விருதால் வைரமுத்துக்கு பெருமையல்ல; அவரால்தான் விருதுகளுக்கு பெருமை: சீமான்!

சீமான்

குற்றமென ஒன்றைக் கருதினால் அதனை நிரூபிக்கவோ, தனது தரப்பு நியாயத்தை உலகத்துக்கு எடுத்துரைத்து நிறுவவோ முற்படுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனைச் செய்யாது, ஊடகங்களில் வெறுமனே செய்தியாக்கி வைரமுத்துவை இழிவுபடுத்துவதை ஏற்கமுடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விருதுகள் மூலம் கவிஞர் வைரமுத்துக்கு பெருமை இல்லை என்றும் அவரால்தான் விருதுகளுக்கு பெருமை ஏற்படுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். 

    கேரளாவின்  இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப்பு இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டதற்கு சர்ச்சை எழுந்துள்ளது. அவருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால் இந்த விருதை வழங்கக்கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து,  விருது தொடர்பாக மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது ஓஎன்வி கல்சுரல் அகாதெமி தெரிவித்திருக்கிறது.

    அதேவேளையில், கவிஞர் வைரமுத்துக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   வைரமுத்து  எழுதிய நாட்படு தேறல் எனும் கவித்தொகுப்பின் ஆறாவது பாடலுக்காக கேரளாவின் இலக்கிய அமைப்பான ஓ.என்.வி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது அதுகுறித்து மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. மலையாளி அல்லாத ஒருவருக்கு விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறையென அறிவித்துவிட்டு, பெருந்தமிழரான வைரமுத்துவைத் தற்போது திட்டமிட்டுத் தவிர்க்க முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது” என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்பவர் வைரமுத்து என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள சீமான், “  திரைப்பாடல்களுக்கு அப்பால் கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர், தண்ணீர் தேசம், சிகரங்களை நோக்கி, தமிழாற்றுப்படை எனப் பல இலக்கியப் பங்களிப்புகளைத் தமிழ் அறிவுலகிற்கு வழங்கிப் பெருமை சேர்க்கும் வைரமுத்துக்கு நேரும் அவமதிப்புகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

    மேலும் படிக்க.. வைரமுத்துக்கு  விருது வழங்குவது குறித்து பரிசீலினை..

    நீதிமன்றம் மூலம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முயலாமல் அமைதியாக இருந்துவிட்டு, தனது படைப்புக்கான அங்கீகாரத்தை வைரமுத்து பெறும்போது எல்லாம் அவரை அவமதிக்கும் செயலை ஏற்க முடியாது என கண்டித்துள்ள சீமான், ”குற்றமென ஒன்றைக் கருதினால் அதனை நிரூபிக்கவோ, தனது தரப்பு நியாயத்தை உலகத்துக்கு எடுத்துரைத்து நிறுவவோ முற்படுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனைச் செய்யாது, ஊடகங்களில் வெறுமனே செய்தியாக்கி, அவரை இழிப்படுத்திக் களங்கம் கற்பிப்பதும், அதன்மூலம்  வைரமுத்துக்கு  கிடைக்கக்கூடிய அங்கீகாரத்தைத் தடுத்து நிறுத்துவதுமெனச் செயல்களில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்துள்ளார். ‘

    ஓ.என்.வி. விருதுக்குழு வைரமுத்துக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட விருதை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்திருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த அவமானம் என்று விமர்சித்துள்ள சீமான், தேசிய விருதுகள் உள்ளிட்ட பலநூறு விருதுகளைப் பெற்று, தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிற  வைரமுத்துக்கு  விருது வழங்கப்பட்டால், அவ்விருதுகளுக்குதான் பெருமையே ஒழிய, நிறைகுடமாய்த் ததும்பும் அவருக்கல்ல” என்று கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: