ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

1959 – இல் வெள்ளி விழா கண்ட 3 படங்கள்… தமிழ் சினிமாவில் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு…

1959 – இல் வெள்ளி விழா கண்ட 3 படங்கள்… தமிழ் சினிமாவில் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டு…

வெள்ளிவிழா கண்ட படங்கள்

வெள்ளிவிழா கண்ட படங்கள்

ஒரே வருடத்தில் நகரம், சரித்திரம், கிராமம் என மூன்று வேறு வேறு நிலப்பரப்பையும், கதையையும் கொண்ட படங்கள் வெள்ளிவிழா கண்டு 1959 வது வருடத்தை சிறப்பாக்கின.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  1960 க்கு முன்புவரை சரித்திரப் படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகி வந்தன. 1960 க்குப் பிறகு அபூர்வமாகவே சரித்திரப் படங்கள் வெளியாகின. அப்படி வெளியாகும் படங்கள் முன்பு போல் எளிதாக வெற்றி பெறுவதுமில்லை. அரசியல், சமூகப் படங்களின் ஆதிக்கம் சரித்திரப் படங்களை பின்னுக்குள் தள்ளின.

  1959 இல் இதற்கான விதை போடப்பட்டது. 1952 இல் பராசக்தி வெளியான போதே தமிழ் திரையுலகு சமூகப் படங்களை நோக்கி திரும்பியது. 1959 இல் மூன்று முக்கிய படங்கள் அந்த வருடத்தை மறக்க முடியாத ஆண்டாக மாற்றின.

  முதலாவது சி.வி.ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு. திரைக்கதை, வசனகர்த்தாவாக இருந்த ஸ்ரீதர் 1959 இல் தனது முதல் படம் கல்யாணப் பரிசை இயக்கினார்.

  முதல் பாதியை இளமையான காதலுடன் துடிப்பாக கொண்டு சென்றவர், இரண்டாவது பாதியை சோகம், தியாகம் என நிறைத்து பார்வையாளர்களின் மனங்களை கனக்கச் செய்தார்.

  படம் வெள்ளிவிழா கொண்டாடி நகரத்தை மையப்படுத்திய படங்களுக்கு ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தித் தந்தது.

  1959 ஏப்ரலில் வெளியான கல்யாணப் பரிசு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கையில் மே மாதம் சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியானது.

  அதிரடி வசனங்களும், சிவாஜியின் சிம்மத்தையொத்த நடிப்பும் கர்ஜனையும் வீரபாண்டிய கட்டபொம்மனை மறக்க முடியாத படமாக்கின. படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

  முதலாவது நகரம் சார்ந்த படம், இரண்டாவது சரித்திரப் படம். இரண்டு வேறு வேறு ஜானர்கள். இரண்டும் வெள்ளிவிழாப் படங்கள். கடைசியாக அக்டோபர் இறுதியில் சிவாஜியின் பாகப்பிரிவினை வெளியானது. பக்கா கிராமம் சார்ந்த படம். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நேர்எதிரான வேடம் சிவாஜிக்கு. முன்னதை போலவே பின்னதிலும் ஜமாய்த்தார் நடிகர் திலகம்.

  கண்ணதாசன் வரிகளில் அமைந்த ஏன் பிறந்தாய் மகனே..., தாழையாம் பூ முடித்து..., தங்கத்திலே ஒரு குறையிருந்தால்... பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று படத்தை வெள்ளிவிழா காண வைத்தது.

  ஒரே வருடத்தில் நகரம், சரித்திரம், கிராமம் என மூன்று வேறு வேறு நிலப்பரப்பையும், கதையையும் கொண்ட படங்கள் வெள்ளிவிழா கண்டு 1959 வது வருடத்தை சிறப்பாக்கின. வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற பென்ச் மார்க்கை சிவாஜி உருவாக்கியதன் காரணமாக, அதன் பிறகு வந்த சரித்திரப் படங்களை வீரபாண்டிய கட்டபொம்மனுடன் ரசிகர்களின் மனம் இயல்பாக ஒப்பிட ஆரம்பித்தது.

  சரித்திரப் படம் எடுக்க நினைத்தவர்களை இது யோசிக்க வைத்தது. ஒன்றுக்கு பலமுறை யோசித்தே சரித்திரப் படங்களில் முதலீடு செய்தனர்.

  இந்தப் படங்கள் வெளியானதற்கு அடுத்த ஆண்டு, 1960 இல் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி வெளியானது. படம் வெளியாகும் முன்பே பாகவதர் இறந்திருந்திருந்தார்.

  உயிரோடு இருந்த போதே அவரை சீண்டாத ரசிகர்கள் இறந்த பின்பு கவலைப்படவா போகிறார்கள்? சிவகாமி மகத்தான தோல்வியை சந்தித்து, தமிழ் சினிமாவின் இரண்டாவது பாய்ச்சலுக்கு 1960 இல் கட்டியம் கூறியது. 1959 ம் ஆண்டைப் போல் சிறந்த ஆண்டுகள் தமிழ் சினிமாவுக்கு பிறகு அபூர்வமாகவே வாய்த்தன.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood