ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

OTT: நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் பிரபுதேவா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள்!

OTT: நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் பிரபுதேவா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் படங்கள்!

திட்டம் இரண்டு - பொன்மாணிக்கவேல்

திட்டம் இரண்டு - பொன்மாணிக்கவேல்

கொரோனா, திரையரங்குகளுக்கு ஓடிடி மூலம் கடும் சவாலை உருவாக்கியிருக்கிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

திரையரங்கு திறப்பது மேலும் பல வாரங்கள் நீட்டிக்கப்படும் சூழல் நிலவுவதால் பெரும் எண்ணிக்கையிலான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. ஓடிடியில் வெளியாகும் தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதேநிலைதான் பிற மொழியிலும். இந்த வருடம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களில் உறுதி செய்யப்பட்டவை அரை டஜனுக்கும் மேலிருக்கும்.

பொன் மாணிக்கவேல்

பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் பொன் மாணிக்கவேல் 2020 பிப்ரவரியில் வெளியாகும் என்று அறிவித்தனர். பிறகு மார்ச்சுக்கு வெளியீடு தள்ளிப்போனது. ஆனால், இன்றுவரை படம் வெளியாகவில்லை. முகில் செல்லப்பன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார். நேமிசந்த் ஜெபக், ஹிதேஷ் ஜெபக் தயாரிப்பு. பல வருடங்களாக பெட்டியில் இருக்கும் இந்தப் படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் வெளியிடுகிறது.

நெற்றிக்கண்

நயன்தாரா கண் தெரியாதவராக நடித்திருக்கும் வெற்றிக்கண் கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல். சஸ்பென்ஸ் த்ரில்லராக நெற்றிக்கண் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். டிஸ்னி + ஹாட் ஸ்டார் இதனை வெளியிடுகிறது. மிலிந்த் ராவ் படத்தை இயக்கியுள்ளார்.

திட்டம் இரண்டு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் த்ரில்லர் திரைப்படம் திட்டம் இரண்டு. நாயகி மையப் படமான இது சோனிலிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. சிக்சர் என்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், மினி ஸ்டுடியோஸ் வினோத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் படத்தை இயக்கியுள்ளார். பிளான் பி என்ற பெயரில் இதனை தெலுங்கிலும் வெளியிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாக்டர்

நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகுமா இல்லை திரையரங்கா என்ற இழுபறி நீடித்தது. தற்போது ஓடிடி வெளியீடு என்பதை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர். டிஸ்னி + ஹாட் ஸ்டார் இதனை வெளியிடுகிறது. ஜகமே தந்திரத்துக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் பெரிய திரைப்படமாக சிவகார்த்திகேயனின் டாக்டர் இருக்கும்.

கடைசி விவசாயி

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு நடித்திருக்கும் படம் கடைசி விவசாயி. விவசாயிகளின் துயரத்தை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். அதனால், விஜய் சேதுபதியைவிட விவசாயியாக வரும் பெரியவருக்கே படத்தில் முக்கியமான ரோல் தரப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான கடைசி விவசாயியை சோனிலிவ் வெளியிடுகிறது.

வாழ்

அருவி படத்தை இயக்கிய அருண் பிரபுவின் இரண்டாவது படம் வாழ். சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் சோனிலிவ்வில் நேரடியாக ஒளிபரப்பாகிறது

நரகாசூரன்

கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன், கௌதமின் தயாரிப்பு காரணமாக பிரச்சனையில் சிக்கி பல வருடங்களாக மீள முடியாமல் உள்ளது. படத்தை கௌதம் கைமாற்றிவிட்ட நிலையில், சோனிலிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடுகின்றனர். அரவிந்த்சாமி, இந்திரஜித், ஸ்ரேயா முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர்.

சார்பட்டா பரம்பரை

ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை திரையரங்கில் வெளியாவதற்கான அனைத்துத் தகுதிகளுடன் தயாரானது. ஆர்யா, பசுபதி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகள் திறப்பது தள்ளிப் போவதால் வேறு வழியின்றி ஓடிடிக்கு படத்தை தந்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் சார்பட்டா பரம்பரை வெளியாகிறது.

இடியட்

தில்லுக்கு துட்டு ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்திருக்கும் ஹாரர், காமெடி திரைப்படம் இடியட். பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படமும் ஓடிடியில் வெளியாகிறது. டிஸ்னி + ஹாட் ஸ்டார் இடியட்டை வாங்கியுள்ளது.

சுமோ

மிர்ச்சி சிவா நடித்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் சுமோ. ஹாசிமின் இயக்கியிருக்கும் இப்படம் 2019 நவம்பர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது, இன்னும் வெளியாகவில்லை. மிர்ச்சி சிவாவுடன் ஜப்பானை சேர்ந்த சுமோ வீரர் ஒருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ப்ரியா ஆனந்தும், யோகி பாபுவும் உடன் நடித்துள்ளனர். இந்தப் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

ஓடிடி வெளியீடு உறுதி செய்யப்பட்ட தமிழ்ப் படங்கள் இவை தவிர இரண்டு டஜனுக்கும் மேல் படங்கள் பேச்சுவார்த்தையில் உள்ளன.

இந்தியைப் பொறுத்தவரை விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் சேர்ஷா திரைப்படம், ப்ரியதர்ஷனின் ஹங்கம்மா 2, சையிப் அலிகானின் பூட் போலீஸ், காலர் பாம் உள்பட ஏராளமான திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன. மலையாளத்தில் மாலிக், அனுகிரகதீரன் ஆண்டனி, மஞ்சு வாரியரின் சதுர் முகம் ஆகியவை நேரடியாக ஓடிடியில் வெளியாகின்றன. மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்கள் இயக்கியிருக்கும் குறும்படங்களின் தொகுப்பான நவரசா ஆகஸ்ட் 9 நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

கொரோனா, திரையரங்குகளுக்கு ஓடிடி மூலம் கடும் சவாலை உருவாக்கியிருக்கிறது. மாஸ் நடிகர்களின் படங்களால் மட்டுமே திரையரங்குகளை மீட்க முடியும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aishwarya rajesh, Nayanthara, Prabhu deva