நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலீசார் வழக்கு பதிவு 

வருண் மணியன்

த்ரிஷாவின் முன்னாள் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் என்ற படங்களின் தயாரிப்பாளர் வருண்மணியன். சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிளாட்டுகளுக்கான முழுத்தொகை தராததால், தங்களிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனவே வெங்கடேசன் முன் தொகையாக கொடுத்த  ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வருண் மணியன் கொரோனா காலம் என்பதால் திருப்பி தர காலதாமதமாக்கியதாக தெரிவித்துள்ளார். பின் அலுவலகம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு மிரட்டியதாக வெங்கடேசன் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வருண் மணியன் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்துள்ளார். அப்போது முறையாக பதிலளிக்காததால், உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், வருண் மணியன் அலுவலகம் சென்று விசாரணை செய்துள்ளார். ஆனால் அலுவலகத்தில் உதவி ஆய்வாளரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.

மேலும் வருண் மணியனை தொலைபேசியில் அழைத்து பேசும் போது, மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதனையடுத்து  வருண் மணியன் மிரட்டிய செல்போன் ஆடியோ பதிவை அடிப்படையாக கொண்டு, கிண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த வருண் மணியன் காவல் நிலையம் வந்து, மிரட்டும் வகையிலும் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து வெங்கடேசன் அளித்த புகாரில் மட்டும் 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 506(1) மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலிட அதிகாரிகள் தலையீட்டால் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வருண் மணியன் தரப்பில் கேட்டபோது, இரண்டு பிளாட்டுகளுக்கு முன் தொகை அளித்த வெங்கடேசன், திடீரென பிளாட்டுகள் வேண்டாம் என ரத்து செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் வேறொருவருக்கு பிளாட்டுகள் விற்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் பிளாட்டுகள் முன்பதிவு செய்து, ரத்து செய்தால் கொடுத்த பணத்தை திருப்பி தர 3 மாதம் அவகாசம் உள்ளதாகவும் தெரிவுத்துள்ளார். அதன்படி நவம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே வெங்கடேசன் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுதொடர்பாக கிண்டி போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017 -ம் ஆண்டு நடிகரை தாக்கியதாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருண் மணியன் மீது புகார் அளிக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டில் வருண் மணியனை அலுவலகத்தில்  இரண்டு பேர் ஸ்குரு டிரைவாரால் தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு வருண் மணியன் மற்றும் நடிகை த்ரிஷாவும், காதலித்து நிச்சயம் வரை சென்றது. பின் காதல் முறிவு காரணமாக திருமணம் ரத்தானதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: