பிரபாஸின் பான் - இந்தியா திரைப்படமான ராதே ஷ்யாம் பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகியுள்ளது.
பிரபாஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ராதே ஷ்யாம். காதல் கதையான இதனை டைட்டானிக் லெவலில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டு அனைத்து மொழிகளிலும் புரமோஷனை முடுக்கிவிட்டனர். படம் பொங்கலை முன்னிட்டு (தெலுங்கு மாநிலங்களுக்கு சங்கராந்தி) ஜனவரி 14 வெளியாகும் என முதலில் அறிவித்த படமும் இதுதான்.
ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இரவு நேர ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் படங்களின் வசூலை நேரடியாகப் பாதிப்பவை.
இதனால் டிசம்பர் 31 வெளியாக வேண்டிய இந்திப் படம் ஜெர்சி, ஜனவரி 7 வெளியாக வேண்டிய ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், ஜனவரி 21 வெளியாக வேண்டிய அக்ஷய் குமாரின் பிருத்விராஜ் என பல முக்கிய படங்கள் மறுதேதி குறிப்பிடாமல் தங்களின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளன.
பிடிவாதமாக பொங்கலுக்கு வந்தே தீருவோம் என்றிருந்த ராதே ஷ்யாம் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். ராதே ஷ்யாமைத் தொடர்ந்து வலிமை படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்படலாம் என கருதப்படுகிறது.
2021 ஆரம்பத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து படங்கள் வெளியாக ஆரம்பித்தன. பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அதற்கு நேர்மாறாக 2022 இல் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் தங்களின் வெளியீட்டை தள்ளி வைக்கின்றன. இந்திய சினிமாவுக்கு மற்றுமோர் மோசமான ஆண்டு.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.