முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சுந்தர் சி.க்கு லாஜிக் சொல்லிக் கொடுத்த ரஜினி...!

சுந்தர் சி.க்கு லாஜிக் சொல்லிக் கொடுத்த ரஜினி...!

ரஜினி மற்றும் சுந்தர் சி

ரஜினி மற்றும் சுந்தர் சி

கதையோட்டத்துக்கு சரியாக வந்தால் ரசிகர்கள் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்ற படிப்பினையை அருணாச்சலத்தில் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சுந்தர் சி. கூறியுள்ளார்.

  • Last Updated :

சுந்தர் சி.யின் அரண்மனை படத்தின் இறுதிக் காட்சி. காரில் செல்லும் நாயகனை பேய் துரத்தும். அவன் செல்லும் வழியை மறிக்க, புயலை அனுப்பும், மரங்களையும், கற்களையும் சாலையில் வீசும். நாயகன் சாமர்த்தியமாக இதனை சமாளித்து காரை ஓட்டுவான். இந்தக் காட்சியின் போது உதவி இயக்குனர் ஒருவர், இவ்வளவு செய்யக் கூடிய அந்த பேயால, காரை நிறுத்த முடியாதா? எதுக்கு வீணா மரத்தையும், கல்லையும் வீசணும் என்று கேட்டிருக்கிறார். 

லாஜிக்கான கேள்வி. ஆனால், சுந்தர் சி., திரையரங்கில் படம் பார்க்கிற யாரும் இந்தக் கேள்வியை எழுப்ப மாட்டார்கள் என்று அந்தக் காட்சியை அப்படியே வைத்தார். அவர் சொன்னது போலவே திரையரங்கில் படம் பார்த்த யாருக்கும் அந்தக் கேள்வி எழவில்லை. அதற்கு காரணம் ரஜினி.

பல வருடங்களுக்கு முன் ரஜினி சுந்தர் சி.யை பார்ப்பதற்காக அழைக்கிறார். சுந்தர் சி.யும் செல்கிறார். ரஜினி அவரிடம் கோவிலில் மணி அடிப்பவன் ஒருவனின் கதையைச் சொல்லி, கதை எப்படி இருக்கிறது என கேட்கிறார். அது ரொம்பவும் சுமாரான கதை. ஆனால், அப்படிச் சொன்னால் ரஜினியுடனான சந்திப்பு அதோடு முடிவடையும் என்பதால், நன்றாக இருக்கு என்கிறார் சுந்தர் சி. ரஜினி ஒத்த கருத்து இல்லாதவர்களுடன் பயணிக்க மாட்டார் என முன்பு பஞ்சு அருணாச்சலம் சொன்னதை நினைவில் வைத்து, கதை நன்றாக இருக்கிறது என்கிறார். அந்தக் கதையை கதைவிவாதத்தில் மாற்றி எடுத்ததுதான் அருணாச்சலம்

அந்தப் படத்தில் நட்சத்திர விடுதியின் விலையுயர்ந்த சூட்டில் ரஜினி தங்கியிருப்பார். முப்பது நாளில் மொத்த பணத்தையும் செலவளிக்க வேண்டும் என்பது அவருக்கு தரப்பட்டிருக்கும் டாஸ்க். அதன்படி முப்பதாவது நாளில், பணம் அனைத்தும் கரைய, நள்ளிரவில் ஹோட்டல் மேனேஜர் உறங்கிக் கொண்டிருக்கும் ரஜினியை தட்டி எழுப்பி, ஹோட்டலில் இருந்து வெளியேற்றுவதாகக் காட்சி. முப்பது நாள்கள் பல லட்ச ரூபாய் தந்து ஹோட்டலில் தங்கியிருந்த ஒருவரை, நடுஇரவில் எழுப்பி வெளியேற்ற மாட்டார்கள், அதுவும் ஹோட்டல் மேனேஜரே வந்து எழுப்ப மாட்டார், இந்தக் காட்சி லாஜிக்காக சரியில்லை என்றிருக்கிறார் சுந்தர் சி.

ஆனால், ரஜினியோ, அவ்வளவு நாள் ஆடம்பரமாக இருந்த நாயகன் நள்ளிரவில் நடுரோட்டுக்கு வந்துவிட்டான் என்று காட்டினால், நன்றாக இருக்கும், கதையோட்டத்துக்கு இதுதான் சரி என்றிருக்கிறார். கதையோட்டத்துக்கு ஒத்து வந்தால் ரசிகர்கள் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். சுந்தர் சி. அப்படியும் உடன்படவில்லை. இறுதியில், நீங்க காட்சியை எடுங்க. யாராவது இது சரியில்லைன்னு சொன்னா மாத்திக்கலாம் என்றிருக்கிறார் ரஜினி. ஆனால், படம் பார்த்த யாரும் அது லாஜிக் மீறல் என்று சொல்லவில்லை

Also read... நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்...!

கதையோட்டத்துக்கு சரியாக வந்தால் ரசிகர்கள் லாஜிக் பார்க்க மாட்டார்கள் என்ற படிப்பினையை அருணாச்சலத்தில் ரஜினியிடமிருந்து கற்றுக் கொண்டதாக சுந்தர் சி. கூறியுள்ளார். அந்த தைரியத்தில்தான் அரண்மனை படத்தின் இறுதிக்காட்சியையும், உதவி இயக்குனரின் லாஜிக் கேள்வியையும் மீறி வைத்தார். படமும் ஜெயித்தது, யாரும் கேள்வியும் கேட்கவில்லை.

First published:

Tags: Rajinikanth, Sundar.C