புதுச்சேரியில் முதல்முறையாக ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 குழந்தைகளுக்கு சிறப்பு காட்சியை அஜித் ரசிகர்கள் இன்று ஏற்பாடு செய்தனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. அந்தப் படத்தை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர்.
புதுச்சேரியில் அஜீத் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜாலி ஹோமில் தங்கி படிக்கும் 150 நரிக்குறவர் இன குழந்தைகளுக்கு நகரிலுள்ள ஷண்முகா திரையரங்கில், GOD'S CHILDREN" என்ற பெயரில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை காட்சியை பார்த்தனர்.
இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அஜித் ரசிகரான மோகன் இதுகுறித்து பேசும்போது, "வலிமை பட அறிமுக நிகழ்வை ஜாலி ஹோமில் தங்கிபடித்த குழந்தைகளுக்கு முன்பாக நடத்தினோம். அப்போது அக்குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் தர்ஷா என்ற அஜித் ரசிகர் இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.

வலிமை திரையரங்கில் சிறுவர்கள்
திரையரங்கிலும் பேசினோம். மொத்தம் 18,000 ரூபாய் செலவானது. அக்குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்றோம்" என்று குறிப்பிட்டனர்.
3 நாட்களில் ரூ. 100 கோடி... வசூல் மழையில் வலிமை
திரைப்படத்தை முழுமையாக ரசித்து பார்த்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அஜித்தின் பைக் சாகச காட்சியை கைத்தட்டி ரசித்து பார்த்ததாக கூறினார்கள். 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கிற்கு குழந்தைகள் வந்துள்ளனர். இதில் பலர் இப்போது தான் திரையரங்கையே பார்ப்பதாக கூறி கண் கலங்கினார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.