Home /News /entertainment /

மாதவனின் மங்கள்யானும் எம்ஜிஆரின் சந்திரமண்டல விஜயமும்

மாதவனின் மங்கள்யானும் எம்ஜிஆரின் சந்திரமண்டல விஜயமும்

மாதவன் - எம்.ஜி.ஆர்.

மாதவன் - எம்.ஜி.ஆர்.

மேற்குலகில் எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அது இந்தியாவில் ஏற்கனவே இருக்கிறது, வேதகாலத்திலேயே(?) அதனை நாம் கண்டுபிடித்துவிட்டோம் என்று பெருமை பேசுவது நமது வாடிக்கையாக உள்ளது.

  மாதவன் ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறை ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்ற பெயரில் எழுதி, இயக்கி நடித்துள்ளார்.

  இந்தப் படத்தை இயக்கியதன் காரணமாக மங்கள்யானை இந்தியா எப்படி விண்ணுக்கு செலுத்தியது என்பது பற்றி அரிய சொற்பொழிவு ஒன்றையும் ஆற்றினார் மாதவன். அதில் பஞ்சாங்கத்தைப் பார்த்து, அதில் இருந்த கணக்குகளை வைத்து அப்படியே தட்டித்தட்டி மங்கள்யானை சரியான ஆர்பிட்டில் நிலைநிறுத்தியதாக கூறியிருந்தார், மாதவனின் இந்த கண்டுபிடிப்பை இணையத்தில் பலரும் வியந்து பேசி வருகின்றனர்.

  மேற்குலகில் எந்த தொழில்நுட்பம் வந்தாலும், அது இந்தியாவில் ஏற்கனவே இருக்கிறது, வேதகாலத்திலேயே(?) அதனை நாம் கண்டுபிடித்துவிட்டோம் என்று பெருமை பேசுவது நமது வாடிக்கையாக உள்ளது. விமானமா? ரைட் சகோதரர்களுக்கு முன்பே இங்கு புஷ்பக விமானம் இருந்தது. க்ளோனிங்கா? மனிதனின் தலைக்குப் பதில் யானையின் தலையை நாங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக பொருத்தியிருக்கிறோம். இப்படி எதற்கும் நம்மிடையே முன்னுதாரணங்கள் உண்டு.

  இதை சொல்கிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. இந்திய பிரதமர் மோடி போன்றவர்கள். அந்த வரிசையில் கங்கனா ரனவத்துக்கு அடுத்து மாதவன் இடம்பிடித்துள்ளார்.
  இந்த மேற்குலக.. குறிப்பாக அமெரிக்கா இந்தியா ஒப்பீட்டை 1970 இல் வெளிவந்த எங்கள் தங்கம் படத்தில் கதாகாலேட்சபமாக பாடியிருப்பார் எம்ஜியார்.  மொட்டைத்தலையில் குடுமியும், எக்ஸ்ட்ரா எனர்ஜியுமாக எம்ஜிஆர் இந்த காட்சியில் அட்டகாசம் செய்திருப்பார். இதுவும் அமெரிக்க, இந்திய ஒப்பீடுதான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி வைத்ததுதான் கதாகாலேட்சபத்தின் மையம்.

  அமெரிக்காவுக்கு போட்டியாக இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் விடுவது என முடிவாகும். சென்னையில் இருந்து ராக்கெட்டை விடுவது எனவும் தீர்மானம் செய்யப்படும். கடைசியில் என்னாகும் என்பதுதான் கான்செப்ட்.

  கதாகாலேட்சபத்தின் நடுவில் புகழ்பெற்ற பாடல் மெட்டில் வேறு வரிகளில் பாடல்களும் வரும். ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்ததை சொல்கையில், 'அன்று வந்ததும் அதே நிலா, இன்றும் வந்ததும் அதே நிலா..' பாடல் மெட்டில்,
  சென்று வந்ததும் அதே நிலா
  நின்று வந்ததும் அதே நிலா
  குழியை பறித்ததும் அதே நிலா - அதில்
  கல்லை எடுத்ததும் அதே நிலா...
  என்று பாடுவார்.  ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைப்பதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அவரை எப்படி வரவேற்றார்கள்? இதற்கு, 'மருமகளே மருமகளே வா வா...' பாடல் மெட்டில், 'ஆம்ஸ்ட்ராங்கே ஆம்ஸ்ட்ராங்கே வா வா...' என இன்னொரு பாடல்.

  அமெரிக்கா பல கண்டுபிடிப்புகள் செய்தால் நாம மட்டும் என்ன தொக்கா? இதற்கு எம்ஜிஆர் அளிக்கும் பதில் அமர்க்களம்.
  சிவாஜியின் புகழ்பெற்ற, 'அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா..' பாடலையும் விட்டு வைக்கவில்லை. 'அடுத்தாத்து அமெரிக்காவை பார்த்தேளா.. அவா நாட்டுக்காரன் மூனுக்குப் போனதை கேட்டேளா...' என்று இன்னொரு பாரடி பாடல்.  'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்று எம்ஜிஆர் பாடுகையில் உடனிருப்பவர், தமிழ்நாடு என்று சொல்லுங்கோ என்பார். 1967 இல் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றியிருப்பார். அந்த அரசியல் நிகழ்வை சொல்லும்விதமாக, உடனே பாடல்வரியை, 'தமிழ்நாடு நல்ல தமிழ்நாடு... ' என்று மாற்றி பாடுவார்.

  ராக்கெட் விடும் விழாவில் டிஎம்எஸ்தான் இறைவாழ்த்துப் பாடலை பாடுகிறவர். ராக்கெட் கிளம்பும் நேரம் அங்குவரும் ஜோதிட சாஸ்திரிகள், இன்னைக்கு அமாவாசை. அமாவாசைக்கு சந்திரன் இருக்காது. நம்ம இந்தியன் எங்க போய் இறங்குவான் என்று மாதவனைப் போல நியாயமான கேள்வி கேட்டு ராக்கெட் விடுவதை தடுப்பார்.

  நகைச்சுவையுடன் பகுத்தறிவை பேசும் இந்த கதாகாலேட்சபத்தின் சில வரிகள்...

  அமெரிக்கா அமெரிக்கா என்கிற தேசத்திலே இருந்து
  1969ஆம் வருஷம் ஜூலை மாசம் 21ஆம் தேதி
  என்ன பண்ணான் தெரியுமோ
  சுபயோக சுபதினத்திலே
  மீனம் மேஷம் கேட்டை ராகுகாலம் இல்லாத
  ஒரு மூகூர்த்த தினத்திலே
  அமெரிக்கா நரனை ராக்கெட்டுல வச்சி
  சந்திர மண்டலத்துக்கு அனுப்பினா
  ஆம்ஸ்ட்ராங் என்ன பண்ணினான் தெரியுமோ  சந்திரன் மேல கால வச்சான்
  ராகுங்கிற பாம்பும் கேதுங்கிற பாம்பும்
  அடிக்கடி பிடிச்சி கடிக்கிறதாக சொல்லப்படுகிற
  அதே நிலா..

  ரயில் வாகனம் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி
  மயில் வாகனம் கண்டுபிடிச்சது நம்ப நாடு
  போயிங் விமானம் கண்டுபிடிக்கிறதுக்கு முந்தி
  புஷ்ப விமானம் கண்டுபிடிச்சது நம்ப நாடு
  எலிஹாப்டரை கண்டுபிடிக்கிறதுக்கு முன்னால
  மூஞ்சூரு வாகனத்தை கண்டுபிடிச்சது நம்ப நாடு
  இன்னும் இருக்கு

  இட்லி முருக்கு வடை
  தேங்காய் சட்னி தயிறு வட
  கீர வட ஆம வட மெது வட மசால் வட
  இப்படி இந்தியா எவ்வளவோ கண்டுபிடிச்சிருக்கா
  இன்னும் இம்ரூவ் பன்னிண்டே இருக்கா..

  பந்தல் என்ன தோரணம் என்ன
  பூடம் என்ன சாம்ராணி என்ன
  டியூப் லைட் போட்டது என்ன என்ன
  ஸ்பீக்கர் அமைத்தது என்ன என்ன
  தேங்காய் உடைத்தது என்ன என்ன
  திருஷ்டி கழித்தது என்ன என்ன என்ன...

  பிரேயர் முடிஞ்சதும்
  புரோகிதர் மந்திரம் ஓத
  தேங்காய் உடைச்சி கறிபூரம் கொழுத்தி
  விண்வெளி வீரனுக்கு திருஷ்டி கழிச்சி
  நிறுத்துங்கோ நிறுத்துங்கோ
  என்று கத்திக்கொண்டே
  ஒரு குடுகுடு ஆத்மா ஓடி வந்தது
  அவர்தான் பிரபல பஞ்சாங்க சிரோன்மணி
  ஜோதிட மனோன்மணி ஸ்ரீஸ்ரீ சாஸ்திரிகள்
  கனீரென்று சொன்னார்

  தப்பு பண்ணிட்டேள் பெரிய தப்பு பண்ணிட்டேள்
  பெரிய பிளண்டர் பண்ணிட்டேள்
  இன்னிக்கி அமாவாசை ஆச்சே
  சந்திரனே கிடையாதே
  நம்ம இண்டியா எங்க போயி இறங்கிறது
  சந்திரன் இல்லாத போது
  இறங்க இடம் ஏதுன்னேன்...
  யூடியூபில் இந்த கதாகாலேட்சப காட்சி முழுமையாக உள்ளது. குடும்பத்துடன் கேட்டு, பார்த்து ரசிக்க ஏற்ற காணொலி.
  Published by:Musthak
  First published:

  Tags: Actor Madhavan, MGR

  அடுத்த செய்தி