பாடகர் கேகே உயிரிழந்திருக்கும் நிலையில் அவரது மரணத்தில் சர்ச்சை நீடித்து வருகிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
கொல்கத்தாவில் நேற்று மாலை நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில், கேகே என்று அன்போடு அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும்போது அவருக்கு உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க - Singer KK Death: அப்படிப்போடு முதல் அண்டங்காக்கா கொண்டக்காரி வரை - கேகே-வின் சிறந்த தமிழ் பாடல்கள்!
கேகேவின் மரணத்தை போலீசார் இயற்கைக்கு முரணான மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளார்கள். மாரடைப்பு காரணமாக கேகே உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விபரம் தெரியவரும்.
இந்நிலையில் கேகே மரணம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று மேற்கு வங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக மேற்கு வங்க பாஜகவின் செய்தி தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘நிகழ்ச்சி நடந்த இடத்தில் 7 ஆயிரம் பேர் இருந்ததாக தெரிகிறது. ஆனால் 3 ஆயிரம் பேர் மட்டுமே இருப்பதற்கான வசதிகள் அந்த இடத்தில் இருந்துள்ளன. இதிலிருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதில் தவறுகள் இருப்பதை அறியலாம். விஐபிகளுக்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க - Happy Birthday R Madhavan: நடிகர் மாதவன் நடிப்பில் வரவிருக்கும் படங்கள் மற்றும் சீரீஸ் ஒரு லிஸ்ட்!
மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி, ‘நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதில் பல்வேறு தவறுகள் சந்தேகங்கள் உள்ளன. இதுதான் கேகேவின் மரணத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.
அதே நேரம் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, கேகே மரணத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.