முக்கியமான வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அஜித், விஜய், சூர்யா!

முக்கியமான வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அஜித், விஜய், சூர்யா!
உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • News18
  • Last Updated: March 7, 2019, 6:10 PM IST
  • Share this:
போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த கோரிய வழக்கில், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவில் மக்கள் தொகை தற்போது 130 கோடியாக அதிகரித்துள்ளது. நாட்டின்  சுகாதாரத்திற்காக மத்திய, மாநில அரசுகள் கோடி கணக்கில் பணம் ஒதுக்குகிறது. ஆனால் இந்தியாவில் போலியோ நோய் தாக்குதல் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

குழந்தை வயதில் ஒரு முறை போலியோ நோய் தாக்கிவிட்டால், மரணம் அடையும் வரை அவர்களால் அந்த நோயில் இருந்த மீளமுடியாது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் 1995-ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வருடத்திற்கு குறைந்தது 3 முறை போலியோ சொட்டு மருந்து 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுவது வழக்கம்.
வருடத்திற்கு 3 முறை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டும், இன்னும் இந்தியா போலியோ நோய் பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்படவில்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போலியோ நோய் பரவுகிறது. இந்தியாவில் தற்போது போலியோ சொட்டு மருந்து வழங்குவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முறையாக நடத்த வேண்டும். மேலும் வரும் காலங்களில் இந்தியா முழுவதும் முறையாக மற்றும் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை நடத்த உத்தரவிட வேண்டும் " என்று கூறியிருந்தார்.இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதாகவும், வரும் 10- ம் தேதி கூட சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரர் , போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது தொடர்பாக போதுமான விழிப்புணர்வு முகாமோ விளம்பரங்களோ செய்யப்படவில்லை என்றார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், “நடிகர்கள் மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள். அவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுக்கும் போது எளிதாக மக்களை சென்றடையும். ஆகவே, தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டனர். தொடர்ந்து செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து தொடர்பான விழிப்புணர்வை பிரபலப்படுத்தலாம்” என்று கூறி வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

தேர்தல் ஆணைய கண்காணிப்பில் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் - வீடியோ

First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்