ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கமாண்டோவிலிருந்து காப்பியடிக்கப்பட்ட கமல், ரஜினி, விஜயகாந்த், படக் காட்சிகள்

கமாண்டோவிலிருந்து காப்பியடிக்கப்பட்ட கமல், ரஜினி, விஜயகாந்த், படக் காட்சிகள்

அர்னால்டு, ரஜினி, விஜயகாந்த், கமல்

அர்னால்டு, ரஜினி, விஜயகாந்த், கமல்

ஒரு படத்தின் காட்சியை மூன்று முன்னணி நடிகர்களின் படத்தில் காப்பியடித்து வைத்திருப்பது எப்போதாவது அபூர்வமாக நடக்கக் கூடியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அர்னால்ட் ஸ்வாஸ்நேகரின் கமாண்டே படம் 1985 வெளியான போது அதன் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. அர்னால்டை ஆக்ஷன் ஹீரோவாக உலகம் முழுவதும் கொண்டு சென்ற படங்களில் கமாண்டோ முக்கியமானது.

இதில் அவரது அறிமுகக் காட்சியில் பெரிய மரத்தை தோளில் சுமந்து வருவார். முதலில் ஷு அணிந்த அவரது கால்கள் பிறகு அவரது மசில்கள் என காட்டிவிட்டு அவர் மரத்தை சுமந்து வருவதை காண்பிப்பார்கள். பிறகு கோடாலியால் விறகை உடைக்க ஆரம்பிப்பார்.

பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்கும். கோடாலியில் பின்னால் வருகிற நபரைப் பார்ப்பார். அது அவரது மகள். அந்த சிறுமியை வில்லன் கடத்தி அடைத்து வைக்க, இறுதிக் காட்சியில் அர்னால்ட் கிளம்பிச் சென்று வில்லனை கொலை செய்து மகளை மீட்பார்.

விஜயகாந்தின் புலன்விசாரணை படத்தில் அர்னால்டின் அறிமுகக் காட்சியை இயக்குனர் செல்வமணி  காப்பியடித்து வைத்திருப்பார். . ஷாட் கூட அப்படியே இருக்கும். அமெரிக்காவில் குளிர்காலத்தில் தீ மூட்ட சிறிய அளவு மரத்துண்டுகளை வெட்டி சேமித்து வைப்பார்கள்.

நம்மூர் சீதோஷ்ணநிலைக்கு தீ மூட்டி குளிர்காய வேண்டிய அவசியமில்லை. ஆனால், புலன்விசாரணையில் விஜயகாந்த் அர்னால்ட் போலவே சின்ன சைஸ் கட்டைகளை வெட்டிக் கொண்டிருப்பார். புலன் விசாரணையின் இறுதியில் கமாண்டோ படத்தில் வருவது போல் வில்லன் விஜயகாந்தின் மகளை கடத்துவான்.

கமாண்டோவில் மகளை காப்பாற்ற வில்லன் இருக்கும் தீவிற்கு செல்லும் அர்னால்ட், ஹண்டர் உடைக்கு மாறுவார். அவர் ஸிப் போடுவது, பெல்ட் பக்கிள் செய்வது, கத்தியை செருகுவது, துப்பாக்கியை லோட் செய்வது போன்றவற்றை ஷார்ப்பாக கட் செய்து, வேகமாக காட்டுவார்கள்.

படத்தின் ட்ரெய்லரில்கூட அதைத்தான் பிரதானமாக காட்டியிருப்பார்கள். இந்தக் காட்சியை அப்படியே சுட்டு ரஜினியின் மனிதன் படத்தில் வைத்திருப்பார்கள்.

மனிதன் கிளைமாக்ஸில் வில்லன் ரகுவரன் தனது ரகசிய சிறைக்கூடத்தில் ஆள்களை அடைத்து வைத்து டைம் பாம் செட் பண்ணுவார். அங்கு வரும் ரஜினி கமாண்டோவில் வருவது போலவே சர் சர்ரென்று ஸிப்பைப் போட்டு பெல்டை மாட்டி, கத்தியை செருகி, கை எறிகுண்டை மாட்டி, துப்பாக்கியை லோட் செய்வார். மனிதன் ஓடிய திரையரங்குகளில் விசிலும், அப்ளாஸும் பறந்த காட்சி இது.

கமலின் வெற்றி விழா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கமாண்டோ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலிருந்து எடுத்திருப்பார்கள். அதில் அர்னால்டும் வில்லனும். இதில் கமலும், வில்லன் சலீம் கௌஸும். கமாண்டோவில் இருவரும் எப்படி நெருப்புக்கு  அருகில் சண்டையிடுவார்களோ, வில்லன் எப்படி அர்னால்டின் விலாவில் கையால் ஓங்கி குத்துகள் விடுவானோ அவையெல்லாம் அச்சு பிசகாமல் அப்படியே வெற்றிவிழாவில் இடம்பெற்றிருக்கும்.

கமாண்டோவில் சண்டையின் இறுதியில் வில்லன் துப்பாக்கி எடுத்து சுட முயல, அர்னால்ட், பைப்பை உடைத்து வில்லனை நோக்கி எறிவார். அது அவன் வயிற்றில் செருகும். பைப் வழியாக புகை வழிந்தோடும். வெற்றிவிழாவில் சலீம் கௌஸ் துப்பாக்கி எடுக்க, கமல் கமாண்டோ போலவே பைப்பை உடைத்து எறிவார். அது வயிற்றில் பாயும். பைப்பிலிருந்து புகை வெளியேறும்.

ஹாலிவுட் படத்தின் கதையை, காட்சியை, சண்டையை தமிழில் காப்பியடிப்பது ஒன்றும் ஆச்சரியமோ புதுசோ இல்லை.

ஆனால், ஒரு படத்தின் காட்சியை மூன்று முன்னணி நடிகர்களின் படத்தில் காப்பியடித்து வைத்திருப்பது எப்போதாவது அபூர்வமாக நடக்கக் கூடியது.

Published by:Musthak
First published:

Tags: Kollywood