புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என்று, அப்படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த டிசம்பர் 17-ம்தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில், பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா வசூலில் புதிய உச்சத்தை தொட்டது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக புஷ்பா உள்ளதென்று தெலுங்கு திரையுலகில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் படமாக்கப்பட்டாலும், திறமையான டப்பிங் கலைஞர்களால், அந்தந்த மண்சார்ந்த படமாகவே புஷ்பா பார்க்கப்பட்டது.
அபாரமான திரைமொழியால் இயக்குனர் சுகுமார், படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டருக்கும் உயிர் கொடுத்துள்ளார். கதை, திரைக்கதை, மேக்கிங், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்து டிபார்ட்மென்ட்டும் அசத்தியதால், புஷ்பா முதல்பாகம் எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.
இதையும் படிங்க :
தனுஷ் - ஐஷ்வர்யா விவாகரத்து செய்யவில்லை... தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா பரபரப்பு பேட்டி
புஷ்பா தி ரைஸ் என பெயரிடப்பட்ட முதல் பாகத்தில் கதாநாயகன் புஷ்பராஜ், எப்படி செம்மரக்கட்டை கடத்தல் சிண்டிகேட்டின் தலைவராக ஆகிறார் என்பது குறித்து விரிவாக பேசப்பட்டது. அடுத்த பாகத்திற்கு புஷ்பா தி ரூல் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புஷ்பா படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று படத்தில் ஸ்ரீவள்ளியாகவே வாழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க :
இந்தி திரையுலகை ஆக்கிரமிக்கும் தென்னிந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை!
முதல் பாகத்தில் கடைசி 15 நிமிடங்களே வந்த பகத் பாசில், வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார். இரண்டாம் பாகத்தில் அவர் படம் முழுக்க வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதால் சுவாரசியம் அதிகரித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.