பூரி ஜெகன்நாத் தெலுங்கின் முன்னணி இயக்குனர். விஜயேந்திர பிரசாத் தெலுங்கின் முன்னணி கதாசிரியர், இயக்குனர் ராஜமௌலியின் தந்தை. பாகுபலி, தற்போது தயாராகி வரும் ஆர்ஆர்ஆர் உள்பட ராஜமௌலியின் பெரும்பாலான படங்களுக்கு அவரது தந்தையே கதாசிரியர். இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த பஜ்ரங்கி பைதான் படத்தின் கதையை எழுதியதும் இவரே. சல்மான் கான் நடிப்பில் கதையம்சத்துடன் வெளியான கடைசிப் படம் இது எனலாம். படம் 300 கோடிகளைத் தாண்டி வசூலித்தது.
இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத், இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை தன்னுடைய எதிரி என்று அறிவித்துள்ளார். இது பகையல்ல, பாராட்டு. பூரி ஜெகன்நாத்தின் புகைப்படத்தை தனது போனில் வால்பேப்பராக வைத்திருப்பதாகவும், அதைப் பார்க்கும் போதெல்லாம் அவரைவிட இன்னும் அதிகமாக செயல்பட வேண்டும் என்கிற உத்வேகத்தை எனக்கு நானே உருவாக்கிக் கொள்வேன் என்றும் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
எத்தனையோ கதாசிரியர்கள், இயக்குனர்கள் இருக்க பூரி ஜெகன்நாத்தை விஜயேந்திர பிரசாத் வியந்து குறிப்பிட்ட என்ன காரணம்?
பூரி ஜெகன்நாத் இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் பட்டறையிலிருந்து வந்தவர். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தனது படங்களுக்கான கதையை அவரே எழுதுவார். ஒரேயொரு படம் (டெம்பர்) விதிவிலக்கு. அதன் கதையை வக்கந்தம் வம்சி எழுதினார்.
பூரி ஜெகன்நாத், விஜயேந்திர பிரசாத் போன்ற வணிக சினிமாவின் கதாசிரியர்களின் முக்கிய சவால், பெரும்பான்மை மக்களை திருப்தி செய்வது. அவர்கள் எதிர்பாராத வகையில் கதையில் திருப்புமுனைகள் இருக்க வேண்டும். அட, இப்படியெல்லாம் நடக்குமா என ஆச்சரியப்படவும் வேண்டும், நிஜத்தில் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன என்று அவர்கள் யோசிக்கவும் கூடாது. சுருக்கமாகச் சொன்னால் 'மேக் பிலீவ்.' நம்ப வைப்பது.
இந்த விஷயத்தில் விஜயேந்திர பிரசாத்தைப் போல பூரிஜெகன்நாத்தும் கெட்டிக்காரர். உதாரணமாக, பிசினஸ்மேன் திரைப்படத்தில் ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு டான் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் மகேஷ்பாபு வருவார். டான் என்றால் சாதா டான் அல்ல. கார்ப்பரேட் டான். ரவுடியிசத்தை அரசியல் போல் இந்தியா முழுக்க நெட்வொர்க் ஏற்படுத்தி செயல்படுத்துவது. மும்பை சிட்டி போலீஸ் கமிஷனரின் மகளை அவர் முன்பே சவால்விட்டு லவ் பண்ணுவார். ஒரு சதவீதம் கூட யதார்த்தமாக நடக்க வாய்ப்பில்லாத கதை. ஆனால், அவர் சொன்ன விதத்தில் யதார்த்தத்தை மறந்து மக்கள் ரசித்தார்கள். அதுதான் கதாசிரியர் பூரி ஜெகன்நாத்தின் மேஜிக். படமும் ஹிட்.
லோக்கல் கதையில் இன்டர்நேஷனல் ப்ளேவரை புகுத்துவது இன்னொரு டெக்னிக். அதாவது கதை ஆந்திராவில் தொடங்கும். பிறகு மும்பை, மலேசியா, ஹாங்காங் என்று வேறு இடங்களுக்கு பயணிக்கும். பார்வையாளர்களை உறுத்தாத வகையில் இந்த பயணம் இருக்கும். உதாரணமாக, அம்மா நானா ஓ தமிழ அம்மாயி படம். அம்மா அப்பா பிறகு ஒரு தமிழ் பெண். இந்தப் படம்தான் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படமாக வந்தது. உள்ளூரில் ஆரம்பிக்கும் கதை அப்படியே வெளிநாட்டுக்கு செல்லும்.
எந்த மொழியிலும் ரீமேக் செய்யும் வகையில் கதைகளை உருவாக்குவது. இது ஒரு கதாசிரியருக்கு முக்கியம். பூரி ஜெகன்நாத்தின் முதல் படம் பத்ரி இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2001-ல் வெளியான இட்லு ஸ்ரவானி சுப்பிரமணியம் தமிழில் தவம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 2002-ல் கன்னடத்தில் இயக்கிய அப்பு தமிழில் சிம்பு நடிப்பில் தம் என்ற பெயரில் ரீமேக்கானது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி மற்றும் வங்க மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 2008-ல் பங்களாதேஷில் அங்கு பேசப்படும் வங்க மொழியில் ரீமேக் செய்தனர். மகேஷ்பாபு நடிப்பில், எழுதி இயக்கிய போக்கிரி தமிழில் விஜய் நடிப்பில் போக்கிரியாகவும், இந்தியில் சல்மான் கான் நடிப்பில் வான்டடாகவும் வெளிவந்தது. அவரது டெம்பர்தான் தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா, இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் சிம்பா என்ற பெயரில் வெளியாகி 100 கோடிகளை தாண்டி வசூலித்தது.
தெலுங்கில் பெரும்பாலான இயக்குனர்கள் அடுத்தவர்களின் கதையை வாங்கி படம் இயக்குகின்றனர். அல்லது பிறருடன் கூட்டணி அமைத்து கதை எழுதுகின்றனர். தானே கதை எழுதி படம் இயக்கும் சொற்பமானவர்களில் பூரி ஜெகன்நாத்தும் ஒருவர். எந்த கதையையும் பார்வையாளர்கள் நம்பும்படி எடுப்பதும், அவர்கள் எதிர்பாராத திசையில் கதையை நகர்த்துவதும், லோக்கல் கதையில், இன்டர்நேஷனல் ப்ளேவரை புகுத்துவதும், ஆக்ஷன் கதையிலும் காதல், காமெடியை சேர்ப்பதும் வணிக சினிமாவுக்கு கதை எழுதும் யாரையும் ஈர்க்கக் கூடியது.
விஜயேந்திர பிரசாத் பூரி ஜெகன்நாத்தை தனது எதிரியாக நினைப்பதில் ஆச்சரியமில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Telugu movie