Queen of the South - போதை சாம்ராஜ்யத்தின் மகாராணி...!

குயின் ஆஃப் தி சௌத்

குயின் ஆஃப் தி சௌத் இதுவரை ஐந்து சீஸன்கள் வெளியாகியுள்ளது. முதல் நான்கு சீஸனில் தலா 13 எபிசோடுகள். ஐந்தாவதில் 10 எபிசோடுகள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெட்பிளிக்ஸில் தினம் நான்கு வெப் தொடர்கள் வெளியாகின்றன. அதில் மூன்று லத்தீன் அமெரிக்க நாடுகளின் போதைப் பொருள் கடத்தலை பின்புலமாகக் கொண்டவை. மீதம் ஒன்று மர்டர் மிஸ்ட்ரி. 

ஓடிடி தளத்தில் நூற்றுக்கணக்கில் இருக்கும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வெப் தொடர்களில் நார்கோஸ், நார்கோஸ் மெக்சிகோ, எல் சாப்போ போன்ற நாலைந்தைப் பார்த்தாலே மொத்த வெப் தொடர்களின் போக்கு எப்படியிருக்கும் என்பதை கணித்துவிடலாம். இவற்றிலிருந்து மாறுபட்டது பிரேக்கிங் பேட். இது பெருமளவு வட அமெரிக்காவை மையப்படுத்தியது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தென்னமெரிக்கா பின்புலத்தில் எடுக்கப்படும் ட்ரக் கார்டல் படங்களுக்கென்று சில குணாம்சங்கள் உண்டு. காட்சிகள் ராவாக இருக்கும். எதிரியின் ட்ரக் கார்டலை பழிவாங்க, அவர்கள் ஏரியாவில் உள்ள அப்பாவிகளைக்கூட சுட்டுத்தள்ளுவார்கள். அங்கிருக்கும் ஒரே விதி, டானை ஏமாற்றக் கூடாது. ஏமாற்றினால் மரணம் நிச்சயம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஊழல் அதிகம். பணம் கொடுத்து ராணுவத்தையே சரிகட்டிவிடலாம். பிறகு அவர்களே  போதைப்பொருள் விற்றுத் தருவார்கள்.அதனால், புத்திசாலித்தனமான நகர்வுகள் அவர்களிடம் குறைவு. எதையும் செய்ய முடியும் என்ற அபிரிதமான துணிச்சலில் அவர்கள் நடத்தும் சாகஸங்களே அவர்களின் திறமை, புத்திசாலித்தனம் எல்லாம். வட அமெரிக்காவில் அப்படியல்ல. ஊழல் ஒரு கட்டம்வரையே செல்லுபடியாகும். போதைப் பொருளை தயாரிக்க, கடத்த, விற்பனை செய்ய மூளையை கசக்க வேண்டும். அவர்களின் நீக்கங்கள் யூகிக்க முடியாத அளவுக்கு ஆச்சரியங்களை கொண்டிருக்கும். பிரேக்கிங் பேட் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

Also read... பாய்காட் ராதிகா ஆப்தே ஏன் ட்ரெண்டாகிறது?

இந்த இருவேறு உலகங்களை இணைக்கிற ஒரு வெப் தொடர் குயின் ஆஃப் தி சௌத். லத்தீன் அமெரிக்க நாடுகளும், வட அமெரிக்காவும் சம அளவில் இதில் வரும். மெக்சிகோவைச் சேர்ந்த தெரேஸா மென்டோசா சின்ன அளவில் மணி லாண்ட்ரிங் செய்பவள். அவளது காதலன் டான் எபிஃபானியோவின் ட்ரக் கார்டலில் வேலை பார்ப்பவன். ஒரு சின்னதவறு நடந்துவிட தெரேஸாவின் காதலனை கொன்றுவிட்டதாக தகவல் கிடைக்கிறது. தெரேஸாவின் உயிர்த்தோழியின் கணவரும் கொல்லப்படுகிறார். தெரேஸா அவளது காதலன் கொடுத்த, ரகசியம் அடங்கிய டைரியுடன் தப்பிக்கிறாள். டைரி ஓரிடத்தில் மாட்டிக் கொள்ள, அவள் மட்டும் டெக்சாஸ் செல்கிறாள். அங்கு போதைப் பொருள் கடத்தலில் இருக்கும் கமிலாவால் காப்பாற்றப்படுகிறாள்.கமிலா எபிஃபானியோவின் மனைவி. கணவர் தெரேஸாவை எதற்காகவோ தேடுகிறார் என்பதை அறிந்தும் அவரிடம் தெரேஸா தன்னிடம் இருப்பதை மறைக்கிறாள். கணவன் இல்லாமல் தனி போதை சாம்ராஜ்யத்தை நடத்த நினைக்கிறாள் கமிலா. கணவனுக்கு அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இந்த குழப்பங்களுக்கு நடுவில் தெரேஸா எப்படி போதைப் பொருள் சாம்ராஜ்யத்தின் டான் ஆகிறாள் என்பதே இந்த வெப் தொடரின் கதைLa Reina del Sur என்ற ஸ்பானிஷ் வெப் தொடரை தழுவி அமெரிக்காவில் எடுக்கப்பட்ட வெப் தொடர் இது. ஸ்பானிஷ் தொடரும்கூட, அதே பெயரில் அமைந்த நாவலின் தழுவல்தான். தென்னமெரிக்காவின் ராவான தன்மையும், வட அமெரிக்காவின் ஸ்லீக்கான படமாக்கலும் இணைந்த நல்ல காம்போ இந்தத் தொடர். யூகிக்கக் கூடிய பல காட்சிகள் இருந்தாலும் போரடிக்காது. பொலிவியாவுக்கு தெரேஸா மேற்கொள்ளும் பயணமும், அங்கு சந்திக்கும் எல் சான்டோ என்ற ஸ்பிரிச்சுவல் டானும் வித்தியாசமான அனுபவம். ஒருகாலத்தில் கொலை செய்ய துரத்தியவனே, தெரேஸாவின் பாடிகார்டாக மாறுவது போன்ற நிறைய சம்பவங்கள் இந்தத் தொடரில் உண்டு. டான் எபிஃபானியோ 

கவர்னர் ஆவது, அந்த அதிகாரத்தையும், ராணுவத்தையும் வைத்து அனைவரையும் அடக்கலாம் என்று நினைப்பது, அதற்கு மாறாக ராணுவ கேப்டன் அவரை அடக்கியாள்வது என அதிகாரம் நிமிடத்துக்கு நிமிடம் கைமாறும் தருணங்கள் சுவாரஸியமிக்கவைதெரேஸா மென்டோசாவாக ஆலிஸ் ப்ரகா நடித்துள்ளார். உணர்ச்சிகளை வெளிக்காட்டாத மெல்லிய உதடுகளும், முகமும் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குப் பிடித்துப் போகிறது. ஆனால், மிரட்டுகிறவர் கமிலாவாக வரும் வெரோனிகா ஃபால்கன். உடல்மொழி, பார்வை என சகலத்திலும் அதிகாரத்தின் திமிரை பிரதிபலிக்கும் நடிப்பு.  குயின் ஆஃப் தி சௌத் இதுவரை ஐந்து சீஸன்கள் வெளியாகியுள்ளது. முதல் நான்கு சீஸனில் தலா 13 எபிசோடுகள். ஐந்தாவதில் 10 எபிசோடுகள். தெரேஸாவின் உயிரை பலமுறை காப்பாற்றிய ஜேம்ஸ் ஐந்தாவது சீஸன் இறுதியில் குண்டு காயத்துடன் வேகமாக காரில் வந்து, அவர்கள் நம்மை தேடி வருகிறார்கள் என்று சொல்வதுடன் தொடர் முடிவடையும். அவன் சொல்லும் அவர்கள் யார்? அவர்களை தெரேஸா எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்...? ஆறாவது சீஸனும் ஏமாற்றாது என்ற நம்பிக்கை இருக்கிறது.
Published by:Vinothini Aandisamy
First published: