Ray - யதார்த்தமும், ஃபேண்டஸியும் இணைந்த ஆந்தாலஜி ‘ரே’!

ரே சிரீஸ்

இப்போது வரும் வெப் தொடர்களில் முஸ்லீம் என்றாலே குண்டு வைப்பவன் தான். அதிலிருந்து மாறுபட்டு சராசரியான மனிதர்களாகவும், மதிக்கத்தக்க பாபாவாகவும் காட்டியிருப்பது ஆறுதலான விஷயம்.

  • Share this:
சத்யஜித் ரேயை இளைய தலைமுறைக்கு இயக்குனராக மட்டுமே தெரியும். அவர் சிறந்த சிறுகதையாசிரியர். நிறைய துப்பறியும் கதைகளும் எழுதியிருக்கிறார். வித்தியாசமான அதேநேரம் யதார்த்தத்துடன் இவர் புனைந்திருக்கும் துப்பறியும் கதைகள் படிக்க சுவாரஸியமானவை. அனைத்துக் கதைகளிலும் கதையையும், சம்பவங்களையும் கடந்து தத்துவார்த்த சரடு ஒன்றை இழையோட விடுவது ரேயின் தனிச்சிறப்பு. அவரது நான்கு சிறுகதைகளை எடுத்து ரே ஆந்தாலஜியாக்கியிருக்கிறார்கள். நேற்று இது நெட்பிளிக்ஸில் வெளியானது.

1. Forget Me Not

இயக்குனர் - ஸ்ரீஜித் முகர்ஜி
நடிப்பு - அலி ஃபாசல்

ரே எழுதிய Bipin Chowdhury'r Smritibhrom சிறுகதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்சித் ராம நாயர் ஒரு கார்ப்பரேட் ஐகான். அவனது நண்பர்கள் அவரை மனித கம்ப்யூட்டர் என்றே அழைக்கிறார்கள். நினைவுத்திறன், முடிவெடுக்கும் வேகம் என நூறு மைல் வேகத்தில் செல்லும் கார்ப்பரேட் கார் இப்சித். அதிவேகத்தில் செல்லும் காரை ஒரு சிறு கல் இடறினாலும் கார் நிலைகுலைந்து போகும். அப்படித்தான் இப்சித்தின் வாழ்க்கையும் ஆகிறது. அவனிடம் ஒரு பெண், அவனை ஏற்கனவே சந்தித்திருப்பதாக ஒரு நிகழ்வை குறிப்பிடுகிறாள். ஆனால், இப்சித்துக்கு அது நினைவில் இல்லை. அந்தப் பெண் பொய் சொல்வதாக துரத்திவிடுகிறான். ஆனால், அவனது நண்பர்கள் அப்படியொரு சம்பவம் நடந்ததை புகைப்படத்துடன் உறுதி செய்ய, அவனது உலகம் அடியோடு மாறுகிறது. குழப்பத்தின் பெரிய சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறான். ஒரு மனிதனிடம் இருந்து அவனது தனித்தன்மையை, அவனுக்கு எல்லாமுமாக இருக்கும் விஷயத்தை எடுத்துவிட்டால் அவன் இறந்ததற்கு சமம். இப்சித்துக்கு அது நேர்கிறது. ஏன் என்ற கேள்வி, அதிகார மமதை குறித்த இன்னொரு கதவை திறக்கிறது.

தயாரிப்பின் தரம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாகப் பொருந்திய படம் இது. இறுதியில் வரும் பேண்டஸிக்காட்சிகள் கதையானது எதை சொல்ல வருகிறது என்பதை மேலும் கூராக்கி காட்டுகிறது.

2. Bahrupiya

இயக்கம் - ஸ்ரீஜித் முகர்ஜி
நடிப்பு - கே கே மேனன்

கே கே மேனன் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். குறைந்த சம்பளம். விடுப்பு எடுக்கும் போதெல்லாம் சிடுசிடுக்கும் உயரதிகாரி. நடிகையாக விரும்பும் காதலி, ஒழுகுகிற கூரையின் கீழ் வசிப்பிடம். கடைமட்ட வாழ்க்கையில் இருக்கும் கே கே மேனனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது. தனது திறமையால் தனது எதிரிகளை பழி தீர்க்கிறார். ஒரு கடவுளைப் போல தன்னை கருதிக் கொள்கிறார். அவரது ஆணவம் அவருக்கே எதிரியாக மாறி சுய அழிவில் முடிகிறது.

இந்த கதையில் வரும் பாபா கதாபாத்திரம் மிகச்சிறந்த புனைவு. பாபாவைப் போல் அனைத்தும் அறிந்தவர்கள் இருக்கிறார்களா என்ற தர்க்கத்தைத்தாண்டி, கதையின் மையத்தை விளக்க பாபா கதாபாத்திரம் பெரிதும் உதவியிருக்கிறது.

கே கே மேனன் வழக்கமான தனது நடிப்பில் அசத்தியிருக்கிறார். கிட்டத்தட்ட ஒன் மேன் ஷோ. சத்யஜித் ரேயின் Bahurupi சிறுகதையை தழுவி இது எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. Hungama Hai Kyon Barpa by Abhishek Chaubey

இயக்கம் - அபிஷேக் சௌபே
நடிப்பு - மனோஜ் பாஜ்பாய், கஜ்ராஜ் ராவ்

சத்யஜித்ரேயின் Barin Bhowmik-er Byaram சிறுகதையை தழுவி இது எடுக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாஜ்பாய் ஒரு கஸல் பாடகர். நியூடெல்லி செல்லும் ரயிலில் முன்னாள் மல்யுத்த வீரரும், பத்திரிகையாளருமான கஜ்ராவ் ராஜை சந்திக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே சந்தித்திருப்பதாக தோன்றுகிறது. மனோஜ் பாஜ்பாய்க்கு அது நினைவு வந்துவிடுகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த அச்சந்திப்பில் மனோஜ் பாஜ்பாய் ஒரு தவறு செய்துவிடுகிறார். அது அவரை வாட்டுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் செல்லும் கதை, எதிர்பாராத தீர்ப்புடன் நிறைவடைகிறது.

இதில் நடித்திருக்கும் இருவருமே மகா நடிகர்கள். நகைச்சுவை இழையோடும் கதையில், சின்னதாக பரபரப்பும் தொற்றிக் கொள்ள கதை வேகமாக நகர்கிறது. தவறுக்கு தண்டனையோ, பழிவாங்கலோ தீர்வல்ல, எல்லா தவறுக்கும் மன்னிப்பு உண்டு என்கிற மனிதத்தின் நேர்மறை சாளரத்தை திறக்கிறது படம்.

4. Spotlight

இயக்கம் - வாசன் பாலா
நடிப்பு - ஹர்ஷ் வர்தன் கபூர்

சத்யஜித்ரேயின் ஸ்பாட் லைட் சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவரும், மக்களால் கடவுள் போல் கொண்டாடப்படும் தீதி என்கிற பெண் சாமியாரும் ஒரே ஹோட்டலில் தங்க நேர்கிறது. தான்தான் மக்களின் அதீத போற்றுதலுக்குரியவன் என்கிற நடிகரின் அகந்தை தீதியின் மக்கள் செல்வாக்கின் முன்பு அடிபடுகிறது. இந்த ஈகோவை மையப்படுத்தி கதை நகர்கிறது. அடுத்தவர்களை வசீகரிக்கும் திறமை, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரம், அது ஏற்படுத்தும் அகந்தை என்று தத்துவார்த்தரீதியில் எழுதப்பட்ட கதையை, காட்சிரீதியாக விளக்க இயக்குனர் தவறிவிட்டார். எவ்வளவு பிரபலமான சாமியாராக இருந்தாலும் பக்தர்கள் அளவுக்கு அவர்களுக்கு விமர்சகர்களும் இருப்பார்கள். இதில் தயாரிப்பாளர் முதற்கொண்ட நடிகனின் காதலிவரை அந்த தெய்வமாதாவின் காலை தண்ணீரால் கழுவி அதை தீர்த்தமாக குடிக்க துடிக்கிறார்கள். இந்த நாடகீய காட்சிகளும், கிளைமாக்ஸின் பேண்டஸியும் ஒட்டாமல் போய், சொல்ல வந்த விஷயத்தை குழப்பிவிடுகின்றன.

இந்த நான்கு கதைகளும் தனிமனிதனின் திறமை, அதன் மூலம் அடையும் வெற்றி, அதில் ஏற்படும் அகந்தை என்ற நேர்கோட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நான்கு கதைகளுமே சிறப்பான தேர்வு. சத்யஜித் ரே எழுதியதை அப்படியே எடுக்காமல், இந்த காலகட்டத்துக்கு ஏற்ப, தங்களின் பாணியை கலந்து படமாக்கியிருக்கிறார்கள். யதார்த்தமான கதையில் உறுத்தலில்லாமல் பேண்டஸியை இழையவிட்டிருப்பதே இந்த ஆந்தாலஜியின் சிறப்பு எனலாம். முதல் மூன்றிலும் இந்தப் பிணைப்பு அருமையாக வெளிப்படுகிறது. அதிலும் மூன்றாவது கதை உச்சம். குறிப்பிட வேண்டிய இன்னொரு அம்சம், கதையில் வரும் முஸ்லீம் கதாபாத்திரங்கள். இப்போது வரும் வெப் தொடர்களில் முஸ்லீம் என்றாலே குண்டு வைப்பவன் தான். அதிலிருந்து மாறுபட்டு சராசரியான மனிதர்களாகவும், மதிக்கத்தக்க பாபாவாகவும் காட்டியிருப்பது ஆறுதலான விஷயம்.

முதல் மூன்று கதைகளுக்காக ரேயை கண்டிப்பாகப் பார்க்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: