Theatres: திரையரங்குகள் திறப்பதில் சிக்கல் - கலக்கத்தில் மெகா பட்ஜெட் படங்கள்

திரையரங்குகள்

தமிழகத்தில் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் நேற்று 17 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  • Share this:
கொரோனா இரண்டாவது அலை எதிர்பார்த்ததைவிட விரைவில் கட்டுக்குள் வந்ததால், திரையரங்குகள் விரைவில் திறக்கும், கல்லா கட்டலாம் என காத்திருந்த மெகா பட்ஜெட் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்ததும் திரையுலகில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை ஓடிடியில் வெளியாகும் என்று சொல்லிக் கொண்டிருந்த இந்திப் படம் பெல் பாட்டத்தை திரையரங்கில் வெளியிடுவதாக அறிவித்து, ஜுலை 27 படம் திரைக்கு வரும் என தேதியும் குறித்தனர். அக்ஷய குமாரின் படம் என்பதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள், இரண்டாம் அலைக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கையில் பெல் பாட்டம் நல்ல திருவிழாவாக அமையும் என்று எதிர்பார்த்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தலைவி, சூரியவன்ஷி, சத்யமேவ ஜெயதே 2, 1983 என பல படங்கள் திரையரங்கு வெளியீட்டிற்கு வரிசையாக உள்ளன.

Thalaivi
தலைவி


அப்படியே கேரளாவுக்கு வந்தால், ஆகஸ்ட் 12 மோகன்லாலின் மெகா பட்ஜெட் படமான மராக்கர் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரையரங்கில் வெளியாகும், அதுவும் மொத்தமுள்ள 600 திரையரங்குகளில் தினசரி நான்கு காட்சிகள் வைத்து, மூன்று வாரங்களுக்கு இந்தப் படத்தை மட்டுமே ஓட்டுவோம் என தயாரிப்பாளர் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் இணைந்து ஒரு ஒப்பந்தமே போட்டனர். ஓணம் திருவிழாவும், சுதந்திரதின விடுமுறையும் சேர்ந்து கிடைப்பது தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் என இரு தரப்பினருக்குமே மெகா ஜாக்பாட். மராக்கர் வழி ஏற்படுத்தினால், அடுத்தடுத்த மலையாளப் படங்கள் திரையரங்கில் வெளியாக தடை இராது என்று நம்பினர்.

Marakkar Arabikadalinte Simham Mohanlal1
மராக்கர்


தெலுங்கை எடுத்துக் கொண்டால் ஆச்சார்யா உள்பட ஏராளமான படங்கள் திரையரங்கு வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. கேஜிஎப் - சேப்டர் 2 கன்னடப் படம் என்றாலும் தெலுங்கு, தமிழிலும் இதனை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். முதல் சேப்டர் இந்த மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற்றது முக்கியமானது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அருண் விஜய்யின் பார்டர், விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டில் வெளியாக உள்ளன. பிரபல திரையரங்கு உரிமையாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம், ஜுலை மத்தியில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசை கேட்கயிருப்பதாக கூறியுள்ளார். இந்த கணக்குகளை நேற்றைய கொரோனா தொற்று நிலவரம் அடியோடு மாற்றியது.

KGF 2
கே.ஜி.எஃப் 2


நேற்றைய கணக்குப்படி மாகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இந்திப் படங்களின் 65% திரையரங்கு வருவாய் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியை நம்பியுள்ளது. தொற்று உயர்வால் டெல்லி காய்கறி சந்தையை மூட உத்தரவிட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் தளர்த்தப்பட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் நிலுவைக்கு வந்துள்ளன. கேரளாவை எடுத்துக் கொண்டால், தினசரி பாதிப்பு தொடர்ந்து 13,000 க்கு மேல் உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் நேற்று 17 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படாத கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஒரு வாரம் முன்பு எதிர்பார்த்தது போல் இந்த மாதம் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் தெரியவில்லை. இதேநிலை நீடித்தால், திரையரங்கில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்களின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.

திரைப்படங்கள் அழுகிப்போகும் பண்டமல்ல. அதேநேரம், பல கோடிகள் அதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் மாதாமாதம் வட்டி கட்டியாக வேண்டும். கடன் சுமை நாளுக்குநாள் தயாரிப்பாளரை நெருக்கும். அதிலிருந்து விடுபட தற்போது இருக்கும் ஒரேவழி ஓடிடி. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஓடிடி வெளியீட்டிற்கு மெகா பட்ஜெட் படங்கள் தயாராகியே ஆக வேண்டும். தொற்று குறையாவிடில் ஓடிடிக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: