பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார்; கடும் நடவடிக்கை எடுக்க திரைத்துறையினர் வலியுறுத்தல்!

பி.எஸ்.பி.பி. பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் - கடும் நடவடிக்கை எடுக்க திரைத்துறையினர் வலியுறுத்தல்!

புகார் கொடுக்க முன்வரும் பெற்றோர்கள் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளும் படியும், அவர்களுக்கு பெரும் வழக்கறிஞர்களிடம் சட்ட உதவி கிடைக்க எற்பாடு செய்வதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

  சென்னை கே.கே.நகரிலுள்ள பிஎஸ்பிபி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு முன்னாள் மாணவர்கள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த புகாரில், ஆசிரியர் ராஜாகோபாலன், அநாகரீகமாக பேசுவது, ஆன்லைன் வகுப்புக்கு அரைகுறை ஆடையுடன் வருவது, மாணவிகளின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தவறான நோக்கத்துடன் குறுஞ்செய்திகள் அனுப்புவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதேபோல், வகுப்பறையில் பாடமெடுக்கும்போதும், மாணவிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கும் வகையில், அவர்களின் தோற்றத்தைப் பற்றி கருத்து தெரிவித்தல், தவறான நோக்கத்துடன் மாணவிகளைத் தொடுதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்ததாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அந்தவகையில், கோலிவுட்டில், பாடகி சின்மயி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகை லட்சுமிபிரியா ஆகியோர் இந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்துள்ளனர்.

  இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பிஎஸ்பிபி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வழக்குத் தொடர முன்வர வேண்டும் என நான் விரும்புகிறேன். கவுரவம் மற்றும் குடும்ப மரியாதை ஆகியவற்றிற்கு பயந்து தங்கள் குழந்தைகளை வாய் மூடி இருக்க சொல்லும் எத்தனை பேரால் இதைச் செய்ய முடியும் என்று தெரியவில்லை. இதைத்தான், குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயேகத்திற்காக ராஜகோபாலன், ரமேஷ் பிரபா போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், புகார் கொடுக்க முன்வரும் பெற்றோர்கள் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளும் படியும், அவர்களுக்கு பெரும் வழக்கறிஞர்களிடம் சட்ட உதவி கிடைக்க எற்பாடு செய்வதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து கர்ணன் படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த லக்ஷ்மி ப்ரியா தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கேகே நகரில் உள்ள பி.எஸ்.பி.பி. பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர். அந்த மனிதரின் வகுப்பில் படிக்கும் ஒருவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே இதனை பதிவு செய்கிறேன். அவருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதனை பதிவு செய்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பாலியல் துன்புறுத்தல்களை இயல்பாக்க முடியாது. முன்னாள் மாணவியாக பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பற்றிய  மாணவர்களின் புகார்களை பார்த்து மனம் உடைந்தது. நாம் இதனை பெரிதுப்படுத்துவதன் மூலம் இது உரிய நபரை சென்றடைந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க உதவும். தங்களுக்கு நடந்த கொடுமையை தைரியமாக பகிர்ந்த அனைத்து மாணவிகளுக்கும் எனது அன்பும், அரவணைப்பும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: