ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'83' படத்திற்கும் கமலுக்கும் என்ன தொடர்பு? படக்குழு விளக்கம்

'83' படத்திற்கும் கமலுக்கும் என்ன தொடர்பு? படக்குழு விளக்கம்

கமல்

கமல்

படத்தின் புரமோஷனில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கமல் மருத்துவமனையில் இருந்தபடி 83 படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். இது, அந்தப் படத்துக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

1983-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றியது. உலகம் எதிர்பாராத அதிரடியான நிகழ்வாக அது அமைந்தது. இந்திய ரசிகர்களின் அதிகபட்ச உணர்ச்சிகரமான தருணமாக 83 உலகக் கோப்பை இருந்தது. அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்தான் 83. இதில் கபில்தேவாக ரன்வீர் சிங்கும், அவரது மனைவியாக ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோனும், ஸ்ரீகாந்தாக ஜீவாவும் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கம்.

இந்தப் படத்தை தீபிகா படுகோன், கபீர்கான், பான்டோம் பிலிம்ஸ், விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ், சஜித் நடியட்வாலா, ரிலையன்ஸ் நிறுவனம் என அரைடஜனுக்கும் அதிகமானோர் இணைந்து தயாரித்துள்ளனர். தற்போது படத்தின் புரமோஷனில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்துள்ளது. படத்தின் ட்ரெய்லரை நேற்று மருத்துவமனையில் இருந்தபடி தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டார். அதில்,'நம் காலத்து நாயகர்களின் கதையான 1983 படத்தின் ட்ரெய்லரை பெருமிதத்துடன் அறிமுகம் செய்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.

83 திரைப்படம் இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 2டி, 3டி ஆகிய பார்மெட்களில் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற இந்தப் படத்தில் கமலின் பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு படக்குழு ஒரு ஸ்டேட்மெண்டை வெளியிட்டள்ளது.

"இந்தியா போன்ற எண்ணற்ற மதங்கள் மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய பலதரப்பட்ட மக்கள் வாழுகிற நாட்டில் கிரிக்கெட்டும், திரைப்படங்களுமே அத்தகையை எல்லைகளை கடந்து மக்களை ஒன்றிணைக்கும் களமாக இருந்து வருகிறது. இந்திய மக்கள் கொண்டாடும் கிரிக்கெட் விளையாட்டின் ஓர் அற்புத தருணம் 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று மொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய தருணம் தான். அதைத்தான் இந்தப் படம் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறது.

படத்துடன் கமல்ஹாசனின் பங்களிப்பு வெறும் வர்த்தக காரணிகளுடன் நின்று விடவில்லை. அவருக்கும் இந்தப் படைப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. கமல்ஹாசன் ஒட்டு மொத்த இந்திய சினிமாவின் சின்னமாக இருந்து வருகிறார். 83 திரைப்படத்தைப் பார்க்க, தமிழ்நாட்டில் ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் ஓர் அருமையான காரணியாக கமல்ஹாசன் இருப்பார்" என அதில் கூறப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Kamal Haasan