நடிகர் ரஜினிகாந்தின் அகில இந்திய ரசிகர் மன்ற தலைமை நிர்வாகியாக வி.எம்.சுதாகர் என்பவர் செயல்பட்டார். இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த சத்தியநாராயணா மாற்றப்பட்டபோது, 2008 ஆம் ஆண்டு அந்த பொறுப்பிற்கு வி.எம்.சுதாகர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மன்றத்தை இவர் கவனித்து வந்தார்.
மேலும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க முயற்சிசெய்தபோது ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார். அதற்கும் வி.எம்.சுதாகர் தலைமை நிர்வாகியாக செயல்பட்டார். இந்த நிலையில் வி.எம்.சுதாகர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''என் மேல் அவர் மிகுந்த அன்பும் பாசமும் வச்சிருந்தார். கடந்த 2 வருஷமா அவர் உடம்பு கொஞ்சம் சரியில்ல. அவரைக் காப்பாற்ற ரொம்ப முயற்சி பண்ணோம். இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மை விட்டு போவார்னு எதிர்பார்க்கல. அவர் எப்ப பார்த்தாலும் நான் மகிழ்வா சந்தோஷமாக இருக்கணும் தான் நினைப்பார். மிகவும் நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பரை நான் இழந்திருக்கிறேன்'' என்றார்.
இதையடுத்து இன்று அவரின் உடல் வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. சுதாகரின் இறுதி ஊர்வலத்தில் ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல் கர்நாடக மாநிலத்தில்இருந்து வந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் சுதாகரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rajinikanth, Rajinikanth Fans