சமுதாய பிரச்னைகளை அலசும் திரைப்படங்களை படைத்திட்ட இயக்குனர்களின் முன்னோடியாக இருந்தவர் ஆர்.கே செல்வமணி. இவரின் திரைப்படங்களை பற்றிய ஒரு தொகுப்பு.
இயக்குனர் மணிவண்ணனிடம் ’பாலைவன ரோஜாக்கள்’, ’விடிஞ்சா கல்யாணம்’ ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக இருந்த ஆர்.கே.செல்வமணி முதன்முதலாக இயக்கி வெளிவந்த திரைப்படம் ’புலன் விசாரணை’.. விஜயகாந்த் முதன்மை கதாபாத்திரத்திலும் சரத்குமார் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். குற்றச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து, தனக்கேயுரிய பாணியில் அவற்றுக்கான தீர்வையும் படமாக்கியிருந்தார் ஆர்.கே.செல்வமணி
அதுவரை புரட்சி கலைஞர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட விஜயகாந்திற்கு ’கேப்டன்’ என்ற பட்டத்தை தந்தது ஆர்.கே.செல்வமணியின் ’கேப்டன் பிரபாகரன்”. ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக ’கேப்டன் பிரபாகரன்’ என்னும் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விஜயகாந்த். எந்தவித சமரசமும் இன்றி அப்போதைய அரசியல் தகிடுதத்தங்களை திரையில் பிரதிபலித்தார் ஆர்.கே.செல்வமணி. குறிப்பாக இறுதி காட்சியில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் பேசும் அனல் தெறிக்கும் வசனங்கள் அன்றைய அரசியலில் அனலை பரப்பியது.
ஆர்.கே.செல்வமணியின் மூன்றாவது படைப்பாக வெளிவந்த திரைப்படம் "செம்பருத்தி''. நாயகனாக பிரசாந்த் நடிக்க அவரது பாட்டியாக பானுமதி நடித்திருந்தார். கதைக்களம்: கடலும் கடல் சார்ந்த பகுதியுமாக அமைத்து நீண்ட நாட்களுக்கு பிறகு மீனவர் பற்றிய கதையை தமிழ் சினிமாவில் படைத்திட்டார் ஆர்.கே.செல்வமணி. பிற்காலம் ஆர்.கே.செல்வமணியின் இதய ரோஜாவாக மாறிய முன்னாள் நடிகையும் இன்னாள் ஆந்திர அமைச்சருமான ரோஜா அறிமுகமான திரைப்படமும் இதுவே.
ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி இவர் எடுத்த ’குற்றப்பத்திரிகை’ திரைப்படம் சென்சாரால் தடை செய்யப்பட்டு பின் பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்தது. அதுபோல் மாடர்ன் சினிமா உலகில் அரசியல் ரீதியாக அதிகம் பேசப்பட்ட திரைப்படமாக ஆர்.கே.செல்வமணியின், 'மக்கள் ஆட்சி' திரைப்படம் அமைந்தது. 1995 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜ முத்திரை’ திரைப்படம் ஆர்.கே செல்வமணி இயக்கிய கடைசி திரைப்படமாக அமைந்தது.
கால ஓட்டங்களில் தன் படைப்புகளை குறைத்து கொண்டு இயக்குனர்கள் சங்க தலைவராகவும்... திரைப்பட தொழிலாளர்கள் சங்க தலைவராகவும் தன் பங்கினை செலுத்தி இன்றும் தமிழ் சினிமாவில் ஒரு சக்தியாக இருந்து வரும் ஆர்.கே.செல்வமணி ரோஜாவின் காதலன் மட்டுமல்ல சினிமாவின் காதலனும் கூட.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.