடும் பாடகர் என்ற சிறப்பைப் பெற்றவர்.


எம்.எஸ் விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் கோலோச்சி வந்த காலகட்டத்தில் அறிமுகமான எஸ்.பி பாலசுப்ரமணியம் இளையராஜா இசையமைப்பாளராக வலம் வந்த நேரத்தில் உச்சத்தில் இருந்து வந்தார். பின்னர் ஏ ஆர் ரஹ்மான் தலைமுறையிலும் தன்னை தக்க வைத்துக்கொண்டு அனிருத் வரை பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்தவர்.

பாடகராக தமிழ் சினிமாவில் உச்சத்தில் வலம் வந்தபோது நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் புதிய முயற்சிகளை முயன்று பார்ப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டியவர். கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.
மேலும் படிக்க...#GetWellSoonSPB | பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது: எக்மோ என்றால் என்ன?

இதுபோக பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகள் எஸ்.பி.பி-யின் திரை பயணத்தை அலங்கரிக்கின்றன. அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக தமிழ்சினிமாவை ஆக்கிரமித்துள்ள எஸ்பிபியின் காந்தக் குரல் மீண்டும் நலமுடன் எழுந்து வந்து அதே வசீகரத்துடன் ஒலிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகவும் உள்ளது.
First published: August 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading