• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Salman Khan: சல்மான் படத்தை முன்வைத்து புதிய எல்லைகளை நோக்கி சினிமா வர்த்தகம்

Salman Khan: சல்மான் படத்தை முன்வைத்து புதிய எல்லைகளை நோக்கி சினிமா வர்த்தகம்

ராதே

ராதே

தொலைக்காட்சியில் படங்களை விளம்பரம் செய்வது, சினிமா வர்த்தகத்தின் தவிர்க்க முடியாத அங்கமானது.

 • Share this:
  திரைப்பட வர்த்தகத்தை புதிய எல்லைகளை நோக்கி நகர்த்தியிருக்கிறது, சல்மான் கானின் ராதே திரைப்படம். மே மாதம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ராதே வெளியாகிறது. பிரபுதேவா இயக்கம். படத்தின் ட்ரெய்லர் இதுவொரு வழக்கமான மசாலா என்கிறது. ஆனால், திரைப்பட வர்த்தக உலகம் ராதேயின் வெளியீட்டுக்கு கையை பிசைந்து காத்திருக்கிறது.

  தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு, திரைப்பட வர்த்தகம் எளிமையாக இருந்தது. கவுண்டரில் கிழிக்கப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதன் மதிப்புடன் பெருக்கினால், அது தான் அந்த சினிமாவின் சம்பாத்தியம் (வரிகள் போக). ஆடியோ கேசட் வழியாக உபரி வருமானம் உண்டு. ஆனால், அது கொசுறு. தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுத்ததும் காட்சி மாறியது.

  தொலைக்காட்சிகள் மக்களை திரையரங்குகளுக்கு வரவிடாமல் செய்துவிடும் என திரையுலகினர் பயந்தனர். அதற்கு எதிராக பேரணி நடத்தினர். தமிழ் சினிமாவில் ஒரேயொருவர் மட்டும் அந்த அலைக்கு எதிரணியில் நின்றார். தொலைக்காட்சியை தடுக்க முடியாது, அதனை நமக்கான சாதனமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார், அவர் தான் கமல்.

  அவரது வார்த்தைகள் யார் காதையும் எட்டவில்லை. திரைப்பட நட்சத்திரங்கள் தொலைக்காட்சியில் தோன்றக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மீறி கமல் பேட்டி தந்தார். விஜயகாந்த் தலைமையிலான நடிகர்கள் சங்கம் கமலுக்கு அபராதம் விதித்தது. அபராதம் கட்டவில்லையெனில் சினிமாவில் நடிக்க முடியாது என்றனர். அன்று கமலை வைத்து ஆளவந்தான் எடுத்த தாணு, கமலுக்காக அந்த அபராதத் தொகையை கட்டினார்.

  பிறகு நிழ்ந்தவை சரித்திரம். தொலைக்காட்சியில் படங்களை விளம்பரம் செய்வது, சினிமா வர்த்தகத்தின் தவிர்க்க முடியாத அங்கமானது. சன் பிக்சர்ஸ் தங்கள் படங்களை நிமிடத்துக்கொருமுறை விளம்பரப்படுத்தி, காதலில் விழுந்தேன் போன்ற ஹீரோ வேல்யூ இல்லாத படங்களையும் சூப்பர் ஹிட்டாக்கியது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கு பெரும் பணம் தரப்பட்டது. தொலைக்காட்சியை எதிர்த்த அதே திரையுலகினர் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் பணத்தை நம்பி படம் எடுக்கும் நிலை உருவானது.

  டிடிஹெச் சேவை வந்த பிறகு சினிமா வர்த்தகத்தின் இன்னொரு திசை திறந்தது. தனது விஸ்வரூபம் படத்தை திரையரங்குகளிலும், டிடிஹெச்சிலும், ஒரே நேரத்தில் வெளியிடுவதாக கமல் அறிவித்தார். டிடிஹெச் சேவை வழங்கும் ஏர்டெல், டாடா ஸ்கை, டிஷ் டிவி போன்றவற்றில் பணம் கட்டி படத்தை உங்கள் வரவேற்பறையிலிருந்தே பார்க்கலாம். இப்போதும் திரையரங்குகள் குறுக்கே நின்றன. திரையரங்கு தொழில் முடங்கிப் போகும் என்று கமலுக்கு நெருக்கடி தந்தனர். கமல் தனது டிடிஹெச் திட்டத்தை வாபஸ் பெற்றார். கமலின் தொடர்ச்சியாக சேரனும் இந்தத் திட்டத்தை முயன்றார். ஆனால், முறையான பலனளிக்கவில்லை.
  சமூகவலைதளங்களின் வரவிற்குப் பிறகு டிஜிட்டல் உரிமை மூலம் திரைப்படங்களுக்கு மேலும் ஒரு வருமானம் கிடைத்தது.

  விஜய், அஜித் படங்களின் இந்தி டப்பிங்குகள் யூ-டியூபில் கோடிக்கணக்கில் பார்வையாளர்களை பெறுகின்றன. பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் வருமானமும் அதிகரிக்கும். தடம் போன்ற நல்ல படங்களும் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெற்றிருக்கின்றன. விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒரு கட்டத்திற்கு மேல் யாராலும் தடுக்க முடியாது. டிடிஹெச் முடங்கினாலும் அதற்கு பதிலாக ஓடிடி வந்தது. ஆரம்பத்தில் வெளிநாடுகள் அளவுக்கு இந்தியாவில் ஓடிடி தளங்களுக்கு ஆதரவு இருக்கவில்லை. இந்நிலையில் சென்ற வருடம் கரோனாவின் தாக்குதல் ஆரம்பமானது. மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். திரையரங்குகள் மூடப்பட, ஓடிடி தளங்கள் சூடுபிடித்தன. கிராமங்கள்வரை ஓடிடி தாக்கம் செலுத்தியது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஸீ 5, சன் நெக்ஸ்ட், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பார்வையாளர்கள் ஓடிடி பக்கம் திரும்பினர்.

  முதலில், திரையரங்கில் வெளியான பின் ஓடிடியில் படங்கள் வெளியானது. பிறகு திரையரங்கில் வெளியான அன்றே ஓடிடியில் வெளியானது. அடுத்து, ஓடிடியில் மட்டுமே படங்கள் வெளியாகி, இப்போது ஓடிடிக்கு என்றே படங்கள் எடுக்கப்படுகின்றன.

  ஓடிடி திரையரங்குகளை ஸ்வாகா செய்துவிடும் என்று பயந்த நேரத்தில் தயக்கத்துடனே விஜய்யின் மாஸ்டரை திரையரங்குகளில் வெளியிட்டனர். படம் பம்பர்ஹிட். தொடர்ந்து வந்த சுல்தான், கர்ணன் படங்களின் வெற்றி, திரையரங்கு வர்த்தகத்தை தொலைக்காட்சியால் மட்டுமில்லை, ஓடிடியாலும் முடக்க முடியாது என்பதை உறுதி செய்தது.

  ஆனாலும், முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடியில் வெளியிடக் கூடாது, திரையரங்குகளில்தான் முதலில் வெளியிட வேண்டும் என்ற குரல் வலுவாக ஒலிக்கிறது. திரையரங்கு, டிடிஹெச், தொலைக்காட்சி, ஓடிடி என வருமானத்துக்கு பல வழிகள் இருக்கையில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் உள்ளது. எதை தேர்வு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்பதே அவர்களின் கணக்கு. திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில், எந்த காம்போவை தேர்வு செய்வது என்று அவர்கள் தடுமாறுகின்றனர். அவர்களுக்கு பதிலளிப்பது போல், சல்மான் கானின் ராதே மே மாதம் ரமலானை முன்னிட்டு வெளியாகிறது.

  ராதே மூன்று தளங்களில் வெளியாகிறது. முதலாவதாக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் வெளியாகும் அதேநாள், யுகே, யுஏஇ, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளிலும் வெளியிடுகின்றனர். இரண்டாவது டிடிஹெச். திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் டிடிஹெச்சிலும் படத்தை வெளியிடுகின்றனர். அதாவது டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற டிடிஹெச் சேவைகளை நீங்கள் வைத்திருந்தால் 299 ரூபாய் கட்டி உங்கள் வீட்டிலிருந்தே தொலைக்காட்சியில் ராதே படத்தைப் பார்க்கலாம். 299 ரூபாய் ஒருமுறைப் பார்ப்பதற்கு. மூன்றாவது ஓடிடி. திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் ஓடிடி தளமான ஸீ பிளெக்ஸிலும் ராதே வெளியாகிறது.

  அதில் 299 ரூபாய் செலுத்தி ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். இன்னொருமுறை பார்க்க மேலும் ஒரு 299 ரூபாய் செலவிட வேண்டும். திரையரங்கில் ஒரு நபருக்கு ஆகும் டிக்கெட், பார்க்கிங், பாப்கார்ன் கட்டணத்தைவிட இது மிகக் குறைவு. மேலும், 299 ரூபாயில் ஒரு குடும்பமே படத்தைப் பார்க்கலாம். ஸீ 5 ஓடிடி தளத்தின் வருட சந்தாதாரராக இருந்தால் பணம் செலுத்தாமலே ஒருமுறை ராதேயை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் சந்தாதாரராக இல்லாமலிருந்தால் ஒரு வருட சந்தா கட்டி திரைப்படத்தைப் பார்க்கலாம். படத்துக்கு படமும் ஆச்சு, ஒரு வருட சந்தாவும் ஆச்சு.

  இத்துடன் நிற்கவில்லை. இந்திய திரைப்படங்கள் யுஎஸ், யுகே, கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, யுஏஇ போன்ற சில நாடுகளில் மட்டுமே வெளியாகும். அரிதாக சீனா, ஜப்பானில் வெளியாவதுண்டு. இந்திய திரைப்படங்கள் வெளியாகாத நூற்றுக்கணக்கான நாடுகளிலும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால் என்ன செய்வது? அதற்கும் ராதே வழி செய்கிறது. இந்தியா தவிர்த்து 50 நாடுகளில் பணம் கட்டி ஓடிடியில் நீங்கள் ராதே படத்தை கண்டுகளிக்கலாம். இதன் மூலம் உகண்டாவில் ஒரேயொரு பார்வையாளர் இருந்தாலும் அவரும் படத்தைப் பார்க்கலாம், அவரது பர்ஸையும் ஓடிடி மூலம் நீங்கள் சென்றடையலாம்.

  தற்போது இருக்கும் திரைப்பட வர்த்தக சாத்தியக்கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கிய மெகா காம்போவில் ராதே வெளியாகிறது. திரையரங்குகள் மாஸிவ் அட்டாக் என்றால், ஓடிடியும், டிடிஹெச்சும் தனி மனிதர்களை குறிவைக்கும் சர்ஜிகல் ஸ்டிரைக். இந்த காம்போ வொர்க் அவுட்டானால் திரைப்பட வர்த்தகம் பல மடங்கு உயர்வை எட்டும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: