மாஸ் நடிகர்களின் சுமார் படங்களும் சூப்பர் கலெக்‌ஷனும்!

சல்மான் கான்

ஒரு முன்னணி நடிகரின் படத்தின் மொத்த வசூல் 100 கோடி என்றால், அதில் பாதியான 50 கோடி மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் வந்துவிடும்.

  • Share this:
சில படங்கள் விமர்சகர்கள், ரசிகர்களால் கொண்டாடப்படும். ஆனால், வசூல் அதலபாதாளத்தில் இருக்கும். மாஸ் நடிகர்களின் படங்கள் சுமாராக இருப்பினும் வசூல் பிரமாதமாக அமையும். சல்மான் கானின் 'ராதே - யுவர் மோஸ்ட் வான்டட் பாய்' திரைப்படம் மே 13 மதியம் 12 மணிக்கு ஸீ 5-ல் வெளியானது. படத்தைப் பார்த்த விமர்சகர்கள் பெரும்பாலும் எதிர்மறையாக எழுதினர். ரசிகர்களையும் படம் திருப்தி செய்யவில்லை. ஆனால், வசூல்...?

ஸீ 5 சரித்திரத்தில் முதல்முறையாக அமேசான் பிரைமை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது. படம் வெளியான 24 மணி நேரத்தில் 100 கோடியை வசூலித்ததாக ஸீ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராதே படம் மட்டுமில்லை. மாஸ் நடிகர்களின் படங்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் பெரிய கலெக்ஷனை பெற்றுவிடுகின்றன. அந்த மேஜிக் எப்படி நிகழ்கிறது?

முன்பு முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழகம் முழுவதும் சேர்த்து 60 முதல் 70 திரையரங்குகளில் வெளியாகும். மக்களுக்கும் சினிமாவை தவிர்த்து வேறு பொழுதுப்போக்கு இல்லை. அதனால், 100 நாள்களை கடந்து படங்கள் சாதாரணமாக ஓடும். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் இது மாறியது. கார்ப்பரேட்டின் பாரசூட் தியரி உள்ளே வந்தது. ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை திரையிடும் போது, ஒரே நேரத்தில் அதிக பார்வையாளர்களை படம் சென்றடையும். 100 நாள்களில் பெறும் வசூலை ஒரே வாரத்தில் அள்ளலாம். இந்த கார்ப்பரேட் தியரியை அனைவரும் பின்பற்றினர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது திருட்டு டிவிடி. படத்தின் திருட்டு டிவிடி சந்தைக்கு வரும்முன் படத்தை வெளியிட்டு கல்லா கட்டலாம் என்பதால் அனைவரும் இதனை ஆதரித்தனர்.

இந்த பாரசூட் தியரி நடைமுறையான பிறகு 500 - 700 திரையரங்குகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரே நாளில் 6 காட்சிகள் வரை திரையிடப்பட்டன. முதல்நாள் முதல் காட்சியைப் பார்க்க, ரசிகர்கள் விளம்பரங்களால் தூண்டப்பட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு முதல் நாள் முதல்காட்சியை பெரும் தொகைக்கு முன்பதிவு செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது.

இந்த மாற்றத்தால் படத்தின் மொத்த வசூலில் பாதியளவு முதல் மூன்று நாள்களிலேயே வந்துவிடுகிறது. அதாவது, ஒரு முன்னணி நடிகரின் படத்தின் மொத்த வசூல் 100 கோடி என்றால், அதில் பாதியான 50 கோடி மூன்று முதல் ஐந்து நாள்களுக்குள் வந்துவிடும். பத்து தினங்களில் தொண்ணூறு சதவீத வசூலை பார்த்துவிடுவார்கள். நல்ல படமா இல்லையா என்பது தெரிவதற்குள் படம் கணிசமான வசூலை பெற்றிருக்கும். அதுதான் ராதேயிலும் நடந்திருக்கிறது. எல்லா முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் நடக்கிறது. படம் ஒருவேளை நன்றாக இருந்தால் பத்து தினங்களை கடந்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடும். வசூல் மேலும் பெருகும். ஆனால், எவ்வளவு மோசமான படமாக இருந்தாலும் மிகக்குறைவான வசூலை மட்டும் பெறுவதேயில்லை. சல்மான் கானின் படத்திலிருந்தே உதாரணம் சொல்வதென்றால், அவரது டியூப்லைட் திரைப்படம் ஒரு தோல்விப் படம். அதை சல்மானே அறிவித்தார். அந்த தோல்விப் படம் இந்தியாவில் வசூலித்தது 100 கோடிகள். அஜய் தேவ்கான் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அன்று 100 கோடி என்பது பென்ச் மார்க். எனினும் 100 கோடி வசூலித்த சல்மான் கானின் படம் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது. மாற்றிச் சொன்னால் சல்மான் கானின் ஓடாத படத்தின் வசூல் 100 கோடிகள்.

தமிழகத்தில் 100 கோடிகளை வசூலிக்கும் நமது முன்னணி நடிகர்களின் படங்கள் முதல்நாளில் 25 கோடிகளை தாண்டி வசூலிக்கின்றன. அதாவது மொத்த திரையரங்கு வசூலில் 25 சதவீதத்தை முதல்நாளிலேயே பெற்றுவிடுகின்றன. ஐந்தாவது நாளில் ஐம்பது சதவீதத்தை கடந்து பத்தாவது நாளில் 90 சதவீத வசூலை எட்டிவிடுகின்றன. படம் சுமாராத்தான் இருக்கு என்று பார்வையாளர்கள் தெளிவதற்குள் படம் கல்லாகட்டி முடித்திருக்கும்.

முதல்நாள் முதல் காட்சி பார்த்தாக வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமும், அந்த ஆர்வத்தை தூண்டும் விளம்பரங்களுமே மாஸ் நடிகர்களின் சுமார் படங்களும் சூப்பர் வசூலை பெற காரணமாகின்றன. இந்த மேஜிக்கே ராதேயை காப்பாற்றியிருக்கிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: