ஆகஸ்ட் 31ம் தேதி கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள விருமன் படத்துடன், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 20 திரைப்படம் வெளியாகிறது.
ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அடுத்தடுத்து கார்த்தியின் படங்கள் ரிலீஸாக உள்ளன. தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து கார்த்தி நடித்து வருவதால் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை அவர் பிடித்துள்ளார்.
இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்த கொம்பன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிராமத்து கதையில் மாமன், மருமகன் இடையிலான உறவை கமர்ஷியல் காட்சிகளுடன் இயக்குனர் முத்தையா விவரித்திருப்பார்.
இதே கூட்டணியில் அடுத்தாக விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. விருமன் வெளியாகும் அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே. 20 படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மனம் கவர்ந்த 2 ஹீரோக்களின் படம் ஒரே நாளில் ரிலீஸாகுவதால் வசூல் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 30ம்தேதி கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகிறது. அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு கார்த்தி, இரும்புத் திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் வெளியிடப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கும் படமும் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.