Home /News /entertainment /

ரஜினி உள்பட யாருமே உதவி செய்யவில்லை - தயாரிப்பாளர் ஜிவி தற்கொலை குறித்து பேசிய கே.டி. குஞ்சுமோன்

ரஜினி உள்பட யாருமே உதவி செய்யவில்லை - தயாரிப்பாளர் ஜிவி தற்கொலை குறித்து பேசிய கே.டி. குஞ்சுமோன்

தயாரிப்பாளர் ஜிவி

தயாரிப்பாளர் ஜிவி

ரஜினி, விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்தவர், மணிரத்னம் என்ற மிகப் பெரிய இயக்குனரின் அண்ணன் என இவ்வளவு இருந்தும் அவரை கடனில் இருந்து மீட்க முடியவில்லை என கேடி குஞ்சுமோன் குற்றம்சாட்டினார்.

  • News18
  • Last Updated :
2003 இல் பிரபல தயாரிப்பாளர் ஜிவி என்கிற ஜி.வெங்கடேஸ்வரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். கடைசி நேரத்தில் அவருக்கு மணிரத்தினம், ரஜினி உள்பட யாருமே உதவி செய்யவில்லை என்று சில தினங்கள் முன் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் குற்றம்சாட்டினார்.

இன்றைய இளைஞர்களுக்கு ஜிவி யார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் ஜிவி என்ற பெயர் திரையுலகிலும், அதற்கு வெளியேயும் மிகப் பிரபலமாக இருந்தது. இந்திய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக அவரது ஜிவி பிலிம்ஸ் இருந்தது.



ஜி.வெங்கடேஸ்வனின் தந்தை கோபால ரத்தினமும் ஒரு தயாரிப்பாளர். ஜிவியின் தம்பிதான் இயக்குனர் மணிரத்னம். சிஏ பட்டதாரியான ஜி.வி. 1986 இல் மௌன ராகம் படத்தை தயாரித்தார். தனது மனைவி சுஜாதாவின் பெயரில் சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி இந்தப் படத்தை அவர் தயாரித்தார். படம் மிகப்பெரிய வெற்றி. சுஜாதா பிலிம்ஸ் தயாரித்த அடுத்த திரைப்படம் மணிரத்தினம் இயக்கிய அக்னி நட்சத்திரம். படம் அதிரிபுதிரியாக ஓடியது. 1989 இல் மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ரீதேவி நடிப்பில் இந்தியில்



குரு திரைப்படத்தை ஜிவி தயாரித்தார். இது கமல் நடித்த காக்கி சட்டை படத்தின் இந்தி ரீமேக் ஆகும். 1990 இல் சுஜாதா பிலிம்ஸ் என்ற பெயரை ஜிவி பிலிம்ஸ் என்று மாற்றி வேடிக்கை என் வாடிக்கை படத்தை தயாரித்தார். இந்த படத்தை தயாரித்த அதே வருடம் மணிரத்தினத்தின் அஞ்சலி படத்தையும் தயாரித்தார். அதற்கு அடுத்த வருடம் ரஜினி நடித்த தளபதி. இந்த படங்களின் வரிசையை பார்த்தாலே ஜிவி பிலிம்ஸ் எப்படி ஒரு கிராஃபை வைத்திருந்தது என்பது புரியும். சாமானியமாக எந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத வெற்றிகள், கிடைக்காத திரைப்படங்கள்.



1993 இல்  மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு வரவழைத்து இரண்டு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்தது ஜிவி பிலிம்ஸ். மிகப் பிரமாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மும்பையிலும், சென்னையிலும் நிகழ்ச்சிகளை நடத்துவதாக திட்டம். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி மைக்கேல் ஜாக்சனை இந்தியாவுக்கு அழைத்து வர முடியவில்லை. இதில் மிகப்பெரிய நஷ்டத்தை ஜிவி பிலிம்ஸ் சந்தித்தது. இதற்கு அடுத்த வருடம் 1994 இல் மே மாதம் படத்தை ஜிவி பிலிம்ஸ் தயாரித்தது. படம் சுமாராகவே போனது அதை அடுத்து 1995 இல் சுஹாசினி இயக்கிய இந்திரா படத்தை தயாரித்தார். அதுவும் நஷ்டத்தைக் கொடுத்தது. அதன் பிறகு படங்கள் தயாரிப்பதை ஜிவி தவிர்த்தார்.



ஏழு வருடங்களுக்குப் பிறகு  தனது கடன்களை எல்லாம் ஓரளவு செட்டில் செய்த பின் 2002 இல் விஜய் நடித்த தமிழன் படத்தை தயாரித்தார். படம் ஓடவில்லை. நஷ்டம். அதே வருடம் வசந்த் இயக்கிய, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைப்படத்தை தயாரித்தார். அதுவும் காலை வாரியது. 2003 இல் விஜயகாந்த் நடிப்பில் பாக்யராஜ் இயக்கத்தில்

சொக்கத்தங்கம் திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படமும்  எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை. இப்படி தயாரித்த படங்கள் ஒரு பக்கம் நஷ்டத்தை ஏற்படுத்த, அவர் வாங்கி விநியோகித்த ஆளவந்தான் (2001),  பாபா (2002) திரைப்படங்களும் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தின. இருக்கிற சொத்தை விற்றும் கடனை அடைக்க முடியாத சூழலில் 2003 மே 3ஆம் தேதி ஜிவி தற்கொலை செய்து கொண்டார்.

Also read... தெலுங்கில் ரீமேக்காகும் வெங்கட்பிரபுவின் மாநாடு...!

ஜிவி பகைவன் என்ற படத்தில் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். பிரபுவின் ராஜா கையை வச்சா திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஜிவியாகவே வருவார். அவரது தற்கொலை தமிழ் திரையுலகை மட்டுமல்ல இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சினிமா என்ற கவர்ச்சி உலகத்தின் மீது விழுந்த முதல் இருண்ட திரையாக ஜிவியின் தற்கொலை அமைந்தது.  அவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீடு வரை வந்து மிரட்டியதே தற்கொலைக்கு  காரணம் என்று சொல்லப்பட்டது.

2017 இல்  நடிகர் சசிகுமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் இதேபோன்று கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். ஜிவியின் தற்கொலைக்கு காரணமானவர்களே அசோக்குமாரின் தற்கொலைக்கும் காரணம், ஜிவியின் தற்கொலையில் இருந்து தமிழ் சினிமா எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என அப்போது பேசப்பட்டது. இவ்விரு தற்கொலைக்கும் காரணமானவர்கள் இன்றும் தமிழ்சினிமாவில் பைனான்சியராக, தயாரிப்பாளராக இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

ரஜினி, விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்தவர், மணிரத்னம் என்ற மிகப் பெரிய இயக்குனரின் அண்ணன் என இவ்வளவு இருந்தும் அவரை கடனில் இருந்து மீட்க முடியவில்லை. கடைசியில் தற்கொலைதான் அவருக்கான விடுதலையை கொடுத்தது. அகலகால் வைக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஜிவியின் தற்கொலை ஓர் படிப்பினை.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay, Rajini Kanth

அடுத்த செய்தி