முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குநர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கும் சூர்யா பட இயக்குநர்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கும் இயக்குநர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

  • News18
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்துவருகிறார். அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் 70 சதவிகிதம் படமாக்கப்பட்டுவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

ஜெயிலர் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துவருகின்றன. இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துவருகின்றனர்.

பான் இந்தியன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடித்துவருகிறார்கள். பிரபல மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் ஏற்கனவே இந்தப் படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளார். அவரின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என கடந்த பல மாதங்களாக செய்திகள் பரவி வந்தன.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் 70% படபிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இறுதி செய்ய திட்டமிட்டு இருந்தார். அதற்காக கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, சிபி சக்கரவர்த்தி, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், TJ.ஞானவேல் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில், லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் அவர்கள் பிறந்தநாளில் "சூப்பர் ஸ்டார்" திரு. ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர் 170" திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற "சூப்பர் ஸ்டார்" திரு.ரஜினிகாந்த் அவர்களின் "#தலைவர்170" திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.

இயக்குநர் திரு.த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், "#தலைவர் 170" திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி!!! என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lyca, Rajinikanth