இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் அந்தாதுன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆயுஷ்மன் குரானா, ராதிகா ஆப்தே, தபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூலை வாரிக்குவித்த இத்திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற முன்னணி நடிகர்கள் பலர் முயன்ற நிலையில், நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கினார். இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி தமிழ் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், ஜெ.ஜெ.பெட்ரிக் இத்திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் சந்தோஷ் சிவன் இசையமைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் ஜனவரி மாதத்தில் ‘அந்தகன்’என்று படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு விரைவில் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மார்ச் 10-ம் தேதி ஜே.ஜே.பெட்ரிக் மாற்றப்பட்டு பிரசாந்தின் தந்தையே இயக்குவார் என்றும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் படக்குழு தெரிவித்தது. பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தப் படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் இணைந்துள்ளார். இவர் அந்தாதுன் திரைப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, தமிழ் ஆகிய படங்களில் நடித்திருந்த பிரசாந்த் - சிம்ரன் ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன் படத்தில் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.