Home /News /entertainment /

அஜித், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடனம் அமைத்த சிவசங்கர் மாஸ்டர்!

அஜித், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடனம் அமைத்த சிவசங்கர் மாஸ்டர்!

சிவசங்கர் மாஸ்டர்

சிவசங்கர் மாஸ்டர்

வரலாறு, பரதேசி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற 20-க்கும் மேற்பட்ட படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

    பிரபல நடன இயக்குனரும் நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய அவரது திரைப் பயணம் குறித்து பார்ப்போம்.

    நடிகர் தனுஷை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்த மன்மதராசா பாடலுடன் பூவே உனக்காக, சூர்யவம்சம், வரலாறு என ஏராளமான வெற்றிப் படங்களுக்கு நடனம் அமைத்தவர் தான் சிவசங்கர் மாஸ்டர்.





    1980-ம் ஆண்டு குருவிக்கூடு எனும் படத்தின் மூலம் தமிழில் நடன இயக்குனராக அறிமுகமான இவர், பரத நாட்டியத்திலும் அதேசமயம் துள்ளலான குத்து பாடல்களுக்கு நடனம் அமைப்பதிலும் சிறந்தவராக விளங்கினார். குறிப்பாக பூவே உனக்காக படத்தில் இடம்பெற்ற மச்சினிச்சி வர்ற நேரம் பாடல் இவருக்கு தமிழக அரசின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை முதல்முறை பெற்றுத் தந்ததோடு இவருக்குப் பெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது.



    தொடர்ந்து விஷ்வ துளசி, வரலாறு, உளியின் ஓசை என தமிழக அரசின் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை மொத்தம் நான்கு முறை கைப்பற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், இதில் வரலாறு படத்தில் அஜித்துக்கு பிரத்தியேகமாக பரதநாட்டியம் பயிற்சி அளித்து நடன ஆசிரியராகவும் பணியாற்றினார்.



    தமிழைவிட தெலுங்கு திரையுலககில் பிஸியாக வலம் வந்த சிவசங்கர் மாஸ்டர் அங்குள்ள முன்னணி நட்சத்திரங்கள் அனைவரது படங்களிலும் பணியாற்றியுள்ளார். இதில் ராஜமௌலியின் மகதீரா படத்துக்காக சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் அவர் கைப்பற்றி அசத்தினார்.



    நடனம் அமைப்பதோடு சேர்த்து நடிப்பிலும் ஆர்வம் கொண்ட சிவசங்கர் மாஸ்டர் வரலாறு, பரதேசி, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற 20-க்கும் மேற்பட்ட படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

    40 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 800-க்கும் அதிகமான படங்களில் பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இவருடைய சிகிச்சைக்கு உதவுமாறு இவருடைய மகன் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை வைத்த நிலையில் தனுஷ், சிரஞ்சீவி, சோனு சூட் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் இவருக்கு உடனடியாக உதவி செய்ய முன் வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்திருப்பது தமிழ், தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு விஜயகாந்த், சிரஞ்சீவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராஜமவுலி, சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் டிவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி