முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ’சின்ன கல்லு பெத்த லாபம்’... கைகலா சத்தியநாராயணா படத்தின் ரீமேக்கில் நடித்த சிவாஜி

’சின்ன கல்லு பெத்த லாபம்’... கைகலா சத்தியநாராயணா படத்தின் ரீமேக்கில் நடித்த சிவாஜி

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

பஞ்சதந்திரம் படத்தில், 'பெத்த கல்லு, சின்ன லாபம் சின்ன கல்லு பெத்த லாபம்' என்று வசனம் பேசி நடித்த கைகலா சத்தியநாராயணா தெலுங்கின் முக்கியமான நடிகர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சதந்திரம் படத்தில், 'பெத்த கல்லு, சின்ன லாபம் சின்ன கல்லு பெத்த லாபம்' என்று வசனம் பேசி நடித்த கைகலா சத்தியநாராயணா தெலுங்கின் முக்கியமான நடிகர். இளமையில் என்டிஆரைப் போல் அழகாக இருப்பார். என்டிஆரின் பல படங்களில் அவருக்கு டூப்பாக நடித்திருக்கிறார். பிறகு நாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தெலுங்கில் முத்திரைப் பதித்தார். கடந்த டிசம்பரில் தனது 87 வது வயதில் இறந்து போனார்.

அவர் நாயகனாக நடித்தப் படங்களில் ஒன்று தாயரம்மா பங்காரய்யா. 1979 இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை கே.எஸ்.ராவ் எழுதி இயக்கினார். இதற்கு ஜன்தியல சுப்பிரமணிய சாஸ்திரி வசனம் எழுதினார். இவர் நாடகம், சினிமா என பல துறைகளில் இயங்கியவர். ஹாஸ்ய பிரம்மா என்ற பட்டப்பெயர் கொண்டவர்.

தாயரம்மா பங்காரய்யா படத்தில் தாயரம்மாவாக சௌகார் ஜானகி நடித்தார். அவரது கணவர் பங்காரய்யாவாக கைகலா சத்தியநாராயணா. அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் உதாரண தம்பதிகளாக பெயர் பெற்றவர்கள். குறிப்பாக இளம் கணவன், மனைவிகளுக்கிடையிலான பிரச்னைகளை சுமூகமாக தீர்த்து வைப்பதில் கில்லாடிகள். அவர்கள் எதிரெதிர் குணம் கொண்ட இரு பெண்களின் திருமண பந்தத்தில் ஏற்பட்ட உரசலை சரி செய்வதே பிரதான கதை. அந்தப் பெண்களாக மாதவியும், சங்கீதாவும் நடித்தனர். அவர்களின் கணவர்களாக முறையே சந்திர மோகனும், ரங்கநாத்தும் நடித்தனர். கே.சக்ரவர்த்தி படத்துக்கு இசையமைத்தார்.

தாயரம்மா பங்காரய்யா தெலுங்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 1980 இல் அதனை தமிழில் ரீமேக் செய்ய கே.எஸ்.ராவ் முயற்சி எடுத்தார். பாலகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரிக்க முன் வந்தது. இந்த பாலகிருஷ்ணன் வேறு யாருமில்லை, சிவாஜியின் மருத்துவர். சிவாஜி படங்களுக்கு தொடர்ச்சியாக வசனம் எழுதி வந்த ஆரூர்தாஸ் வசனகர்த்தாவாக ஒப்பந்தமானார். பிரதான வேடத்தில் சிவாஜியும், அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயாவும் நடித்தனர். படத்தில் கே.ஆர்.விஜயாவின் பெயர் சத்தியா. சிவாஜியின் பெயர் சுந்தரம். இரண்டையும் சேர்த்து படத்துக்கு சத்தியசுந்தரம் என பெயர் வைத்தனர்.

தெலுங்கில் நடித்த மாதவி அதே வேடத்தை தமிழில் செய்தார். சங்கீதா நடித்த வேடத்தில் ஸ்ரீப்ரியா. மாதவி பட்டணம்தான் சுகம் என்று சொல்லும் மாடர்ன் பெண். இல்லை கிராமம்தான் சுகம் என்று மறுக்கும் கிராமத்துப் பெண் ஸ்ரீப்ரியா.  இவர்களுக்கு மாப்பிள்ளைப் பார்க்கையில் ஸ்ரீப்ரியா மாடர்ன் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தையும், மாதவி கட்டுப்பெட்டியாக சேலையில் இருக்கும் புகைப்படத்தையும் பார்த்து,  நவநாகரிக இளைஞனான விஜயகுமார் ஸ்ரீப்ரியாவையும், கட்டுப்பெட்டியான ஜெய்கணேஷ் மாதவியையும் மணந்து கொள்வார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அந்நியர்களான சிவாஜி - கே.ஆர்.விஜயா தம்பதிகள் தீர்த்து வைப்பார்கள். அதற்கு அவர்களுக்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கும்.  இந்த மூத்த ஜோடிகளுக்கு இணையாக மாதவியும், ஸ்ரீப்ரியாவும் கலக்கியிருப்பார்கள். சிவாஜி, கே.ஆர்.விஜயாவின் நடிப்பும், குடும்பப் பிரச்னைகளை படம் பேசிய விதமும் ரசிகர்களை கவர, படம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

1981, பிப்ரவரி 21 வெளியான சத்திய சுந்தரம் தற்போது 42 வது வருடத்தை நிறைவு செய்கிறது.

First published:

Tags: Actor Sivaji ganesan, Classic Tamil Cinema