• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய்யின் சர்கார் படத்தின் வசூலை முறியடித்ததா அண்ணாத்த...?

விஜய்யின் சர்கார் படத்தின் வசூலை முறியடித்ததா அண்ணாத்த...?

ரஜினிகாந்தின் அண்ணாத்த

ரஜினிகாந்தின் அண்ணாத்த

விஜய்யின் சர்கார் முதல்நாளில் 32 கோடிகளை வசூலித்ததே அதிகபட்ச முதல்நாள் வசூலாக இருந்தது.

  • Share this:
    ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் முதல் நாள் வசூலில் சர்காரை முந்தியதா இல்லையா என்ற சர்ச்சை இணையத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் கடும் சொற்களுடன் மோதிக் கொள்கிறார்கள்.

    தான் ரசிக்கும் நடிகரின் படமே அதிகம் வசூலிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு ரசிகனின் ஆசை. ஆனால், யாராவது ஒரு நடிகர்தான் முதலிடத்தைப் பிடிக்க முடியும். இந்த இடத்தில்தான் பொய் புகுந்துவிடுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் 90 சதவீதம் வசூல் கணக்கை முறையாக காட்டுவதில்லை. டிக்கெட் என்று முன்பதிவு டோக்கனை விநியோகிக்கிறார்கள். இதனால், 500 பேர் படம் பார்க்க வந்தால், 300 பேர்தான் வந்தார்கள் என்று அவர்களால் எளிதாக அரசையும், தயாரிப்பாளரையும் ஏமாற்ற முடியும்.

    அந்த 300 பேர்களில் 50 பேர் பத்து ரூபாய் டிக்கெட் எடுத்தார்கள். 200 பேர் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்தார்கள், 50 பேர்தான் முதல் வகுப்பில் படம் பார்த்தனர் என்று அதிலும் அரசையும், தயாரிப்பாளரையும் ஏமாற்ற முடியும். மேலும், அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை வசூலிக்கும் திரையரங்குகள் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டே உள்ளன. மற்றவை படத்துக்கு தகுந்தபடி டிக்கெட் கட்டணத்தை கவுண்டரிலேயே ஏற்றி தான் விற்கிறார்கள்.

    கலெக்ஷன் என்று வரும்போது இந்த கோல்மால் கணக்குகளில் எதைக் காட்டுவார்கள்? அரசு நிர்ணயித்த கணக்கையா இல்லை அவர்கள் அதிகபடியாக வசூலித்த கணக்கையா? இத்தனை குளறுபடிகள் இருப்பதால்தான் நஷ்டமடைந்தால் இத்தனை கோடி நஷ்டம் என்று கணக்குக் காட்டும் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் லாப கணக்கை மட்டும் சொல்வதில்லை.

    மேலே உள்ள சேதிகளிலிருந்து ஒரு படத்தின் தமிழ்நாட்டு திரையரங்கு வசூலை துல்லியமாக அறிய முடியாது என்பது விளங்கியிருக்கும். குத்து மதிப்பாக, அண்ணாத்த முதல் நாளில் 24 - 26 கோடிகளை வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், முதல்நாளில் தமிழகத்தில் அண்ணாத்த 34 கோடிகளை வசூலித்தது என ஒருவர் ட்வீட் செய்தார். சன் பிக்சர்ஸ் அதனை லைக் செய்திருந்தது. சன் பிக்சர்ஸே 34 கோடி வசூல் என்பதை உறுதி செய்துவிட்டது என இப்போது அண்ணாத்தயின் முதல்நாள் தமிழக வசூல் 34 கோடி என்கிறார்கள்.

    விஜய்யின் சர்கார் முதல்நாளில் 32 கோடிகளை வசூலித்ததே அதிகபட்ச முதல்நாள் வசூலாக இருந்தது (இந்தப் பட்டியலில் 2.0 படத்தை யாரும் சேர்க்கவில்லை. தமிழ் திரைப்படங்களில் அதிகம் வசூலித்த படம் அதுதான்). சர்காரை அண்ணாத்த முந்திவிட்டது என்று இணையத்தில் பட்டாசு வெடிக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அது போங்கு கணக்கு இப்போதும் சர்கார்தான் முதலிடம்என்று அந்த பட்டாசில் பக்கெட் தண்ணியை ஊற்றுகிறது விஜய் வட்டாரம்.

    தமிழ்நாடு அரசு தலையிட்டு, அனைத்து திரையரங்குகளின் டிக்கெட் விற்பனையையும் கணினிமயப்படுத்தி, அரசு நிர்யணித்த கட்டணத்தை தான் திரையரங்குகள் வசூலிக்கின்றன என்பதை உறுதி செய்யும்வரை வசூல் நிலவரங்களில் உண்மை வெளிப்பட போவதில்லை. அதுவரை என் தலைவர் படம் தான் முந்தி, இல்லை என் தலைவர் தான் என்று ரசிகர்கள் அடித்துக் கொள்ள வேண்டியது தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: