பாலிவுட்டை வாழ வைக்கும் தென்னிந்திய சினிமா - ஒரு சுவாரஸ்ய அலசல்!

கஜினி அமீர்கான் - சூர்யா

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தை அதே பெயரில் ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்தார்.

  • Share this:
ஒரு காலத்தில் இந்தி சினிமா தென்னிந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தி சினிமா பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. மெல்லிசை மன்னர்களின் வருகைக்குப் பிறகு இந்தி சினிமா பாடல்களின் தாக்கம் குறைந்தது. இளையராஜா இந்தி சினிமாப் பாடல்களை தமிழர்களின் இல்லங்களிலிருந்து துடைத்து மாற்றினார். ஆனால் இந்தி சினிமாக்கள் ரீமேக்குகள் என்ற பெயரில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தின.

எம்.ஜி.ஆரின் பல்லாண்டு வாழ்க உள்பட பல படங்கள் இந்திப் படங்களின் தழுவல்கள். அமிதாப்பச்சன் படங்களின் தமிழ் தழுவலில் தொடர்ச்சியாக நடித்தார் ரஜினிகாந்த். அவரை சூப்பர் ஸ்டாராக்கிய முக்கிய படங்களான சங்கர் சலீம் சைமன், நான் வாழவைப்பேன், பில்லா, தர்மத்தின் தலைவன், தீ, மிஸ்டர் பாரத், பணக்காரன், மாவீரன், படிக்காதவன், சிவா, வேலைக்காரன் அனைத்தும் அமிதாப்பச்சன் நடித்த இந்திப் படங்களின் தமிழ் தழுவல்கள். அதனால்தான் ஆங்கில தனியார் சேனல் நடித்திய, அமிதாப்பச்சனா, ரஜினிகாந்தா யார் இந்திய சினிமாவின் கிங் என்ற வாக்கெடுப்பில் ரஜினி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்ட போது, "நான் கிங் என்றால் அமிதாப்பச்சன் எம்பரர்" என்று அடக்கமாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.

சமீபமாக இந்தநிலை மாறியது. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாக்களை பெருமளவு இந்தியில் ரீமேக் செய்கின்றனர். அவர்களின் கமர்ஷியல் வெற்றியில் முக்கால் சதவீதம் தென்னிந்திய சினிமாவை சார்ந்தே உள்ளது. ஒரு சின்ன புள்ளி விவரம். இந்தி சினிமாவில் முதல் 100 கோடி படம் அமீர் கானின் கஜினி. அது தமிழ் கஜினியின் இந்தி ரீமேக். அக்ஷய் குமார் நடிப்பில் முதல் 100 கோடி படம், ரவுடி ரத்தோர். அது, தெலுங்கு விக்ரமார்க்குடு படத்தின் தழுவல்.

இந்தியின் புகழ்பெற்ற சீரிஸ் ஹவுஸ்ஃபுல். இதுவரை நான்கு பாகங்கள் வந்துள்ளன. நான்கும் ஹிட். இதில் முதல் பாகம் ஹவுஸ்ஃபுல் 2010-ல் சஜித் நடியட்வாலா தயாரிப்பில் வெளியானது. அக்ஷய் குமார், தீபிகா படுகோன், ரித்தேஷ் தேஷ்முக், லாரா தத்தா நடித்த இந்தப் படம் கமலும், பிரபுதேவாவும் நடித்த காதலா காதலா படத்தை மேலோட்டமாக தழுவி எடுக்கப்பட்டது. 38 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் 125 கோடிகளை வசூலித்தது.
அக்ஷய், ரித்தேஷ் நடிப்பில் 2012-ல் ஹவுஸ்ஃபுல் 2 படம் வெளியானது. இது மலையாளத்தில் வெளியான மாட்டுப்பட்டி மச்சான் படத்தின் தழுவல். மலையாளத்தில் சில லட்சங்களில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் இந்தி தழுவல் 100 கோடிகளை கடந்து வசூலித்தது.

ஹவுஸ்ஃபுல் 3, 2016-ல் வெளியானது. இந்தப் படத்தின் கதையை தமிழ்ப்பட இயக்குனர் கே.சுபாஷ் எழுதினார். இவர் ஏழையின் சிரிப்பில், பிரம்மா, சபாஷ் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். பழம்பெரும் இயக்குனர் கிருஷ்ணனின் (கிருஷ்ணன் - பஞ்சு) மகன் இவர். இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹவுஸ்ஃபுல் சீரிஸில் 2019 இல் வெளியான நான்காவது பாகத்தை தவிர்த்து மற்ற மூன்றுமே தென்னிந்திய சினிமாவின் பங்களிப்புகள்.

2013-ல் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியான போது அதன் இயக்குனர் ரோஹித் ஷெட்டி கொண்டாடப்பட்டார். இந்தியாவின் முதன்மையான கமர்ஷியல் சினிமா இயக்குனர் என ஆங்கில ஊடகங்கள் அவரை வர்ணித்தன. அந்த தேதியில் அதிக சம்பளம் பெறும் இயக்குனராகவும் அவர் இருந்தார். அந்த ரோஹித் ஷெட்டியை வெற்றிப்பட இயக்குனர் ஆக்கியதில் பெரும் பங்கு தென்னிந்திய சினிமாவுக்கு உண்டு. அவரது புகழ்பெற்ற சீரிஸ், கோல்மால். 2006-ல் முதல்படம் கோல்மால் - ஃபன் அன்லிமிடெட் வெளியானது. இந்தப் படம் மலையாளத்தில் மோகன்லால், முகேஷ் நடிப்பில் வெளியான காக்க குயில் (தமிழில் பிரசாந்த் நடித்த லண்டன்) படத்தின் தழுவல். இந்தப் படத்தின் வெற்றியால் கோல்மால் ரிட்டர்ன்ஸ், கோல்மால் 3, கோல்மால் அகையன் என பல படங்களை எடுத்தார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தை அதே பெயரில் ரோஹித் ஷெட்டி இந்தியில் ரீமேக் செய்தார். அப்படம் அஜய் தேவ்கானுக்கு நீண்ட நாள்களுக்குப் பின் வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு அதே அஜய் தேவ்கானை வைத்து சிங்கம் ரிட்டர்ன்ஸ் படத்தை எடுத்தார். அது மலையாளத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான ஏகலைவன் படத்தின் தழுவல்.

2018-ல் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர்சிங் நடித்த சிம்பா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படம் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடித்த டெம்பர் படத்தின் தழுவல். இது தவிர அவர் இயக்கிய த்ரில்லர் படமான சன்டே தெலுங்கில் ஜெகபதி பாபு நடிப்பில் வெளிவந்த அனுக்ககுண்டா ஒக்க ராஜு படத்தின் தழுவல். ஆக, இந்தியின் மாஸ் மகாராஜா ரோஹித் ஷெட்டியின் வெற்றிப்படங்களில் எழுபது சதவீதம் தென்னிந்திய சினிமாவின் தழுவல்கள்.

அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் கதையையும், ரோஹித் ஷெட்டியின் வெற்றிக்கதையையும் இங்கு குறிப்பிட காரணம், ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூரியவன்ஷி விரைவில் வெளியாக உள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ் கான் நடித்த சிங்கம், சிங்கம் ரிட்டர்ன்ஸ், ரன்வீர் சிங் நடித்த சிம்பா ஆகிய 'காப்' படங்களின் வரிசையில் நாலாவது படம் சூரியவன்ஷி. இதன் கிளைமாக்ஸில் அஜய் தேவ்கான், ரன்வீர் சிங் ஆகியோர் தங்களின் போலீஸ் கெட்டப்பில் கௌரவ வேடத்தில் வருகிறார்கள். அதாவது சிங்கம், சிம்பா இரண்டும் சூரியவன்ஷியின் கிளைமாக்ஸ் கூட்டணி சேர்கிறார்கள். இந்திப்பட ரசிகர்களுக்கு இந்த முக்கூட்டணி நல்ல விருந்தாக அமையும். நெருங்கிச் சென்று பார்த்தால் இந்த கூட்டணிக்கான அஸ்திவாரமே தென்னிந்திய சினிமா என்பது விளங்கும்.

இது ஹவுஸ்ஃபுல் என்ற சீரிஸையும், ரோஹித் ஷெட்டி என்ற இயக்குனரையும் பற்றியது. இன்னும் சொல்லப்பட வேண்டியவை ஏராளம் உள்ளன.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: