முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்ச்சைகளுக்கு பதிலடி: யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 5வது இடம் பிடித்த 'பதான்'

சர்ச்சைகளுக்கு பதிலடி: யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 5வது இடம் பிடித்த 'பதான்'

பதான் படத்திலிருந்து ஷாருக்கான் தீபிகா படுகோன், ஜான்ஆபிரஹாம்

பதான் படத்திலிருந்து ஷாருக்கான் தீபிகா படுகோன், ஜான்ஆபிரஹாம்

பாய்காட் வெறுப்பாளர்களைக் கடந்து ஷாருக்கான் படம் அதனை சாதித்திருப்பது பாலிவுட்டை கடந்து அரசியல் தளத்திலும் முக்கியம் பெறுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 க்குள் இந்திய திரைப்படங்கள் எப்போதாவதுதான் இடம்பிடிக்கும். டாப் 5க்குள் வந்தால் அதிசயம். மூன்றாவது முறையாக அந்த சாதனையை ஷாருக்கானின் பதான் நிகழ்த்தியிருக்கிறது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த புதன்கிழமை பதான் வெளியானது.

சமீப வருடங்களில் இந்தியாவில் மதரீதியான சர்ச்சைகள் அடிக்கடி உருவாகிவருகின்றன. அதன் பாதிப்பை பாலிவுட்டும் அனுபவித்தது. பிரம்மாஸ்திரா பட வெளியீட்டின் போது பாய்காட் பிரமாஸ்திரா ஹேஷ்டேக் பிரபலமாகியது. இதற்கு ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று பேசியது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் மூவரின் படங்களும் பாய்காட் சர்ச்சை உருவானது. இப்படியொரு சூழலில் பதான் படப்பாடல் கிளிப்பிங் வெளியானது. அதில் காவி நிறத்தில் தீபிகா நீச்சல் உடை அணிந்திருந்தார். அது இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று சர்ச்சை வெடித்தது. ஷாருக்கின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பதான் திரையிட இருந்த திரையரங்குகளில் வைத்திருந்த படங்கள் கிழிக்கப்பட்டு, கண்ணாடிகள், இருக்கைகள் உடைக்கப்பட்டன.

இதற்கு மத்தியிலும் பதான் படத்திற்கான முன்பதிவு சாதனை அளவை எட்டியது. ஜனவரி 25 புதன்கிழமை வார நாளில் வெளியான படம் இந்தியாவில் (இந்திப் பதிப்பில் மட்டும்) 57 கோடிகளை வசூலித்து, முதல்நாள் வசூலில் முதலிடம் பிடித்தது. இரண்டாவது நாள் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று 70.50 கோடிகளை வசூலித்து தனது முதல் நாள் சாதனையை முறியடித்தது. வெள்ளிக்கிழமை 39.25 கோடிகளும், சனிக்கிழமை 53.25 கோடிகளும், ஞாயிறு 62 கோடிகளும் என முதல் 5 தினங்களில் 282 கோடிகளை பதானின் இந்திப் பதிப்பு வசூலித்தது. இது இந்தியாவில், இந்திப் பதிப்பின் வசூல் மட்டும். தமிழ், தெலுங்குப் பதிப்புகள் இந்த ஐந்து தினங்களில் சுமார் 10 கோடிகளை வசூலித்துள்ளன.

இந்தியாவுக்கு வெளியேயும் பதான் சாதனை படைத்து வருகிறது. அரபு நாடுகளில் இதுவரை எந்த இந்தியத் திரைப்படமும் வசூலிக்காத தொகையை பதான் பெற்றுள்ளது. யுஎஸ்ஸில் முதல் வார இறுதியில் 8.5 மில்லியன் டாலர்களுடன் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு டாலரின் மதிப்பு 80 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் 67 கோடிகளை முதல் 5 தினங்களில் யுஎஸ்ஸில் பதான் வசூலித்துள்ளது. இது இந்திய திரைப்படங்களில் மூன்றாவது அதிகபட்ச யுஎஸ் ஓபனிங்.

இதற்கு முன் யுஎஸ்ஸில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் முதல்வார இறுதியில் 9.5 மில்லியன் டாலர்களுடன் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 3 வது இடம் பிடித்தது.  யுஎஸ் மொத்த வசூல் 14.5 மில்லியன் டாலர்களுடன் ஆர்ஆர்ஆர் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகுபலி 2 முதல்வார இறுதியில் 10.43 மில்லியன் டாலர்களுடன் யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 4 வது இடம் பிடித்தது. யுஎஸ் மொத்த வசூல் 20.18 மில்லியன் டாலர்களுடன் பாகுபலி 2 முதல் இடத்தில் உள்ளது. பதான் 8.5 மில்லியன் டாலர்களை முதல்வார இறுதியில் வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பதான் உலக அளவில் ஏற்கனவே 400 கோடிகளை கடந்துள்ளது. இப்படியொரு வெற்றிதான் இன்று பாலிவுட்டிற்கு தேவைப்பட்டது. பாய்காட் வெறுப்பாளர்களைக் கடந்து ஷாருக்கான் படம் அதனை சாதித்திருப்பது பாலிவுட்டை கடந்து அரசியல் தளத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

First published: