எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர் புலமைப்பித்தனின் திரைப்பயணம்..

புலமைப்பித்தன்

எம்ஜிஆர் ஆட்சி அமைத்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசவைக் கவிஞராக புலமைப்பித்தன் நியமிக்கப்பட்டு சில ஆண்டுகள் பணி செய்தார்

 • Share this:
  தமிழக அரசின் அரசவைக் கவிஞராக பதவிவகித்த புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 85. அவரது திரைப் பயணம் குறித்து ஒரு பார்வை.

  1935ஆம் ஆண்டு ராமசாமி என்ற இயற்பெயருடன் கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைப்பித்தன், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டதன் காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்து கவிதைகள் இயற்றி வந்தார். 1968ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் குடியிருந்த கோயில் திரைப்படத்திற்காக நான் யார்.. நீ யார்.. என்ற பாடலை எழுதியதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான புலமைப்பித்தன் எம்ஜிஆரின் அன்பைப் பெற்றார். பின்னர் அதே ஆண்டு வெளியான அடிமைப்பெண் திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக அறிமுகமான ஆயிரம் நிலவே வா பாடல் எழுதும் வாய்ப்பையும் பெற்ற புலமைப்பித்தன் அடுத்தடுத்து எம்ஜிஆர் படங்களில் பாடல் எழுதும் பாடலாசிரியராக உருவெடுத்தார்.

  எம்ஜிஆரின் அடுத்தடுத்த திரைப்படங்களான குமரிக்கோட்டம், நினைத்ததை முடிப்பவன் என புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் வரிசையாக ஹிட்டடிக்க எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞர்களில் ஒருவராக புலமைப்பித்தன் மாறினர்.எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்த், கமல் ஹாசன்,பாக்கியராஜ் என அடுத்த தலைமுறை நடிகர்களுக்கும் நாயகன, தங்க மகன், இது நம்ம ஆளு உள்ளிட்ட திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களை எழுதினார்.

  எம்ஜிஆர் ஆட்சி அமைத்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசவைக் கவிஞராக புலமைப்பித்தன் நியமிக்கப்பட்டு சில ஆண்டுகள் பணி செய்தார். புலமைப்பித்தன் எழுதிய பூலோகமே பலி பீடம் புத்தகம் இன்றளவும் இலக்கிய வட்டாரத்தில் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக விளங்குகிறது. தொண்ணூற்றி ஒன்பது திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற வளைகாப்பு பாடலான தாய்மை என தூய செந்தமிழ் என்ற தாலாட்டுப் பாடலை  எழுதி இருந்தார்.

  வயது மூப்பு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புலமைப்பித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்படவுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: