மலர் டீச்சராக அறிமுகமாகி ரவுடிபேபியாக கலக்கும் சாய்பல்லவி - மூன்று மொழிகளில் சாதித்தது எப்படி?

நடிகை சாய் பல்லவி

தமிழ் சினிமாவின் ரவுடிபேபி ஆக வளம்வரும் சாய்பல்லவி அவரது 29-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

 • Share this:
  நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து அடுத்தடுத்து நடித்து வந்தாலும் அவரது வெற்றிக்கு பின்னால் கடின உழைப்பு ஒளிந்துள்ளது. தமிழ் சினிமாவில் தாம் தூம் திரைப்படத்தில் நாயகிக்கு பின்னால் நிற்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி, கோத்தகிரியில் பிறந்த படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் பெண்.

  இயல்பிலேயே ஒரு நடனக்கலைஞர் என்றாலும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றிய பின்னரே கலை துறையில் கால் பதித்தார். மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவிக்கு மலையாளம் கடந்து தமிழ் சினிமாவிலும் மாபெரும் நட்சத்திர பட்டாளமே உருவானது.

  பிரேமம் படத்தை காட்டிலும் கலி படத்தில் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு ஏராளமாய் அமைந்திருந்தது. அதை நன்கு உணர்ந்த சாய் பல்லவி, அசத்தலான நடிப்பையும் வெளிப்படுத்தியதோடு மலையாள மொழி பயின்று சொந்த குரலில் டப்பிங் பேசியும் அசத்தினார்.

  மலையாளத்தில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை கொடுத்த சாய் பல்லவிக்கு அதே வேகத்தில் சிவப்பு கம்பளம் விரித்தது தெலுங்கு திரையுலகம். அந்தவகையில் தெலுங்கில் ஹாப்பி டேய்ஸ், லீடர் என பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிதா படத்தின் மூலம் அறிமுகமானார் சாய் பல்லவி. மலையாளம், தெலுங்கு என இந்தியாவின் முக்கிய நடிகையாக மாறிய சாய்பல்லவிக்கு தாய்மொழியான தமிழிலும் தியா திரைப்படத்தின் மூலம் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நடிகர் தனுஷுடன் மாரி , சூர்யாவுடன் என்ஜிகே என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தி வரும் சாய் பல்லவி, த்ரிஷா, சமந்தா வரிசையில் எளிய தமிழ் பின்னணியில் பிறந்து தென்னிந்திய அளவில் சாதித்த நடிகைகளில் முக்கியமான இடத்தை பிடிக்கிறார்.

  பொது நிகழ்ச்சிகளில் ஒப்பனையை தவிர்க்கும் சாய்பல்லவி இரண்டு கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு ஒரு பெரிய அழகு சாதன நிறுவனம் விளம்பரத்தில் நடிக்க அழைப்பு விடுத்த போதும் அழகு சாதன பொருட்களைதான் பயன்படுத்துவது இல்லை என்பதால் அந்த விளம்பரத்தில் நடிக்க போவதில்லை என அறிவித்து அதிரடி காட்டினார். பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தோல்வியை தழுவிய சாய்பல்லவி போட்டி நடைபெற்ற அதே வளாகத்தில் செட் அமைக்கப்பட்ட ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் மாரி திரைப்படத்தில் ஆடி தனது நிராகரிப்பதற்கான வெற்றியாக பறைசாற்றினார். எளிய குடும்பத்தில் பிறந்து படிப்பில் கவனம் செலுத்தி திரைத் துறையிலும் சாதிக்க முடியும் என்ற வைராக்கியத்திற்கு சாய்பல்லவி வாழும் உதாரணம்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: