வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தமிழின் முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு ஒரு கன்னடர். முழுப்பெயர் பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு. 1910 ஜுலை 26 ஆம் தேதி, அப்போதைய மதராஸி பிரசிடென்சிக்கு உள்பட்ட, இப்போதைய ஆந்திரா மாநிலம், சித்தூரில் பிறந்தார். ஆரம்பத்தில் சந்திரகலா நாடக மண்டலி சபாவில் இணைந்து நாடகங்ளில் நடித்தார். கன்னட நாடக உலகின் பிதாமகன்களில் ஒருவரான குப்பி ஹம்பன்ன வீரண்ணாவின் நாடகக்குழுவுடனும் பணியாற்றினார்.
1936 இல் கன்னடத்தில் வெளியான சம்சார நவுகா படத்தில் நடித்தார். இதுதான் அவரது முதல் திரைப்பிரவேசம். தொடர்ந்து கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்தவர், 1946 இல் லவங்கி படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மும்மொழிகளில் நடித்து வந்தவர், 1950 இல் மச்சரேகை திரைப்படத்தை பி.புல்லையாவுடன் இணைந்து தயாரித்தார். 1954 வெளியாகி வெற்றி பெற்ற ப.நீலகண்டனின் கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி படத்தை தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு தயாரித்தார். 1957 இல் ரத்னகிரி ரகசியா என்ற படத்தை உதயகுமார், ஜமுனா நடிப்பில் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் தமிழில் எடுத்தார். தமிழில் உதயகுமார் வேடத்தில் சிவாஜி நடித்தார். தங்கமலை ரகசியம் என்ற பெயரில் படம் வெளியாகி மகத்தான வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவாஜி நடிப்பில் சபாஷ் மீனா படத்தை இயக்கினார்.
1958 இல் ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தை பி.ஆர்.பந்துலு தயாரித்து, இயக்கி, நடித்தார். இவரது படங்களில் வெளிநாட்டுப் படங்களின் இன்ஸ்பிரேஷன்ஸ் அதிகம் இருப்பதைப் பார்க்கலாம். ஸ்கூல் மாஸ்டர் திரைப்படத்தை 1937 வெளியான, லியோ மெக்கேரியின் மேக் வே ஃபார் டுமாரா பாதிப்பில் எடுத்தார். நேர்மையான பள்ளி ஆசிரியர் ரங்கண்ணா புதிதாக ஒரு ஊருக்கு மாற்றலாகி வருகிறார். மாணவர்களை சொந்த குழந்தை போல் பாவித்து நல்வழிப்படுத்துகிறார். தனது பேனாவை திருடிய வாசு என்ற மாணவனுக்கு அறிவுரை கூறி, அவனுக்கே அந்த பேனாவை திருப்பித் தருகிறார்.
ஆரம்பப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்கு நிதி திரட்டுகிறார் ரங்கண்ணா. அதற்கு வாசுவும், பிற மாணவர்களும் உதவுகின்றனர். பஞ்சாயத்து தலைவர் நாகப்பனின் நடவடிக்கைகளை எதிர்த்து கேள்வி கேட்பதால் ரங்கண்ணாவின் வீட்டை நாகப்பன் எரித்து விடுகிறான். வாசுவும், பிற மாணவர்களும் சேர்ந்து தங்களுடைய ஆசிரியருக்கு புதுவீடு கட்டித் தருகிறார்கள்.
காலங்கள் ஓடுகிறது. ரங்கண்ணாவின் இரு மகன்களும், ஒரு மகளும் திருமணமாகி செட்டிலாகிறார்கள். ரிட்டையர்டான ரங்கண்ணாவுக்கு எந்த விலையும் இல்லாமல் போகிறது. மூத்த மகன் அப்பாவையும், இளைய மகன் அம்மாவையும் பார்த்துக் கொள்வதென முடிவாகி தம்பதிகள் வயதான காலத்தில் பிரிக்கப்படுகிறார்கள். ரங்கண்ணா மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்படுகிறது. அவரது மனைவி மருகள்களால் துரத்தி விடப்படுகிறார். மாணவர்கள் கட்டிக் கொடுத்த அவர்களின் வீடு ஏலத்திற்கு வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் போலீஸ் அதிகாரி வாசு, தனது மனைவியின் நகைகளை தந்து வீட்டை மீட்டு ஆசிரியருக்கே தருகிறான்.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் என்ற சென்டிமெண்டுக்கு உலகம் முழுவதும் எப்போதும் ஓர் இடம் இருந்து வந்திருக்கிறது. ஸ்கூல் மாஸ்டரின் நாயகன் ஊரார் குழந்தைகளை தனது குழந்தைகள் போல் பாவித்து கல்வி போதித்தவர். சென்டிமெண்ட் ஏகத்துக்கும் வொர்க் அவுட்டாகி படம் 175 நாள்களை கடந்து ஓடியது. கன்னட சினிமா சரித்திரத்தில் 175 நாள்களை கடந்து வெள்ளி விழா கண்ட முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது. இதில் பந்துலுவுடன் எம்.வி.ராஜம்மா, உதயகுமார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சரோஜாதேவி ஆகியோரும் நடித்தனர். பிந்தைய மூவருக்கும் படத்தில் கௌரவ வேடம். வாசு என்ற போலீஸ் அதிகாரியாக சிவாஜி நடித்தார்.
ஸ்கூல் மாஸ்டர் தமிழில் எங்கள் குடும்பம் பெரிசு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இதேபோல் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பிறகு இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. மலையாள ரீமேக்கில் கன்னடத்தில் நடித்த அதே வேடத்தில் சிவாஜி நடித்தார். அவர் நடித்த முதல் மலையாளப் படம் அதுதான். 1973 இல் பி.ஆர்.பந்துலு ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரிலேயே தமிழில் இப்படத்தை ரீமேக் செய்தார்.
கன்னடத்தில் முதல் வெள்ளிவிழா திரைப்படம் என்ற பெருமையோடு, முதன்முறை நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட கன்னட திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது. 1958, ஜனவரி 31 வெளியான ஸ்கூல் மாஸ்டர் இன்று 65 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.
Also read... 11 திரையரங்குகளில் வெள்ளி விழா கண்ட சிவாஜி படம் எது தெரியுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.