இந்தியாவில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பின் தாக்கம் தீவிரமாக இருந்தது. நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது, கடந்த ஒரு வார காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.
இந்தமுறை அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் திரிஷா, சத்யராஜ், மீனா, பிரபல தெலுகு நடிகர் மகேஷ் பாபு, மலையாள பட இயக்குநர் பிரயதர்ஷன் உள்ளிட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவருடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். 18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இருப்பினும், ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் அவரது பெயரை ஐஷ்வர்யா ஆர். தனுஷ் என்றே குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.