முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 67 வருடங்களுக்கு முன் நகைச்சுவையில் கலக்கிய சிவாஜி கணேசன் - என்ன படம் தெரியுமா?

67 வருடங்களுக்கு முன் நகைச்சுவையில் கலக்கிய சிவாஜி கணேசன் - என்ன படம் தெரியுமா?

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

1956 பிப்ரவரி 3 வெளியான தெனாலி ராமன் நேற்று 67 வருடங்களை நிறைவு செய்து, இன்று 68 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரபு நாடுகளின் தொன்மையான கதைகள் பல நூற்றாண்டுகளாக தொகுக்கப்பட்டு உருவானது, ஆயிரத்தோரு இரவுகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற பிரபலமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றவை. ஆயிரத்தோரு இரவுகள் போல, இந்தியாவில் உருவானவை பரமார்த்த குரு கதைகள் மற்றும் பஞ்சதந்திர கதைகள். இதில் தெனாலி ராமன் கதைகளையும் சேர்க்கலாம்.

14 ஆம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசை ஆண்ட, கிருஷ்ண தேவராயரின் அமைச்சரவையில் விகடகவியாக இருந்தவர் தெனாலி ராமன். சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலா மேதை. ஒரு பிரச்னையை நூதனமான முறையில் அணுகி முள்ளுக்கும், சேலைக்கும் சேதமில்லாமல் முடிப்பதில் வல்லவர். அவரைப் பின்புலமாகக் கொண்டு புனையப்பட்ட ஏராளமான கதைகளே, தெனாலி ராமன் கதைகள் எனப்படுபன.

ஐம்பதுகளுக்கு முன், புராண கதைகளுடன், தெனாலி ராமன் கதைகளும் நாடகங்களாக நடத்தப்பட்டன. 1938 இல் தெனாலி ராமன் என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. 1956 இல் மீண்டும் தெனாலி ராமன் கதையை படமாக்கினார் தயாரிப்பாளரும், இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பி.எஸ்.ரங்கா. ஏற்கனவே 1938 இல் வெளியான தெனாலி ராமன் படத்தின் சாயல் தனது படத்துக்கு வரக்கூடாது என முடிவு செய்த ரங்கா, கன்னடத்தில் நடத்தப்பட்டு வந்த வெங்கடராமைய்யாவின் தெனாலி ராமகிருஷ்ணா நாடகத்தை தேர்வு செய்தார். அதனிடிப்படையில் படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை கண்ணதாசனும், சமுத்ரலா ராகவாச்சாரியும் எழுதினர்.

தெனாலி ராமன் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ரங்கா ஒளிப்பதிவு செய்து இயக்கினார். தமிழில் தெனாலி ராமனாக சிவாஜி கணேசனும், கிருஷ்ணதேவராயராக என்.டி.ராமராவும், அவரது அமைச்சராக நடிக்க வி.நாகய்யாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். வில்லன் ராஜகுரு வேடத்தில் எம்.என்.நம்பியார் நடித்தார். தெலுங்கு தெனாலி ராமகிருஷ்ணாவில் தெனாலி ராமனாக அக்னியேனி நாகேஸ்வரராவும், ராஜகுருவாக முக்கம்மாவும் நடித்தனர். இரு மொழிகளிலும் என்.டி.ராமராவ் கிருஷ்ணதேவராயராக நடித்தார். கிருஷ்ணன் வேடத்தில் நடிக்கத் தயங்கிய பானுமதி பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார். சுரபி பாலசரஸ்வதி, ஜமுனா ஆகியோர் முக்கியமான வேடங்களில் தோன்றினர். இருமொழிகளுக்கும் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை இசையமைத்தது.

தெனாலி ராமனின் சொந்த கிராமம் தெனாலி. அங்கிருந்து பிழைப்புக்காக மனைவி, மகனுடன் ஹம்பிக்கு யாத்திரை மேற்கொள்வார் தெனாலி ராமன். வழியில் ஒரு காளிக் கோயிலில் தங்க நேரிடும். காளி அவர் முன் தோன்றி அறிவா, பணமா எது வேண்டும் என்று கேட்க, தெனாலி ராமன் வழக்கமான குயுக்தியுடன் இரண்டுமே வேண்டும் தாயே என்று சொல்ல, கோபமான காளி, உன்னுடைய அறிவு, கோமாளித்தனமாக மக்களை சிரிக்க வைக்கவே பயன்படும் என்று சாபம் தருவார். அதையே வரமாக எண்ணி ஏற்றுக் கொள்ளும் தெனாலி ராமன், இக்கட்டான வேளையில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க அருள்புரிய வேண்டும் எனக் கேட்பார். கோபம் தணிந்த காளியும் அதற்கு உடன்படுவார்.

ஹம்பி வரும் தெனாலி ராமன், கிருஷ்ணதேவராயரின் அமைச்சரவையில் இணைய மேற்கொள்ளும் முயற்சி ராஜகுரு மற்றும் அவர்களது ஆட்களால் தோல்வியுறும். 3 சகோதரர்களுக்கு, 17 யானைகளை சரிசமமாக பகிர்ந்தளிக்கும் வழக்கு ஒன்றை தெனாலி ராமன் வெற்றிகரமாக முடித்துத்தர, கிருஷ்ண தேவராயர் மனம்மகிழ்ந்து அவரை தனது அமைச்சரவையின் விகடகவியாக நியமிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த கதையுடன், இக்கட்டான நேரங்களில் மன்னரை தெனாலி ராமன் எப்படி காப்பாற்றினார் என்பதை படத்தில் சொல்லியிருந்தார் ரங்கா. 1956 ஜனவரி 13, 14 தேதிகளில் தெனாலி ராமனின் தெலுங்குப் பதிப்பு வெளியானது. ஒரு மாதம் கழித்து 13 பிப்ரவரியில் தமிழில் வெளியிட்டனர். படம் 100 நாள்களை கடந்து ஓடி வெற்றி பெற்றது.

1956, பிப்ரவரி 3 வெளியான தெனாலி ராமன் நேற்று 67 வருடங்களை நிறைவு செய்து, இன்று 68 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

First published:

Tags: Actor Sivaji ganesan, Classic Tamil Cinema