ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாபா வெற்றி படமா? தோல்வி படமா? இணையத்தில் வைரலாகும் சர்ச்சை!

பாபா வெற்றி படமா? தோல்வி படமா? இணையத்தில் வைரலாகும் சர்ச்சை!

பாபா

பாபா

2002 ஆகஸ்ட் 15 பாபா திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதுவரை எந்த ரஜினி படத்துக்கும் பாபா அளவுக்கு 'ஹைப்' இருந்ததில்லை. பத்திரிகைகள் பாபா பக்கம் என்று தனியாக பக்கங்களை ஒதுக்கி பாபா குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. எதிர்பார்த்த வெற்றியை படம் பெறாததால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் பணத்தை திருப்பி அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரஜினியின் பாபா திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் பாபா தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது. டிசம்பர் 12 ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 10ஆம் தேதி பாபா படத்தை ரீ ரிலீஸ் செய்கின்றனர்.

டிஜிட்டலில் மெருகேட்டப்பட்ட புதிய பிரதிக்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசியிருக்கிறார். பல காட்சிகள் எடிட் செய்யப்பட்டு படம் ட்ரிம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாபா டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் பாபா படத்தை திரையிடுகின்றன. அவற்றில் பெரும்பாலான திரையரங்குகள் அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடு செய்துள்ளன. ரோகிணி போன்ற ஒரு சில திரையரங்குகளில் அதிகாலை 4 மணி காட்சிகளின் டிக்கெட்டுகள் விட்டுத் தீர்ந்துள்ளன. யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பாபா திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாகிறது.

2002 ஆகஸ்ட் 15 பாபா திரைப்படம் வெளியான போது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. அதுவரை எந்த ரஜினி படத்துக்கும் பாபா அளவுக்கு 'ஹைப்' இருந்ததில்லை. பத்திரிகைகள் பாபா பக்கம் என்று தனியாக பக்கங்களை ஒதுக்கி பாபா குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. எதிர்பார்த்த வெற்றியை படம் பெறாததால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் பணத்தை திருப்பி அளித்தார். சந்திரமுகி படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி, பாபாவில் விழுந்ததால் எந்திரிக்க மாட்டேன் என்று நினைத்தார்கள். ஆனால் விழுந்தால் எழாமல் இருக்க நான் யானை அல்ல குதிரை என்றார். அவரே பாபா தோல்விப் படம் என்று ஒப்புக்கொண்டிருந்தார்.

பாபா ரீ ரிலீஸ் ஆகும் நிலையில் ரஜினி ரசிகர்கள், பாபா ஒரு வெற்றிப் படம் என நிறுவி வருகின்றனர். பாபா திரைப்படம் 107 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடியது. எட்டு திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது. பாபாவுக்கு முன் எந்தத் திரைப்படமும் 107 திரையரங்களில் 50 நாட்கள் ஓடியதில்லை. அதுபோல் எட்டு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய திரைப்படங்களும் மிகக் குறைவு. ஆகவே பாபா அப்போதே ஒரு வெற்றிப் படம்தான் என ரஜினி ரசிகர்கள் பழைய பத்திரிகை விளம்பர ஆதாரங்களுடன் இணையத்தில் பேசி வருகின்றனர். பாபா 107 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய படம் என்றால், ஏன் நஷ்டம் அடைந்தது, ரஜினி எதற்கு நஷ்ட ஈடு அளித்தார் என்று எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பாபா ஓடவில்லை ஓட வைக்கப்பட்டது என்பது அவர்களுடைய வாதம்.

இதில் யார் சொல்வது உண்மை? திரைப்பட வல்லுனர்களிடம் கேட்டால், பாபா படம் பல நடிகர்களின் வெற்றிப் பாடங்களை விட அதிகம் வசூலித்தது உண்மைதான் என்கிறார்கள். அதே நேரம் வசூலை விட அதிக தொகைக்கு படத்தை விற்பனை செய்ததால் பலருக்கும் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது, ரஜினி நஷ்ட ஈடு அளித்தார் என்கின்றனர். பாபா படத்திற்கு ரஜினி நஷ்டஈடு அளித்தது போல் அதற்கு முன் யாரும் அளித்ததில்லை, நஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளித்து முன்மாதிரியாக ரஜினி நடந்து கொண்டார் என ரஜினி ரசிகர்கள் ரஜினியை புகழ்கின்றனர்.

இவை அனைத்தையும் மறுத்து இயக்குனரும் பிரபல விமர்சகர்மான கேபிள் சங்கர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

"பாபா ரிலீஸ். ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. நான் இப்ப சொல்லல. பழைய ரிலீஸின் போது. படம் வெளியாவதற்கு முதல் நாளே நடு இரவில் காட்சி போட அனுமதி வாங்கும் அளவுக்கு எதிர்பார்ப்பு. அத்தனையும் மீறி பட வெளியீட்டுக்கு முதல் நாள் ஏழு மணிக்கு ஒரு தியேட்டரில் காட்சி போடப்பட, அடுத்தடுத்த தியேட்டர்களை இரவு காட்சிக்கு பாபா போட ஏற்பாடானது முதல் காட்சியின் ரிசல்ட் பெருசாய் இல்லை. இன்றைக்கு போல இன்டர்நெட் காலமும் இல்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் விட பவர்ஃபுல்லானது மவுத் டாக்.

Also read... கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்டில் இடம்பிடித்த புஷ்பா!

"படம் ரிலீசுக்கு முதல் நாள் இரவுக் காட்சியாய் வில்லிவாக்கம் ராயல் தியேட்டரில் திரையிட்டார்கள். முதல் நாள் முதல் காட்சி என்றில்லாமல் கிட்டத்தட்ட பிரிமியர் காட்சி போல. தியேட்டரில் 60% தான் புல் ஆனது. சரி, லோக்கல் ஏரியா அவ்வளவாக யாருக்கும் தெரியாமல் போயிருக்க வாய்ப்பு இருக்கிறது, நாளை காலைமுதல் காட்சிக்கு கூட்டம் வந்து விடும் என்று நினைத்தது பொய்யானது. படம் மிகப்பெரிய தோல்வி. எம்ஜி/அட்வான்ஸ் வாங்கிய தொகையில் வசூல் போக மிச்சத்தை ஏரியா வாரியாக திரும்ப கொடுத்தார் ரஜினி என்பது உண்மை.

"ஆனால் என்னவோ அவர் ஒருவர் தான் கொடுத்தார் என்பதைப் போல பில்டப் செய்தி ஒன்றை இன்றைக்கு உலாவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹேராமிற்கு கமல் கொடுத்திருக்கிறார். இருவருக்கு மணிரத்னம் கொடுத்திருக்கிறார். பல பெரிய தயாரிப்பாளர்கள் அவரவர் படங்கள் பெரும் தோல்வி அடையும்போது அடுத்தப் படத்தின் மூலமாகவோ அல்லது பணமாகவோ திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். எனவே, அன்றைய நாளில் பாபா ஹிட் தான், கலெக்சன் ரிப்போர்ட் சரியாக தரவில்லை என்பது போன்ற பிராதுகளை எடுத்துக்கொண்டு யாரும் வர வேண்டாம். ஏனென்றால் அன்றைய நேரடி சாட்சிகள் இன்றைக்கு எழுதப்படும் பாபாவின் கலெக்சன் ரிப்போர்ட்டைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை..."

- இவ்வாறு அந்தப் பதிவில் கேபிள் சங்கர் குறிப்பிட்டுள்ளார். பாபா 2002ல் வெளியான போது லாபமா இல்லை நஷ்டமா என்பது ரஜினியின் அரசியல் பிரவேசம் போலவே இப்போதும் குழப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Rajinikanth