Home /News /entertainment /

50 மற்றும் 60களின் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் ஒரு பார்வை

50 மற்றும் 60களின் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் ஒரு பார்வை

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர்

ஐம்பது மற்றும் அறுபதுகளில் வெகுமக்களின் பொழுதுப்போக்காக நாடகம் மற்றும் சினிமா இருந்தன. எளிய மக்ளின் கலையாக சினிமா விஸ்வரூபம் எடுத்து, நாடகம் குன்றத் தொடங்கிய காலகட்டம். திரைநட்சத்திரங்களை கடவுளுக்கு நிகராக மக்கள் கொண்டாடினர். அப்போது தென்னிந்திய சினிமாவில் 7 சூப்பர் ஸ்டார்கள் கோலோச்சி வந்தனர். அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் தென்னிந்திய சினிமா படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி சினிமர்கள் சென்னையை மையப்படுத்தி இயங்கின. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தனித்தனி மாநிலங்கள் அமைந்த பிறகு மலையாள, தெலுங்கு, கன்னட சினிமாக்கள் தத்தமது மாநிலங்களில் தங்களுக்கான ஓர் இடத்தை கண்டடைந்தன. தங்கள் மொழிப்பெயரில் சங்கங்கள் அமைத்துக் கொண்டன.

ஒருகாலத்தில் நான்கு மொழிகளை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமாவின் மையமாக விளங்கியதால் தமிழ்நாட்டில் இன்றளவும் நடிகர் சங்கமானது தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. பிறமொழிகளுக்கு அந்தந்த மாநிலங்களில் சங்கங்கள் அமைந்த பிறகு தென்னிந்திய என்ற அடைமொழி தேவையா என்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சங்கங்கள் தங்கள் பெயர்களில் இருந்த தென்னிந்திய என்பதை எடுத்துவிட்டு தமிழ்நாடு என்று மாற்றிக் கொண்டன. நடிகர் சங்கம் மட்டும் இன்னும் தென்னிந்திய அடைமொழியுடன் தொடர்கிறது.

ஐம்பது மற்றும் அறுபதுகளில் வெகுமக்களின் பொழுதுப்போக்காக நாடகம் மற்றும் சினிமா இருந்தன. எளிய மக்ளின் கலையாக சினிமா விஸ்வரூபம் எடுத்து, நாடகம் குன்றத் தொடங்கிய காலகட்டம். திரைநட்சத்திரங்களை கடவுளுக்கு நிகராக மக்கள் கொண்டாடினர். அப்போது தென்னிந்திய சினிமாவில் 7 சூப்பர் ஸ்டார்கள் கோலோச்சி வந்தனர். அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.



1. சிவாஜி கணேசன் (தமிழ்)

1952 இல் சிவாஜி கணேசன் பராசக்தியில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர்ஹிட்டாக அமைந்து சிவாஜியை கடைகோடி ரசிகன்வரை கொண்டு சேர்த்தது. அதன் பிறகு இரண்டாவது நாயகனாகவும், எதிர்நாயகனாகவும் சில படங்களில் நடித்தார். 1954 இல் வெளியான மனோகரா அவரை நாயகனாக நிலைநிறுத்தியது. அதே வருடம் வெளியான தூக்குத் தூக்கி மிகப்பெரிய வெற்றிப் படமாகி அவரை தமிழின் முன்னணி நடிகராக்கியது. ஐம்பதுகளின் பிற்பகுதியிலிருந்து எழுபதுகளின் இறுதிவரை தமிழின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக சிவாஜி திகழ்ந்தார்.



2. எம்.ஜி.ராமச்சந்திரன் (தமிழ்)

1936 இல் சதிலீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் நடிகராக அறிமுகமானாலும், 1950 இல் வெளியான மந்திரி குமாரிதான் அவரை அடையாளம் காட்டியது. அதற்கடுத்த வருடம் வெளியான மர்மயோகியும், 1952 இல் வெளியான என் தங்கையும், 1954 இல் வெளியான மலைக்கள்ளனும் வெற்றிப் படங்களாகி எம்.ஜி.ராமச்சந்திரனை பிரபலப்படுத்தியது. 1956 இல் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும், மதுரை வீரன், தாய்க்குப்பின் தாரம் படங்கள் அவரை தமிழின் வசூல் சக்ரவர்த்தியாக மாற்றியது. அதன் பிறகு நடிப்பிலிருந்து ஓய்வுபெறும்வரை தமிழ் சினிமாவை தீர்மானிக்கும் சக்திகளில் ஒருவராக திகழ்ந்தார்.



3. சத்யன் (மலையாளம்)

சத்யனின் முழுப்பெயர் செறுவிலக்கத்து வீட்டில் சத்யநேசன் நாடார். நாற்பதுகளில் பிரிட்டீஸ் இந்தியன் ஆர்மியில் அலுவலராக சத்யன் பணிபுரிந்தார். 1952 இல் சிவாஜி சினிமாவில் அறிமுகமான அதே வருடம் ஆத்மசகி என்ற படத்தின் மூலம் சினிமாவில் சத்யன் அறிமுகமானார். 1954 இல் வெளிவந்த நீலக்குயில் திரைப்படம் சத்யனை தனித்துவமான நடிகராக காட்டியது. செம்மீன், காயங்குளம் கொச்சுண்ணி, கரகாணா கடல், பகல்கினாவு போன்ற படங்கள் சத்யனை பிரேம் நசீருக்கு இணையான சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. 1971 இல் வெளியான அனுபவங்கள் பாலிச்சாக்கில் திரைப்படம் அவரது கலை சாதனைகளில் ஒன்று. அந்த வருடம் தனது 58 வது வயதில் சத்யன் சென்னையில் மரணமடைந்தார். 1954 இல் இருந்து 1971 இறக்கும்வரை மலையாள சினிமாவின் இரு சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக சத்யன் திகழ்ந்தார்.



4. பிரேம் நசீர் (மலையாளம்)

மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகர் பிரேம் நசீர் இரு அசைக்க முடியாத கின்னஸ் சாதனைகள் புரிந்துள்ளார். 524 திரைப்படங்களில் நாயகனாக நடித்தது ஒரு சாதனை. நடிகை ஷீலாவுடன் மட்டும் ஜோடியாக 110 திரைப்படங்களில் நடித்தது இன்னொன்று. பிரேம் நசீர் 1951 இல் தியாகசீமா என்ற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அதனால் 1952 இல் வெளியான மருமகள் திரைப்படம் அவரது முதல் படமாக கருதப்படுகிறது. சிவாஜி, சத்யன் போன்று 1952 இல்தான் பிரேம் நசீரின் திரைப்பிரவேசமும் நிகழ்ந்தது. அதே வருடம் வெளியான விசப்பின்டெ விளி திரைப்படம் பிரேம் நசீரை சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. ஐம்பதுகளின் பிற்பகுதிகளிலிருந்து எண்பதுகள்வரை பிரேம் நசீரின் கொடி மலையாளத்தில் உயரப்பறந்தது.



5. என்.டி.ராமராவ் (தெலுங்கு)

சினிமா செல்வாக்கால் அரசியல் கட்சி ஆரம்பித்து, குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தவர் என்.டி.ராமாராவ். 1949 இல் மனதேசம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், 1950 இல் வெளியான பல்லிட்டூரி பில்லா படத்தில் நாயகனானார். 1951 இல் வெளியான பாதாள பைரவி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டு பம்பர்ஹிட்டாக்கி என்டி.ராமராவை முன்னணி நடிகராக்கியது. 1957 இல் மாயாபஜார் படத்தில் அவர் போட்ட கிருஷ்ணர் வேடம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அவரை கிருஷ்ணராகவே மக்கள் நம்பினர். அவரை ஆந்திராவின் முதலமைச்சராக்கும் அளவுக்கு அந்தக் கவர்ச்சி மிக வலுவானதாக இருந்தது.



6. நாகேஸ்வரராவ் (தெலுங்கு)

என்.டி.ராமராவ் சினிமாவில் நுழைந்த அதே காலகட்டத்தில் திரைத்துறைக்கு வந்து ரசிகர்களால் நடிப்பு சாம்ராட் என்று போற்றப்பட்டவர் அக்னியேனி நாகேஸ்வரராவ். இன்றைய தலைமுறைக்கு சொல்வதென்றால், நாகார்ஜுனுடைய தந்தை. நாக சைதன்யாவின் தாத்தா, இவர் நடித்த லைலா மஜ்னு (1949), தேவதாஸு (1953), அனார்கலி ( 1955), மாயாபஜார் (1957) போன்ற படங்கள் இவரை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது. ராமர், கிருஷ்ணர் வேடங்களில் நடித்தாலும் இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். என்.டி.ராமராவுக்கு இணையான ரசிகர்களை ஆந்திராவில் கொண்டிருந்தார்.



7. ராஜ்குமார் (கன்னடம்)

ராஜ்குமார் கன்னடர்களுக்கு கடவுளுக்கு ஒப்பானவர். பாரத ரத்னா தவிர்த்து, தாதா சாகிப் பால்கே, பத்மபூஷண் என அனைத்து உயஜ்ய விருதுகளையும் பெற்றுள்ளார். மற்ற சூப்பர் ஸ்டார்களுக்கு இல்லாத இவரது தனித்திறமை, பாடுவது. சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1942 இல் பக்தபிரகலாதா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு சுமார் 205 திரைப்படங்களில் நடித்து கன்னடர்களின் எவர்கிரீன் நாயகனானார். இவரது 35 திரைப்படங்கள் 9 மொழிகளில் 58 முறை ரீமேக் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு மொழியிலேயே பலமுறை ரீமேக் செய்யப்பட்டுள்ளன. ஒரு நடிகரின் 50 க்கும் மேற்பட்ட படங்கள் பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட பெருமை இவரையே சாரும்.

Also read... Poikkal Kuthirai Movie Review: எப்படி இருக்கிறது பொய்க்கால் குதிரை படம்?

இந்த 7 நடிகர்கள்தான் ஐம்பது மற்றும் அறுபதுகளில் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்தார்கள் என ஸ்கிரீன் பத்திரிகை பாராட்டி எழுதியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment

அடுத்த செய்தி