நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார். கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார், முத்து, விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் கே.பாரதிதாசன், இன்பண்ட் யோகராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவினரும், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஆர். பத்மனாபன், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரன எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொருளாளர் ஷோபா சேகர் (தாய்), தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் கே. ஜோஸ்பிரபு, மதுரை மாவட்ட இளைஞர் அணித் தலைவர் முனிச்சாலை ஆர்.மகேஸ்வரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு செப்டம்பர் 19-ம் தேதி விவசாரணைக்கு வந்த நிலையில் அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.