தனுஷ், சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
2010-ல் வெளிவந்த ‘லீடர்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரது யாமினி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடமும், சினிமா விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது. இதையடுத்து அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்திலும் நடித்தார் ரிச்சா. அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அங்குள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்த அவர் மீண்டும் படங்களில் நடிக்காமல் இருந்தார். இரண்டு படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் அவரை இன்றளவும் மறக்கவில்லை என்றே சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிச்சா, தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் குழந்தை பிறக்கவிருக்கும் ரிச்சாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்