ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கைக்கு சீமான் அதிரடி விளக்கம்

ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கைக்கு சீமான் அதிரடி விளக்கம்
சீமான் (கோப்புப் படம்)
  • News18
  • Last Updated: April 27, 2019, 11:44 AM IST
  • Share this:
நடிகர் ராகவா லாரன்ஸின் அறிக்கை குறித்து சீமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

2017-ம் ஆண்டில் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தின் போது நடிகர் ராகவா லாரன்ஸ் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது நடந்த கலவரங்களின் போது அரசுக்கு ஆதரவாக லாரன்ஸ் செயல்பட்டதாகவும் கட்சி மேடைகளில் முழங்கினார் சீமான். அதற்கு ராகவா லாரன்ஸும் பதிலளித்திருந்தார்.

இதற்கு பின்னர் இருவரும் மேடைகளில் விமர்சிப்பதை தவிர்த்துக் கொண்டனர். ஆனாலும் அவர்களது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் விமர்சித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்.


நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்.

அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்னையும் இல்லையே பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார் என எனது நண்பர்களிடம் கேட்டேன்.

அவர்கள் சொன்னது, "ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்" என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன். அதே சமயம், நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன்.என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசிவிட்டுப் போய்விட்டீர்கள். ஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள், என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்.

நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள்.எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்... செய்தும் வருகிறார்கள்... அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள். ஆனால் நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்.

படிக்க: சமாதானமா? சவாலா?... சாய்ஸ் யுவர்ஸ் - சீமானை எச்சரித்த ராகவா லாரன்ஸ்

இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்....?
எச்சரிக்கை தான்” என்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த அவர், “லாரன்ஸ் மீதும் அவரின் சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு.யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். எனது கட்சியில் அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்களில் யாராவது கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பார்க்க: சீமானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸ்... என்ன பிரச்னை - வீடியோ


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்