Home /News /entertainment /

மனோரமாவுக்காக பாடிய சிம்மக் குரலோன் டி.எம்.சௌந்தர்ராஜன்

மனோரமாவுக்காக பாடிய சிம்மக் குரலோன் டி.எம்.சௌந்தர்ராஜன்

டி.எம்.சௌந்தர்ராஜன்

டி.எம்.சௌந்தர்ராஜன்

நடிகர்களுக்கேற்ப குரலை மாற்றிப் பாடுவதில் டி.எம்.சௌந்தர்ராஜன் வல்லவர். 1954 இல் வெளிவந்த சிவாஜியின் தூக்கு தூக்கி திரைப்படத்தில் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் அவரை பிரபலப்படுத்தின.

  • News18
  • Last Updated :
தமிழ் சினிமா எண்ணற்ற கலைஞர்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதில் காலத்தால் அழியாத புகழ்பெற்றவர்கள் ஏராளம். அவர்களில் முக்கியமானவர் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன். பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாயகர்களாக நடிக்க வந்த காலம் டி.எம்சௌந்தர்ராஜனுடையது. தியாகராஜ பாகவதர். பி.யூ.சின்னப்பா என அன்றைய சூப்பர் ஸ்டார்களைப் பார்த்து வளர்ந்தவர். அவர்களது குரல் வளமே அவர்களை சூப்பர் ஸ்டார்களாக்கியது என்று நம்பிய காலகட்டத்தைச் சேர்ந்தவர்.

டி.எம்.சௌந்தர்ராஜன் 1946 இல் வெளிவந்த கிருஷ்ண விஜயம் படத்தில் இடம்பெற்ற, 'ராதே என்னைவிட்டு ஓடாதடி' பாடலை பாடி திரையுலகில் பாடகராக அறிமுகமானார். அவர் பாட வந்த காலத்தில் நிலைமை மாறியிருந்தது. நடிகர்கள், பாடகர்கள் என இரு தனிப்பிரிவுகள் உருவாகியிருந்தன. நாயகர்களாக நடிப்பவர்கள் பாடத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அப்போது இல்லை. இந்த காலமாற்றத்தை கடைசிவரை டி.எம்.சௌந்தர்ராஜனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தன்னுடைய குரல்வளத்தினால்தான் எம்ஜிஆர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தை புரிந்து கொண்டால் அவரையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நடிகர்களுக்கேற்ப குரலை மாற்றிப் பாடுவதில் டி.எம்.சௌந்தர்ராஜன் வல்லவர். 1954 இல் வெளிவந்த சிவாஜியின் தூக்கு தூக்கி திரைப்படத்தில் டி.எம்.எஸ். பாடிய பாடல்கள் அவரை பிரபலப்படுத்தின. இந்தப் படத்தில் டி.எம்.எஸ்.ஸை பாட வைப்பதில் சிவாஜிக்கு தயக்கம் இருந்தது. புதுமுகம், எப்படி பாடுவாரோ என்ற தயக்கம். இதனை அறிந்த டி.எம்.எஸ். சிவாஜி முன்னிலையில் பாடி காட்டியிருக்கிறார். அது பிடித்துப் போய் தொடர்ச்சியாக தனது படங்களில் பாடும் வாய்ப்பை அவருக்கு சிவாஜி தந்தார்.

சிவாஜிக்கு பாடும்போது சிவாஜியே பாடுவது போல் பாடுவார் டி.எம்.எஸ். எம்ஜிஆருக்கு அவரே பாடுவது போலிருக்கும். நடிகர்களைப் பொறுத்து மெல்லிய வேறுபாடுகளை குரலில் காட்டுவது டி.எம்.எஸ்.ஸின் தனித்துவம். சிவாஜி முதல் ரஜினி, கமல்வரை எத்தனையோ நடிகர்களுக்கு பாடிய டி.எம்.எஸ். இரு நடிகைகளுக்கும் பாடியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம்.



1959 இல் வெளியான எங்கள் குலதேவி படத்தில் இடம்பெறும், 'ஏய் குட்டி நாவம்மா' பாடல் நாடகத்தில் இடம்பெறுவது போல் வரும். இதில் எல்.விஜயலட்சுமியும், ஆண் வேடமிட்டு நடிகை மைனாவதியும் ஆடியிருந்தனர். எல்.விஜயலட்சுமிக்கு பி.சுசீலாவும், மைனாவதிக்கு டி.எம்.எஸ்ஸும் குரல் கொடுத்திருந்தனர். கே.வி.மகாதேவனின் இசையில், மருதகாசி எழுதிய இந்தப் பாடல் அந்தக் காலத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றது.



அதன் பிறகு 1967 இல் அதேபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் ஜெயலலிதா, ரவிச்சந்திரன் நடித்த மகராசி திரைப்படம் 1967 ஆம் ஆண்டு வெளியானது. இதில் மனோரமாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 'மச்சானை பார்த்துகிட்டு மான் குட்டி மயங்குது...' என்ற பாடலை மனோரமா பாடுவது போல் வரும். அந்தப் பாடலுக்கு டி.எம்.எஸ். மனோரமாவுக்காக குரல் கொடுத்திருந்தார்.



பொதுவாக நடிகைகள் ஆண் வேடமிட்டு பாடுவது போன்ற காட்சிகளில் பாடகிகள்தான் அவர்களுக்கு குரல் கொடுப்பார்கள். அபூர்வமாக சில படங்களில் பாடகர்கள் குரல் கொடுப்பதுண்டு. அப்படி எங்கள் குலதேவி படத்தில் நடிகை மைனாவதிக்கும், மகராசி படத்தில் மனோரமாவுக்கும் டி.எம்.எஸ். குரல் கொடுத்திருக்கிறார்.

Also read... இரவின் நிழல் படத்தின் அடுத்த பாடலை இன்று வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்

சிம்மக்குரலோன் பெண் குரலில் பாடியதில்லை என்றாலும் இரு பெண்களுக்கு பாடியிருக்கிறார் என்பது ஆச்சரியமே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Manorama

அடுத்த செய்தி