ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘பாடல் எழுதுவதை விட்டு விடலாமா என்று எண்ணினேன்…’ – அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் தாமரை

‘பாடல் எழுதுவதை விட்டு விடலாமா என்று எண்ணினேன்…’ – அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை

கவிஞர் தாமரை

‘25 ஆண்டுகளுக்கு முன், துறையை சட்டென்று மாற்றி திரைப்பாடலைத் தேர்ந்தெடுத்த போது திகிலாகத்தான் இருந்தது. இப்போது சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனென்று புரிகிறது’

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    நெருக்கடி ஏற்பட்டபோது பாடல் எழுதுவதை  விட்டு விடலாமா என எண்ணியதாக கவிஞர் தாமரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

    கடந்த 10-ஆம்தேதி அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள், திரைத்துறையினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து, கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

    10.11.22 அன்று என் பிறந்தநாளுக்காக சுற்றமும் நட்பும் இரசிகக் கண்மணிகளும் வாழ்த்துமழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். மழைக்காக விடுமுறைக்கு மேல் விடுமுறை (எனக்கல்ல, சமரனுக்கு)...

    தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள், சமூகவூடகங்கள், தொலைக்காட்சி என வாழ்த்துவதற்கான அத்தனை வாய்ப்பிலும் வாழ்த்தித் தள்ளி விட்டார்கள்.

    ஒரு திரைப்படப் பெருவலத்திற்கு (பிரபலம்) வாழ்த்துமழை வியப்பில்லை என்றாலும் அதிகம் முகம்காட்டாத, பாடல்கள் வாயிலாகவே அறியப்பட்ட எனக்கும் இவ்வளவு அன்பா ?? ...

    ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கவுள்ள புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது…

    யோசித்துப் பார்த்தால், திரைப்பெருவலம் என்பதைத் தாண்டி, முகமே தெரியாவிட்டாலும் என் பாடல்களினால் ஓர் ஆழ்ந்த அண்மையை உணர்ந்து வாழ்த்தியவர்களே ஏராளம் ! .

    25 ஆண்டுகளுக்கு முன்பு, துறையை சட்டென்று மாற்றி திரைப்பாடலைத் தேர்ந்தெடுத்த போது திகிலாகத்தான் இருந்தது. இப்போது திரும்பிப் பார்த்தால், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனென்று புரிகிறது.

    துறையில் நான் சந்தித்த கூர்நெருக்கடிகளின்போது விட்டுவிட்டுப் போய்விடலாமா என்கிற சிந்தனை வந்ததுண்டு. அப்போதெல்லாம் என்னையே தேற்றிக் கொள்ள, 'நானும் விலகி விட்டால் அப்புறம் யார்தான் இந்தவகைப் பாடல்களை எழுதுவதாம் ? எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் !!!' என்று சமாதானம் சொல்லி இருத்திக் கொள்வேன்

    பொன்னியின் செல்வன் 2 படத்துக்காக மணிரத்னம் எடுத்த முக்கிய முடிவு!

    ... இன்றைக்கு, உள்ளபடிக்கே என் பாடல்களுக்காக எத்தனையோ பேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று உணரும் போது 'ஒருபோதும் இவர்களை ஏமாற்றலாகாது' என்கிற எண்ணம் மேலோங்குகிறது.

    பிறந்ததிலிருந்து ஐம்பதாண்டுகள் வரை வாழ்வை நோக்கிய பயணம். விளையாட்டு படிப்பு திட்டங்கள் திருமணம் குழந்தை குடும்பம் வீடு வாகனம் என அனைத்தும் மேல்நோக்கிய பயணமே ! ஐம்பதைத் தாண்டிய பிறகு அது மரணத்தை நோக்கிய பயணமாக மாறுகிறது.

    எல்லாம் ஆடி முடித்து அனுபவக் கொள்முதல் செய்தபிறகு ஒவ்வொரு நாளும் அருளப்பட்ட நாளே எனத் தோன்றி விடும். இனி எத்தனை நாள் இருக்கப் போகிறோமோ, அதற்குள் இன்னின்னது செய்து விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும்.

    எனக்குச் சில ஆண்டுகளாகவே இந்தச் சிந்தனை வந்து விட்டது. ஏதேனும் உருப்படியாகச் செய்து விட்டுப் போக வேண்டும். 30 ஆண்டுகள் திரும்பிப் பாராத ஓட்டத்தில் நான் முதன்மையாக இழந்தது புத்தக வாசிப்பைத்தான் ! விட்டதைப் பிடிக்க வேண்டும், ஏராளமாகப் படிக்க வேண்டும், படித்ததைப் பயனுறும் வகையில் எல்லோருக்கும் பகிர வேண்டும் என்கிற ஆவல் ததும்புகிறது.

    இவ்வாறு தாமரை தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood