நடிகர் சோனு சூட்டை சந்திக்க ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்ற ரசிகர்!

சோனு சூட்

அவர் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

 • Share this:
  நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரைப் பார்க்க ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

  பாலிவுட் நடிகர் சோனு சூட்டிற்கு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் நடிகராக மட்டுமின்றி மக்களுக்கு சேவை செய்பவராகவும் உள்ளார். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

  ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார். விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி, பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கிராமத்தில் மாணவர்களுக்கு ஒழுங்காக சிக்னல் கிடைக்க மொபைல் டவர் அமைத்தது என எண்ணற்ற உதவிகளை சோனு சூட் செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரெம்டெசிவிர் மருந்து தேவை என்ற கோரிக்கையை ட்விட்டரில் வெளியிட்டதை அடுத்து அவருக்கு உடனடியாக உதவினார். இதனால் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் தொடர்ந்து சோனு சூட்டை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சோனு சூட்டின் ரசிகர்கள் அவ்வப்போது தங்களது நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ரசிகர்களில் சிலர் அவர்மீது தங்கள் அன்பை வெளிப்படுத்த ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செயல்களை செய்து வருகின்றனர்.  அந்த வரிசையில் தற்போது சோனு சூட்டின் ரசிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் சமீபத்தில் அவரை சந்திக்க ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வெறுங்காலுடன் நடந்தே சென்றுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சோனு சூட்டின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் ஹைதராபாத்தில் இருந்து மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு நடந்தே சென்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட சோனு சூட் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரை பார்க்க அனுமதி அளித்துள்ளார். பின்னர் இருவரும் பேசி கொண்டிருந்த நேரத்தில் 700 கி.மீ.க்கு மேல் நடந்து வந்துள்ளதாக வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

  இந்த செய்தியை நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், வெங்கடேஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ள நடிகர் சோனு, வெங்கடேஷ் என்னை பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு வெறுங்காலுடன் நடந்தே வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் வீடு திரும்ப தேவையான போக்குவரத்து வசதியை நான் செய்து கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் என்னை சந்திக்க இதுபோன்ற சிரமங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ள சோனு சூட், இதுபோன்ற செயல்களை செய்ய தனது ரசிகர்களை ஊக்குவிக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: