Jaishankar: தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கரின் 21-ம் ஆண்டு நினைவுநாள்!

ஜெய்சங்கர்

ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாணியில் அவரது படங்கள் வரத் தொடங்கின. ஹாலிவுட் கௌபாய் படங்களையும் விடவில்லை.

  • Share this:
நடிகர் ஜெய்சங்கர் மறைந்து இன்று 21-வது ஆண்டு நிறைவடைகிறது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் எனும் இருபெரும் மலைகளின் நடுவில் வெளி தெரியாமல் போன சமவெளி நடிகர் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் பூர்வீகம் கும்பகோணம். ஆனால், பிறந்தது திருநெல்வேலியில், படித்ததும், வளர்ந்ததும் சென்னையில். சென்னை புதுக்கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றார். எம்ஜிஆரும், சிவாஜியும் உச்சத்தில் இருந்த அறுபதுகளின் மத்தியில் ஜெய்சங்கர் சினிமாவுக்குள் நுழைந்தார்.

முதல் படம் 1965-ல் வெளியான இரவும் பகலும். 1965 ஜனவரி தைத்திருநாளில் இந்தப் படம் வெளியான அன்று எம்ஜிஆரின் எவர்கிரீன் பிளாக்பஸ்டர் எங்க வீட்டுப் பிள்ளையும், சிவாஜியின் பழநியும் வெளியாயின. இருபெரும் நட்சத்திரங்களுக்கிடையில் தன்னுடைய முகத்தை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது யாருக்கும் சவாலானது. தொடர்ந்து, எங்க வீட்டு பெண், பஞ்சவர்ண கிளி படங்களில் நடித்தார். இதில் பஞ்வர்ண கிளியில் அவருக்கு இரட்டை வேடம். ஏவிஎம் தயாரிப்பில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளியான குழந்தையும் தெய்வமும் பரவலான வெற்றியை பெற்றது. டிஸ்னியின் தி பேரன்ட் ட்ராப் (1961) படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது (இந்தப் படமே ப்ரெஞ்சு நாவலின் தழுவல்). இந்தப் படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெளியான யார் நீ? திரைப்படம் ஜெய்சங்கரீன் திரைவாழ்க்கையில் முதல் மாற்றத்தை ஏற்படுத்திய படம் எனலாம். இந்திப் படத்தின் தழுவலான இது, ஒரு சைக்கலாஜிகல் த்ரீல்லர். ஜெயலலிதா நாயகியாக நடித்திருந்தார். பி.எஸ்.வீரப்பா இயக்கிய இப்படம் வெற்றி பெற்றதுடன், ஜெய்சங்கர் பிற்காலத்தில் துப்பறியும் படங்களில் நடிப்பதற்கு முன்னோட்டமாகவும் அமைந்தது.

நாம் மூவர், காதல் படுத்தும்பாடு, கௌரி கல்யாணம் படங்களின் வெற்றிக்குப் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1966 இல் இரு படங்களில் நடித்தார். முதலாவது இரு வல்லவர்கள். மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரிக்க, கே.வி.ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற, அடுத்ததாக வல்லவன் ஒருவன் படத்தை ஆர்.சுந்தரம் தயாரித்து தானே இயக்கினார். இதில் சிஐடி சங்கராக ஜெய்சங்கர் நடித்தார். துப்பறியும் படங்களுக்கு அழுத்தமான அஸ்திவாரம் போட்ட படம் இது.

இந்தியாவின் பல பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள், அதில் பயன்படுத்தப்பட்ட கந்தகத்தை வைத்து, கந்தம் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்குதான் தரப்படும், ஆகவே ஏதோவொரு தீப்பெட்டி தொழிற்சாலைதான் இதற்கு பின்னணியில் இருக்க வேண்டும் என்று துப்பறிவது என வல்லவன் ஒருவன் மிக சுவாரஸியமான திரைப்படம். மாலையிடுவது போல் வந்து வெடிகுண்டை வெடிக்க வைத்து கொலை செய்யும் காட்சி வல்லவன் ஒருவனில் இடம்பெற்றது. அசலாக ராஜீவ்காந்தியின் படுகொலை. ஆனால், படம் வந்தது 1966, ராஜீவ் கொல்லப்பட்டது 1991ல், எத்தனை வருடங்களுக்கு முன் என்ன மாதிரியான கற்பனை...!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ் சினிமாவின் ஜெய்சங்கரின் இடம் முக்கியமானது. எம்ஜிஆர் 1936-லிருந்து 1978 வரை 136 திரைப்படங்களில் நடித்தார். வருடத்துக்கு சராசரியாக மூன்றரைப் படங்கள். இதில் அறுபதுகளின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மட்டுமே அதிகபட்ச படங்கள் வருகின்றன. ஒரே வருடத்தில் ஒன்பது படங்கள் வரை நடித்துள்ளார். இந்த வருடங்களை தவிர்த்துப் பார்த்தால் ஒருசில வருடங்களில் நான்கு அல்லது ஐந்து படங்கள். பெரும்பாலும் இரண்டு, மூன்று திரைப்படங்கள். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனின் படங்களையும் சேர்த்தால் வருடத்துக்கு பதினைந்து படங்கள் இந்த மூன்று நடிகர்களின் நடிப்பில் வெளியாகும். அன்று குடும்பப் பெண்களே வாரத்துக்கு ஏழு படங்கள் பார்த்த காலம். வருடத்துக்கு பதினைந்து படங்கள் எந்த மூலை? திரையரங்குகளுக்கு அதிக படங்கள் தேவைப்பட்டன. அதுவும் முகம் தெரிந்த நடிகராக இருக்க வேண்டும். இந்த இடத்தை நிரப்பியவர் ஜெய்சங்கர். அவரை வெள்ளிக்கிழமை நாயகன் என்பார்கள். வெள்ளிக்கிழமைகளில் தான் புதுப்படங்கள் வெளியாகும். இரண்டு வாரத்துக்கு ஒருமுறை ஜெய்சங்கரின் படம் வெளியாகும். அதனால் இந்த பெயர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடித்த படங்களின் பாதிப்பில் தனது ஸ்டைலை ஜெய்சங்கர் மாற்றினார். ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாணியில் அவரது படங்கள் வரத் தொடங்கின. ஹாலிவுட் கௌபாய் படங்களையும் விடவில்லை. சிறுவனான ஜெய்சங்கரின் அப்பாவை கொன்று, அம்மாவை பாலியல் பலாத்காரம் செய்து, வில்லன்கள் இடுப்பில் கை வைத்து ஆகாயத்தைப் பார்த்து சிரிப்பார்கள். வளர்ந்து இளைஞனான பின் ஜெய்சங்கர் அவர்களை பழிவாங்குவார். எப்படி? தலையில் கௌபாய் தொப்பி, கழுத்தில் கர்ச்சீஃப், காடா துணியில் மெட்டல் பட்டன்கள் பதித்த கோட், தோலில் கால்சராய், இடுப்பில் பட்டை பெல்ட், அதில் தொங்கும் ரிவால்வர், முரட்டு பூட்ஸ் சகிதம் டெக்சாஸ் கௌபாயாக மாறி குதிரையேறிச் சென்று பழி வாங்குவார். மரத்தாலான சலூன், அதில் வெள்ளமென பாயும் மது, கர்ச்சீஃப் சைஸ் உடையணிந்த பார் பணிப்பெண்கள், அதில் நடக்கும் கிளப் டான்ஸ் என அதுவொரு தனி உலகம். எந்த ரசிகனும், அமெரிக்க டெக்சாஸ் தமிழ்நாட்டில் எங்க இருக்கு என்று கேட்டதேயில்லை. இன்றும் புன்னகையுடன் ரசிக்க முடிகிற படங்கள் அவை.

இவையனைத்தையும் கடந்து ஜெய்சங்கர் பற்றி சொல்ல வேண்டியது ஒன்று உண்டு. மனிதரில் அரிதாக காணப்படும் அனைத்து நற்குணங்களும் கொண்டவர். அவரால் உதவிப் பெற்றவர்கள் ஏராளம். பலருக்கு அவரது பணத்தில் வீடு வாங்கி தந்திருக்கிறார். சம்பளம் குறித்து கறாராக என்றுமே அவர் பேசியதில்லை. கேட்டவருக்கு எல்லாம் கால்ஷீட் தந்தார், விரும்பியவர்களுக்கெல்லாம் நடித்துத் தந்தார். அவர் மரணமடைந்த பிறகு அவரது அறையிலிருந்து கட்டுக்கட்டாக காசோலைகள் கிடைத்தன. அறுபதுகளிலும், எழுபதுகளிலும் அவருக்கு சம்பளமாக தரப்பட்டு வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்தவை. அன்றைய தேதியில் அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி. இதனை அவரது மகன் மருத்துவர் விஜய் சங்கரும் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். தந்தை வழியில் அவர் இப்போது பலருக்கும் உதவி வருகிறார். கண் மருத்துவரான அவர் ஏழைகளுக்கு தொடர்ச்சியாக இலவச மரத்துவ சேவை செய்கிறார்.

இன்று ஜெய்சங்கரைவிட திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். அவரைப் போன்ற மனிதர்கள்தான் அருகிவிட்டனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: