ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த வில்லன் நடிகர்

அண்ணாத்த (தமிழ்)

அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று கடந்த ஜனவரி மாதத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

  • Share this:
ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார்.இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் வில்லன் நடிகர் ஜகபதி பாபு இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் ஏற்கெனவே ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.

’அண்ணாத்த’  திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: