விஜய் சேதுபதியை முரளிதரனாக நடிக்கக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை - ராதிகா சரத்குமார்

விஜய் சேதுபதியுடன் ராதிகா

விஜய் சேதுபதியை முரளிதரனாக நடிக்கக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
இலங்கையின் முன்னணி கிரிக்கெட் வீரராக அறியப்படுபவர் முத்தையா முரளிதரன். 133 டெஸ்டுகள், 350 ஒன் டே மேட்ச், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தற்போது அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், திரையுலகினர் உள்ளிட்டோர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் #ShameonVijaySethupathi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்த விவகாரம் பேசு பொருளானதை அடுத்து ‘800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக விளக்கமளித்தது. அதில், “'800' திரைப்படம்‌ முழுக்க ஒரு கிரிக்கெட்‌ வீரரின்‌ வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில்‌ எந்த வித அரசியலும்‌ கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்த ராதிகா சரத்குமார், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் சன்ரைஸர்ஸ் அணியில் முத்தையா முரளிதரன் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். அந்த அணியின் உரிமையாளர் தமிழர். அதை ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார் ராதிகா.

விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருப்பது குறித்து ராதிகா சரத்குமாரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
“நடிகர்கள் கோட்சே கதாபாத்திரம் ஏற்று நடிப்பதற்கும் அவர்களுக்கு உரிமை உள்ளது. நடிகர்களை நடிக்கக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. இந்த திரைப்படத்தில் அரசியல் இல்லை என படக்குழு தெரிவித்த பின்னரும் விஜய்சேதுபதி படத்தில் நடிக்க கூடாது என கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. முத்தையா முரளிதரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தற்பொழுது ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த இரண்டு அணியின் உரிமையாளர்களும் தமிழர்களே. இதன் காரணமாக இந்த அணிகளின் உரிமையாளர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் என்று குறிப்பிடுகிறார்களா?” என்றார். மேலும் இந்த விவகாரத்தில் தான் அரசியல் பேச விரும்பவில்லை என்றும் ராதிகா சரத்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சன் ரைஸர்ஸ் குறித்து ட்வீட் செய்ததற்கு விளக்கமளித்திருக்கும் ராதிகா, “என்னுடைய ட்வீட்டின் நோக்கம் சர்ச்சையை உருவாக்குவது அல்ல. திரைத்துறையினருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதுதான். அதனால் தான் நடுநிலைமையுடன் தொழில் ரீதியாக அணுகுவதில் சான்றாக உள்ள சன் ரைஸ்ர்ஸ் அணியை உதாரணம் காட்டினேன். சன் ரைஸர்ஸ், சன் டிவியின் உரிமையாளர்களுக்கு அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு ஆகியவற்றை தொழில்ரீதியாக அணுகியுள்ளார்கள்” என்றும் அடுத்தடுத்த ட்வீட்டுகளில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: