முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''இளையராஜா இசையில் நான்.. அப்பா அம்மா செய்த புண்ணியம்'' - ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட விடுதலை சூரி!

''இளையராஜா இசையில் நான்.. அப்பா அம்மா செய்த புண்ணியம்'' - ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட விடுதலை சூரி!

இளையராஜா மற்றும் சூரி

இளையராஜா மற்றும் சூரி

இளையராஜா இசையில் விடுதலை படத்தில் நான் நடிப்பது என் அப்பா அம்மா செய்த புண்ணியம் என்று நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து விடுதலை  திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. வெற்றிமாறன் தன்னுடைய திரைப்படங்களுக்கு வழக்கமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூடன் கூட்டணி அமைப்பார். ஆனால், விடுதலை திரைப்படத்திற்காக முதன் முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்துள்ளார். அவருடைய இசையில் 'ஒன்னோடு நடந்தா' என்ற பாடல் உருவாகி உள்ளது. அந்தப் பாடலை தனுஷ் மற்றும் அநன்யா பஃட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி உடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார். கடந்த ஆண்டு ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது 'விடுதலை' முதல் பாகத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெறும் 'ஒன்னோடு நடந்தா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் தனுஷ் பாடியிருப்பது அவரின் வழக்கமான ஸ்டைலில் இல்லை என்றாலும், இந்தப் பாடலுக்கு என்ன தேவையோ, அதை இளையராஜாவிடம் கேட்டு தெரிந்து கொண்டு பாடி கொடுத்துள்ளார். அது சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

இந்தப் பாடல் சூரிக்கும் அவருடைய காதலிக்கும் வரும் பாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் சுகா எழுதிய வரிகள் இளையராஜாவின் இசையுடன் சேர்ந்து ரம்மியமாகியுள்ளன.

இது குறித்து சூரி தனது ட்விட்டரில் இளையராஜா மற்றும் தனுஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்,இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனுஷ் குறித்த பதிவில் கூறியிருப்பதாவது, சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Dhanush, Actor Soori, Director vetrimaran, Ilaiyaraja